பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் உயராய்வு மையம் – 9 பெரியார் விருதாளர்களுக்குப் பொற்கிழிகள் !
பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் உயராய்வு மையம் – 146ஆவது தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது 9 பெரியார் விருதாளர்களுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையம் சார்பில், 146ஆவது தந்தை பெரியார் பிறந்தநாள் விழா செப்.17ஆம் நாள் செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
இவ் விழாவிற்குத் தலைமை தாங்கி பெரியார் விருதுகளை 9 விருதாளர்களுக்கு வழங்கி துணைவேந்தர் ம.செல்வம் உரையாற்றினார். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஆர்.காளிதாசன் வாழ்த்துரை வழங்கினார். பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் பா.ஜெயபிரகாஷ் சிறப்புரையாற்றினார். விழாவில் பெரியார் உயராய்வு மைய இயக்குநர் அ.கோவிந்தராஜன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில், தந்தை பெரியார் படத்திற்குத் துணைவேந்தர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்த பதிவாளர், தேர்வு நெறியாளர், உயராய்வு மைய இயக்குநர், 9 விருதாளர்கள் என அனைவரும் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். பாரதிதாசன் உயராய்வு மைய இயக்குநர் அ.கோவிந்தராஜன் தொகுத்த பெரியார், அண்ணா, கலைஞர், பாரதி, பாரதிதாசன் – கருத்துகள் அடங்கிய கட்டுரைகள் ஆற்றல்சார் ஆளுமைகள் என்னும் பெயரியல் ஆய்வுக்கோவையாக துணைவேந்தர் வெளியிட்டார். பதிவாளர் முதல்படியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பெரியார் விருதுகள் கீழ்க்கண்ட விருதாளர்களுக்கு வழங்கப்பட்டன.
2021-22ஆம் ஆண்டுகளுக்கு
பெரியார் சிறப்பு விருது – பாசறை மு.பாலன்
பெரியார் விருது – முனைவர் ஆ.கெ.துரைசாமி
பெரியார் பரிசு – முனைவர் உ.பிரபாகரன்
2022-23ஆம் ஆண்டுகளுக்கு
பெரியார் சிறப்பு விருது – தி.அன்பழகன்
பெரியார் விருது – கு.வரதராசன்
பெரியார் பரிசு – ஆ.மலைக்கொழுந்தன்
2023-24ஆம் ஆண்டுகளுக்கு
பெரியார் சிறப்பு விருது – முனைவர் ப.கமலக்கண்ணன்
பெரியார் விருது – முனைவர் தி.நெடுஞ்செழியன்
பெரியார் பரிசு – கி.தளபதிராஜ்
இதில் பெரியார் சிறப்பு விருது என்பது 1 இலட்சம் மதிப்புள்ள பொற்கிழி. பெரியார் கருத்தியல்களின்படி அகவை முதிர்ந்து வாழும் பெரியார் தொண்டருக்கு வழங்கப்படுவது. பெரியார் விருது என்பது 50ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி. பெரியார் கருத்தியல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுவது. பெரியார் பரிசு என்பது ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொற்கிழி. பெரியார் குறித்த சிறந்த நூலுக்கு வழங்கப்படுவதாகும்.
பெரியார் விருது பெற்ற 9 விருதாளர்களும் பெரியார் கருத்தியலுக்கும் தங்களுக்கும் உள்ள பிணைப்பு குறித்த அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர். பின்னர் பெரியார் உயராய்வு மைய இயக்குநர் அ.கோவிந்தராஜன் நன்றி கூறினார். விழா நிறைவு பெற்றவுடன் விருதாளர்கள் மற்றும் அவர்களுடன் வருகை தந்த உறவினர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரியார் உயராய்வு மையத்தில் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டு காலம் பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பெரியார் பிறந்தநாள் விழா 2023-24ஆம் ஆண்டுக்குக் கொண்டாடப்படும் என்ற பல்கலைக்கழக அறிவிப்பைத் தொடர்ந்து, திருச்சி பெரியார் பற்றாளர்கள் துணைவேந்தரைச் சந்தித்து, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளையும் சேர்த்து 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் ஆண்டுக்கு 3 விருதாளர்கள் வீதிம் 9 விருதாளர்களுக்குப் பெரியார் விருதும் பொற்கிழியும் வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தது.
இதனையடுத்து, பெரியார் பிறந்தநாள் விழா 3 ஆண்டுகளுக்கும் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற பெரியார் பிறந்தநாள்ள விழா வரும் ஆண்டுகளிலும் கொண்டாடப்படவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-சிறப்பு செய்தியாளர்