கோகைன் போதைப்பவுடர் கடத்திய முன்னாள் டிஜிபி மகன் அதிரடி கைது ! சிக்கியது எப்படி ?
வெளிநாட்டில் இருந்து கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் முன்னாள் டிஜிபி மகன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சித்தாள் – கொத்தனார் உள்ளிட்டு உதிரித் தொழிலாளர்கள் பலரிடத்தும் சர்வ சாதாரணமாக புழங்கும் போதை வஸ்து ”ஹான்ஸ்” . ஒரு காலத்தில் பான்பராக் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர் பல்வேறு கம்பெனி பெயர்களில் வெளியான ”குட்கா” பாக்கு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து வந்தது. பள்ளிக்கூட பசங்க தொடங்கி வயது வித்தியாசமின்றி “கூலிப்” பயன்பாடு இன்றளவும் இருந்து வருகிறது. வகுப்பு வேறுபாடின்றி குப்பம் தொடங்கி பங்களா வரையில் புழக்கத்தில் இருக்கும் போதை வஸ்துவாக கஞ்சா இருந்து வருகிறது.
இவற்றுக்கெல்லாம் மேலே, உயர்ரக போதை வஸ்துவாக பார்க்கப்படுவது கோகைன் போதைபொருள். பவுடர் வடிவிலான இந்த போதை பொருள் தங்கத்தை போலவே, கிராம் அளவுகளில் விலை போகக்கூடிய காஸ்ட்லியான போதை வஸ்து. பெரும்பாலும் மேட்டுக்குடியினரிடையே புழக்கத்தில் இருந்து வரும் ஒன்று. கோகைனை விரும்புவர்கள் அனைவருமே காஸ்ட்லி கஸ்டமர் என்பது மட்டுமல்ல; பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் ஒரு சரக்காகவும் இருந்து வருவதால், பெரும்பாலும் அதன் விற்பனை சங்கிலித்தொடரிலும் அவர்களே முன்னிற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான், வெளிநாடுகளில் இருந்து கோகைன் போதை பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்த கடத்தலில் ஈடுபட்ட அவனது கூட்டாளிகள் ஐந்து பேரும் சேர்த்தே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை பெருநகர காவல் எல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற தனிச்சிறப்பான திடீர் சோதனையில் இந்த விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.
அதேநேரம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நுண்ணறிவு பிரிவு போதை பொருட்களை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம்தேதி தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்த தீபக் (31), பாலிமேத்தா(27) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், கடந்த 20ம் தேதி அதேபோல் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அரும்பாக்கம் நடுவாங்கரை பாலம் பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்த அருண்குமார் (28), சித்தார்த் (28), தீபக்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி நைஜீரியா நாட்டை சேர்ந்த கபீர் குளோன்ஸ் (32), சந்தோஷ் (27), ஆண்டனி ரூபன் (29) ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி கைது செய்தனர். பிறகு போதை பொருட்களை ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து கொடுக்கும் முக்கிய குற்றவாளியான ஆந்திரா மாநிலம் ஓங்கோல் விஸ்வநாதன் (47) என்பவரை தனிப்படை போலீசார் ஏஜென்டுகள் போல் பேசி போதை பொருள் வேண்டும் என்று கூறி வரவழைத்து மாதவரம் பேருந்து நிலையம் அருகே தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 கிலோ 26 கிராம் மெத்தபெட்டமைன், 10 செல்போன்கள், 1 பைக், ரூ.9,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே தீபாவளி நெருங்குவதால், ரவுடிகள் மற்றும் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு நகர் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில், வெளிநாடுகளில் இருந்து கோகைன் என்ற பயங்கர போதை பொருளை நைஜிரியா நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் தனிப்படைக்கு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நைஜிரியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, அவர் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த கோகைன் என்ற போதை பொருளை 2 நபர்களிடம் கொடுப்பது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக நைஜிரியா நாட்டை சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் என்பவரின் மகன் அருண்(40) என்பவர் தனது நண்பரான மெகலன் (42) என்பவருடன் இணைந்து சென்னை முழுவதும் தனது ஆட்களை நியமித்து கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தனது தந்தை முன்னாள் டிஜிபி என்பதால் அருண் வெளிநாட்டு போதை பொருள் கும்பலுடன் நேரடியாக தொடர்பு வைத்துகொண்டு தடையின்றி கோகைன் போதை பொருள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் முன்னாள் டிஜிபி மகன் அருண், அவரது நண்பர் மெகலன், நைஜிரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி (39) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3.8 கிராம் கோகைன், ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணம் 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரவிந்திரநாத்தின் மகன் அருண், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர்.
அங்கு பணியாற்றும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தது போதும் என்று கூறி இந்தியாவுக்கு அழைத்து வந்து விட்டார். சென்னையில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வந்த பின்னரும் போதைப் பொருளை அருண் பயன்படுத்தி வந்தார். தற்போது போலீஸ் வலையில் சிக்கிவிட்டார். சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரவீந்திரநாத் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்தார். அப்போது பெண் எஸ்பி ஒருவரை தனது அறையில் வைத்து கையைப் பிடித்து இழுத்ததாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியில் இருந்தவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் ஓய்வு பெற்றார். தற்போது அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– அங்குசம் செய்திப்பிரிவு.