தங்கத்திற்கும் மேலான பதக்கம் தாய்மை !
தங்கத்திற்கும் மேலான பதக்கம் தாய்மை ! டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்றது போல, பாரிஸ் ஒலிம்பிக்கிலும் நிச்சயம் வெல்வார் என்று இந்திய ரசிகர்களை மிகவும் எதிர்பார்க்க வைத்த நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
அவரைவிட கூடுதலான தூரத்திற்கு ஈட்டியெறிந்து (92.97 மீட்டர்) ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றிருப்பவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்.
எல்லா இந்தியர்களையும் போலவே சோப்ராவின் பெற்றோரும் தங்கள் மகனின் தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்தே இருந்தனர். ஆனால், வெள்ளியை வென்றாலும் மகன் மகன்தானே! அதில் நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜாதேவிக்கு பெருமைதான்.
அந்தப் பெருமையை விடவும் அவரிடமுள்ள தாய்மைப் பண்பு வெளிப்பட்டு ஒலிம்பிக் அரங்கில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
“என் மகனுக்கு வெள்ளிப்பதக்கம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. தங்கப்பதக்கம் வென்ற அந்தப் பையனும் எனக்கு குழந்தைதான். ஒவ்வொருவரும் கடுமையான பல பயிற்சிகளுக்குப் பிறகே இந்த போட்டிகு வந்திருக்கிறார்கள்.
என் மகன் போலவே அந்தப் பையனுக்கும் பிடித்த சாப்பாட்டை நான் சமைத்து கொடுப்பேன்” என்று மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் சொல்லியிருக்கிறார் சோப்ராவின் தாய்.
இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் திறமை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
விளையாட்டு என்பது தோழமையான போட்டிக்களம். நிறம், மொழி, இனம், மதம், சாதி எல்லாவற்றையும் கடந்த திறமைக்கான, நட்புறவு மிகுந்த போட்டி. அதை அர்ஷத் நதீமும், நீரஜ் சோப்ராவும் ஒலிம்பிக்கில் நிரூபித்து தங்கமும் வெள்ளியும் பெற்ற நிலையில், அதை விடவும் உயர்வான பதக்கத்தை தன் தாய்மை உணர்வினால் வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ராவின் அம்மா.