காற்றில் அலைந்திடுமோ கௌரவப் பட்டங்கள்…??? வீடியோ
காற்றில் அலைந்திடுமோ கௌரவப் பட்டங்கள்…??? திரைப்பட பாடலாசிரியர், எழுத்திலே “கருவாச்சி காவியம்” படைத்திட்ட கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, மதுரை தமிழிசைச் சங்கம் ஆனது “முத்தமிழ்ப் பேரறிஞர்” என்கிற பட்டம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
உடனே இதற்கு எதிர்வினையாக சுபவீ அவர்கள், “தமிழ்கூறும் நல்லுலகில் ஏற்கனவே “முத்தமிழ் அறிஞர்” என்கிற பட்டம் கலைஞர் அவர்களுக்கு வழங்கி வரப்பட்டுள்ளது. இந்நிலையில் “முத்தமிழ்ப் பேரறிஞர்” எனும் பட்டத்தினை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உடனே மறுத்து விட வேண்டும்.” என்கிற ரீதியில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் பின்னணியில் மதுரை தமிழிசைச் சங்கம், கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு “முத்தமிழ்ப் பெருங்கவிஞர்” என்கிற பட்டத்தினை வழங்க இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, “காற்றில் அலைந்திடுமோ கௌரவப் பட்டங்கள்??” என்கிற கேள்வி எழாமல் இருக்க இயலவில்லை.
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு “கவிப்பேரரசு” என்கிற பட்டத்தினை வழங்கியவரே கலைஞர் தான். “கவிப்பேரரசு”: என்கிற கௌரவப் பட்டத்தினை கவியரசர் என்று சம காலத்தில் போற்றப்பட்ட கண்ணதாசனுக்கோ, என்னால் மெட்டுக்கும் பாட்டெழுத முடியும் துட்டுக்கும் பாட்டெழுத முடியும் என்று வெளிப்படையாகவே பேசிய கவிஞர் வாலிக்கோ மனமுவந்து தரவில்லை அந்தக் கலைஞர். இத்தனைக்கும் கலைஞரும் கண்ணதாசனும் ஆரம்பக் காலக்கட்டங்களில் “மிக நெருக்கமான” தோழர்கள். இருந்தும் அந்தக் கண்ணதாசனுக்கு “கவிப்பேரரசு” என்கிற பட்டம் தரப்படவில்லை.
வீடியோ லிங்
ஒரு மேடையில் வாலி அவர்களை வைத்துக் கொண்டே “துக்ளக்” சோ அவர்கள், கவிஞர் வாலியை “கலைஞர் வாலி” என்று கிண்டலடித்துப் பேசியதும் உண்டு. அந்தக் கவிஞர் வாலிக்கும் “கவிப்பேரரசு” பட்டம் தரவில்லை. ஒருவேளை கலைஞரே கவிஞர் வாலிக்கு “கவிப்பேரரசு” பட்டம் தர இருப்பதாகச் சொல்லியிருந்தால், கட்டாயமாக வாலி அதனை மறுத்திருப்பார். கவியரசர் கண்ணதாசன் மீதாக கவிஞர் வாலிக்கு அத்தனை மதிப்பு. மரியாதை. ஈடுபாடு.
கலைஞரிடம் எப்போதாவது ஒரு வகையான “குசும்புத் தனம்” குடி கொண்டு இருக்கும். கலைஞரின் அந்த மாதிரியான குசும்புத் தனங்களில் ஒன்று தான், கவிஞர் வைரமுத்துவுக்கு “கவிப்பேரரசு” பட்டம் வழங்கிச் சிறப்பித்து அகமகிழ்ந்தது.
தமிழ்கூறும் நல்லுலகில் இந்தக் கௌரவப் பட்டங்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுவாகவே கௌரவப் பட்டங்கள் என்பது வெறும் பட்டங்கள் அல்ல. அவைகள் பேரன்பின் அடைமொழிகள். அன்பு மொழிகள். அவ்வளவு தான். அதிலும் சில கௌரவப் பட்டங்கள் மட்டுமே எல்லாக் காலத்துக்கும் அழியாத கல்வெட்டுகளாக நிலைத்திருக்கும். இதோ அவைகள்…
தந்தை பெரியார் என்றால் அந்த வெண்தாடி வேந்தர். கர்ம வீரர் என்றால் பெருந்தலைவர் காமராஜர். கலைவாணர் என்றால் என்.எஸ்.கே. அவர்கள். மூதறிஞர் என்றால் இராஜாஜி. பேரறிஞர் என்றால் அண்ணா. கலைஞர் என்றால் கருணாநிதி.
மகாத்மா என்றால் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி. விருப்பு வெறுப்புகள் கடந்த விமர்சனப் பார்வையில் இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்றால் இந்திரா காந்தி. கவிக்குயில் சரோஜினி நாயுடு. இசையரசி எனில் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி எனில் பாரதியார். தமிழ்த் தாத்தா எனில் உ.வே. சுவாமிநாதய்யர்.
எது எப்படியோ மதுரை தமிழிசைச் சங்கத்தின் “முத்தமிழ்ப் பெருங்கவிஞர்” பட்டம் பெற இருக்கும், கலைஞரின் “கவிப்பேரரசு” கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள்.
கட்டுரை
இருள்நீக்கியான்
வீடியோ லிங்