திருச்சி மாவட்ட போலீசாரின் அதிரடியில் மூட்டை மூட்டையாய் சிக்கிய ஹான்ஸ் … கூலிப் … !
தமிழகத்தில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பல்வேறு விதமான கடும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், நாளொன்றுக்கு ஐந்துக்கும் குறையாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன. ஆனாலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போதைப் பாக்குகளின் புழக்கம் இருந்துவரத்தான் செய்கிறது.

திருச்சியை பொருத்தமட்டில் மாநகர கமிஷனர் காமினி மற்றும் திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆகியோரின் அதிரடிகளால், அடுத்தடுத்து கடத்தல் கும்பல்கள் சிக்கி வருகிறார்கள்.
இந்த அதிரடியின் தொடர்ச்சியாக, முசிறியையடுத்த காட்டுப்புத்தூரில் மூட்டை கணக்கில் போதைப்பாக்குகளை கைப்பற்றியிருப்பதோடு, அக்குற்றச் செயலில் தொடர்புடைய மூன்று நபர்களை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

மார்ச்-30 அன்று அதிகாலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, முசிறி டி.எஸ்.பி. சுரேஷ்குமார், தொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் டி.எஸ்.பியின் தனிப்படை போலீசார் கருணாகரன், மற்றும் பிரபாகரன் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டு போதைப்பாக்கு கடத்தலில் ஈடுபட்ட தொட்டியத்தை சேர்ந்த ராஜசேகர், அர்ஜூனன், பாலசுப்ரமணியன் ஆகிய மூவரை கைது செய்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து, 645 எடை கொண்ட 43 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகளையும்; 101.4 கிலோ எடைகொண்ட விமல் பிராண்ட் பான் மசாலா பாக்குகளையும்; 14.1 கிலோ எடை கொண்ட 26 மூட்டை V1 Tobaco பாக்குகளையும்; 51.7 கிலோ எடை கொண்ட 9 மூட்டை கூலிப்புகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய TN 48 BT 2046 என்ற பதிவெண் கொண்ட ரெனால்ட் டிரைபர் வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேற்படி மூவருக்கு எதிராகவும் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு (குற்ற எண். 76/2025 ) செய்து விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள்.
மூட்டை மூட்டையாக போதைப் பாக்குகள் கைப்பற்றப்பட்டிருக்கும் சம்பவத்தையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறியுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார், எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் தைரியமாக, எஸ்.பி. அலுவலக உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார், எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
— அங்குசம் செய்திப்பிரிவு.