அமைச்சர் உதயநிதியின் அதிரடியில் அதிர்ந்து போன அதிகாரிகள் !
உதயநிதியின் அதிரடி முடிவால் அதிர்ந்து போன அதிகாரிகள்! மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் செப்டம்பர் 9ஆம் தேதி 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக 3 நாள் பயணமாக மதுரை வந்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். மூன்று நாட்களாக மதுரையிலேயே தங்கியபடியே, மதுரை, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
மகளிர் குழு, முதியோர் பென்ஷன், ஊனமுற்றோருக்கான உதவி தொகை, விதவைகளுக்கான மாதாந்திர தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மறுநாள் சிவகங்கை செல்லும் வழியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆதி திராவிட நலத்துறை மாணவர் விடுதி ஆகியவற்றில் சர்ப்பிரைஸ் விசிட் அடித்தார். அவரது அதிரடி ஆய்வில் ஒழுங்காக பணியாற்றாத சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டு ஐந்து பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். உதயநிதி ஸ்டாலினின் அதிரடியை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
குறிப்பாக, மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களைக்கூட கட்டாயமாக பள்ளி ஒன்றுக்கு 50 மாணவர்களாவது கட்டாயம் புத்தகக்காட்சிக்கு வர வேண்டுமென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கறார் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படிந்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிச்சிறுவர்களின் காலில் செருப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதைக்கூட அறியாமல், வம்படியாக இழுத்து வந்திருக்கிறார்கள். வந்த இடத்தில் மணிக்கணக்கில் மாணவர்கள் காத்திருக்க நேர்ந்ததும்; காலில் செருப்புக்கூட இல்லாமல் வெயிலில் வாடி வதங்கியதும்; ரிக்கார்டு டான்ஸ் போல பக்தி பாட்டுக்கு பள்ளி மாணவர்களை சாமி வந்ததைப்போல ஆட வைத்ததும் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது.
கடுப்பான உதயநிதி, இரவோடு இரவாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான கார்த்திகாவை கள்ளக்குறிச்சிக்கு தூக்கியடித்திருப்பதும் மதுரையில் அனல் பறக்கும் விவாதமாக மாறியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் குளறுபடி நடைபெற்றதாக போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சி.இ.ஓ. கார்த்திகாவும் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மதுரையில் கட்சி நிர்வாகிகள் மாற்றமும் இருக்கும் என்கிறார்கள். தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து தமிழகம் திரும்பியதும் மதுரை பல அதிரடிகளை காணவிருக்கிறது என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள். முக்கியமாக, மாவட்ட செயலாளர் மாற்றம் கட்டாயம் இருக்கும் என்கிறார்கள். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு புதுத்தெம்புடன் கட்சிப் பணியாற்றும் வகையில் இளைஞரணியைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
ஷாகுல் படங்கள் ஆனந்தன்.