அங்குசம் பார்வையில் ‘அந்தகன்’ திரைப்படம் திரை விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘அந்தகன்’ திரைப்படம் திரை விமர்சனம் ! தயாரிப்பு : ’சாந்தி மூவிஸ்’ சாந்தி தியாகராஜன், ப்ரீத்தி தியாகராஜன். எழுத்து—இயக்கம் : தியாகராஜன். நடிகர்—நடிகைகள்: பிரஷாந்த், சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, யோகிபாபு, வனிதா விஜயகுமார், பெசண்ட் ரவி, லீலா சாம்சன், பூவையார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு : ரவி யாதவ், இசை : சந்தோஷ் நாராயணன், ஆர்ட் டைரக்டர் : செந்தில் ராகவன், எடிட்டிங் : சதீஷ் சூர்யா, வசனம் : பட்டுக்கோட்டை பிரபாகர். பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி பிரஷாந்த் பியானோ வாசிப்பதில் வல்லவர். லண்டனில் நடைபெறப் போகும் இசைப் போட்டியில் பியானோ வாசித்து ஜெயிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். இந்நிலையில் சாலையைக் கடக்கும் போது பிரியா ஆனந்த் டூவிலரில் மோதிவிடுகிறார் பிரஷாந்த். மோதல் நட்பாகி, காதலாகிறது. பிரியாவின் அப்பா நடத்தும் ஹைகிளாஸ் பாரில் பியானோ வாசிக்கிறார் பிரஷாந்த்.
இதில் லயித்துப் போகும் கார்த்திக் [ படத்திலும் நடிகராகவே வருகிறார் ], தனது திருமண நாளையொட்டி, தனது வீட்டுக்கு வந்து ஸ்பெஷலாக பியானோ வாசிக்கும்படி சொல்கிறார். கார்த்திக் சொன்னபடி அவரது வீட்டுக்குப் போகிறார் பிரஷாந்த். அங்கே அவரது மனைவி சிம்ரன் தான் இருக்கிறார். கார்த்திக் பெங்களூர் போயிருப்பதாகச் சொல்லி, வீட்டுக்குள் அழைத்துப் போகிறார் சிம்ரன். பியானோ வாசித்தபடியே கண்களைச் சுழலவிடுகிறார் பிரஷாந்த். அங்கே கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார்.
அதன் பின் இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நான்—ஸ்டாப்பாக நடக்கும் விறுவிறுப்பு, பரபரப்பு, க்ரைம் த்ரில்லிங், சேஸிங் தான் இந்த ‘அந்தகன்’.
இந்தியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, மெகா ஹிட்டடித்த ‘அந்தாதுன்’ தான் தமிழில் ‘அந்தகன்’. அந்த இந்திப் படத்தை தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நாமும் பார்க்கவில்லை. படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுடன் சரி. ஏன்னா இந்திப் படங்கள் மீது அவ்வளவாக நமக்கு ஈர்ப்பு இல்லாதது தான்.
இப்படிப் பார்க்காதவர்களுக்கு சூப்பர் ஸ்பீட் ஸ்கிரிப்ட் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
முதல் காட்சியில் பெசண்ட் ரவியில் ஆரம்பித்து, அடுத்தடுத்து கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு, மோகன் வைத்யா, பூவையார், என எல்லா கேரக்டர்களையும் கனகச்சிதமாக திரையில் எண்ட்ரி கொடுத்து அசத்திவிட்டார் தியாகராஜன்.
படத்தின் முதல் காட்சியில் வரும் ஒரு கண் தெரியாத முயல் ஒன்றை க்ளைமாக்சில் கனெக்ட் பண்ணியிருப்பதில் டைரக்டரின் டச் பளிச்.
குறிப்பாக, இது தனது சொந்தப்படம், தனது மகன் ஹீரோ என்பதற்காக பிராஷாந்தின் இண்ட்ரோ சீனுக்கு பில்டப்பெல்லாம் கொடுக்காமல், ரொம்பவே கேஷுவலாக பியானோ வாசித்தபடி தான் அறிமுகமாகிறார் பிரஷாந்த். அவர் பார்வையற்றவர் என்பதை அந்த சீனிலேயே சொல்லிவிட்டார்.
அதற்கடுத்து அரைமணி நேரத்தில் அவருக்கு கண் தெரியும் எனச் சொல்லி பகீருட்டுகிறார். அடுத்தடுத்த சீன்களில் கண் தெரியாதவர் போல் நடிக்கிறார் பிரஷாந்த். இவரின் நடவடிக்கையால் ப்ரியா ஆனந்த் ஒரிரு இடங்களில் லைட்டாக சந்தேகப்படுகிறார்.
உண்மையிலேயே பிரஷாந்துக்கு இந்தப் படத்தின் சூப்பர்ஹிட் நிச்சயம் ஒரு கம்பேக் தான். கார்த்திக் கொலையைப் பார்த்துவிட்டு, மறுநாள் போலீஸ் ஸ்டேஷன் போகும் போது அங்கே இன்ஸ்பெக்டராக இருக்கும் சமுத்திரக்கனியை பார்த்து அதிர்ச்சியாகிறார். ஏன்னா கார்த்திக் வீட்டின் பாத்ரூமில் இருந்தவர் சமுத்திரக்கனி.
ஏன்னா சிம்ரனுக்கும் கனிக்கும் கள்ளத் தொடர்பு. ஆனாலும் கண் தெரியாதவன் போல சமாளித்து வீட்டில் வளர்த்த பூனையைக் காணவில்லை என கம்ப்ளெண்ட் கொடுக்கிறார்.
அதன் பின் பிரஷாந்த், சிம்ரன், சமுத்திரக்கனி இந்த மூவருக்குமிடையே நடக்கும் மாஸ்டர் கேம் ப்ளான் அசத்தல் ரகம். செம வில்லியாக, படத்தில் வரும் வசனம் பாணியில் சொல்வதென்றால் செம பஜாரியாக பின்னிப் பெடெலெடுத்துவிட்டார் சிம்ரன்.
பிரஷாந்த் பியானோ வாசித்துக் கொண்டிருக்க கனியும் அவரும் சேர்ந்து கார்த்திக்கின் பிணத்தை டிஸ்போஸ் சீனில் மாஸ் காட்டிவிட்டார் சிம்ரன். அதே போல் பிரஷாந்தை உண்மையிலேயே குருடனாக்கும் சீனிலும் லீலா சாம்சனை எட்டாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்யும் சீனிலும் க்ளைமாக்சில் கே.எஸ்.ரவிக்குமாரை போட்டுத் தள்ளும் சீனிலும் அடி பாதகத்தி…என பதற வைத்துவிட்டார் சிம்ரன்.
பிரஷாந்துக்கு கண் தெரியும் என்பது படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குத் தெரிந்துவிட்டாலும் படத்தின் டெம்போவோ, சஸ்பென்ஸோ கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு பிரஷாந்தின் நடிப்பு கைகொடுக்கிறது.
ஹீரோயின் பிரியா ஆனந்த்துக்கு என்னாச்சுன்னு தெரியல? அட நடிப்பை சொல்லலங்க. தலையிலிருந்து கால் வரைக்கும் ஒரே சைஸ்ல, அதாவது இரண்டு விரல்களால் பிடிக்கும் வேப்பங்குச்சி சைஸுக்கு உடம்பு வத்தி வதங்கிப் போயிருப்பது தான் பரிதாபமா இருக்கு.
அந்தகனுக்கு ஆதாரமாக இருப்பது ரவியாதவ்வின் ஒளிப்பதிவும் சந்தோஷ்நாராயணனின் பின்னணி இசையும் தான்.
கண் தெரியாதவனாக ஏன் நடிச்சேன்? என்பதற்கு பிரஷாந்த் சொல்லும் காரணத்தைத் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் சொல்லிபடியே பார்த்தால்.. இப்போது இசையில் ஜாம்பவானாக இருப்பவர்களெல்லாம் கண் தெரியாதவர்களா தியாகராஜன் அண்ணே?
–மதுரை மாறன்