விருதுக்கு தேர்வான வந்திதா பாண்டே ! திரும்பி பார்க்க வைத்த எஸ்.பி.வருண்குமார் ! கவனத்தை ஈர்த்த எஸ்.பி. தம்பதியினர் !
விருதுக்கு தேர்வான வந்திதா பாண்டே ! திரும்பி பார்க்க வைத்த எஸ்.பி.வருண்குமார் ! கவனத்தை ஈர்த்த எஸ்.பி. தம்பதியினர் !
”திரள்நிதி திருடர் கூட்டமும், அவர்களின் சாதி வெறி இணையதள கூலிப்படையும் உனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நீயோ செயல்வீராங்கனை. பெண் குழந்தைகளுக்கு எதிரான POSCO குற்றத்தில் துரித விசாரணையும் நடவடிக்கையும் எடுத்து UNION HOME MINISTER INVESTIGATION பதக்கத்தை வென்று சிங்கப்பெண் என்பதை நிரூபித்து விட்டாய். வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே !” என்பதாக, “மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள் – 2024” விருதுபட்டியலில் இடம் பெற்றிருக்கும் வந்திதா பாண்டே வை வாழ்த்தி, அவரது கணவரும் திருச்சி எஸ்.பி.யுமான வீ.வருண்குமார் தனிப்பட்ட முறையில் தனது வாட்சப்பில் பதிவு செய்திருந்த நிலைத்தகவல் வைரலாகி, விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. பலரது கவனத்தை பெற்றிருக்கிறது.
நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றும் 463 போலீசாருக்கு, 2024 – ஆம் ஆண்டுக்கான “மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள்” அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து, விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் தடய அறிவியல் பிரிவில் சுரேஷ் நந்தகோபால் (துணை இயக்குநர்) மற்றும் புலனாய்வு பிரிவில் கே. மீனா (எஸ்.பி.), வந்திதா பாண்டே (ஏ.எஸ்.பி.), சி. கார்த்திகேயன் (ஏ.சி.பி.), சி. நல்லசிவம் (ஏ.சி.பி.), எம். அம்பிகா (ஆய்வாளர்), என். உதயகுமார் (ஆய்வாளர்), எஸ். பாலகிருஷ்ணன் (ஆய்வாளர்) ஆகிய 8 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பதக்கம், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவாக அவரது பிறந்ததினமான அக்டோபர்-31 அன்று விருது அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.
இந்த விருதுக்கு, i) சிறப்பு நடவடிக்கை (ii) புலனாய்வு (iii) நுண்ணறிவு (iv) தடய அறிவியல் ஆகிய நான்கு துறைகளில் சிறந்து விளங்கும் போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குற்றங்களை விசாரிப்பதில் உயர் தரத்தை மேம்படுத்துவதையும், அத்தகைய சிறந்த விசாரணையை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, ஆண்டுதோறும் “மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கங்கள்” வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுவரை, “Union Home Minister’s Medal for Excellence in Investigation” என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த பதக்கம், இந்த ஆண்டு முதல், ”Kendriya Grihmantri Dakshata Padak” என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக வந்திதாபாண்டே பணியாற்றிய சமயத்தில், பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் ஆறு மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய போஸ்கோ வழக்கில், சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிவகங்கையில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய சமயத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் அது.
பெரியநரிக்கோட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றும் முருகன் என்பவர் அதே பள்ளியில் பயிலும் ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுகிறது. சம்பவம் நடைபெற்றது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் -06 ஆம் தேதி. பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் ஒரு சிறுமியின் சார்பில் அவரது பாட்டி, சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏப்ரல்-15 அன்று புகார் அளிக்கிறார். மாணவிகளின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை உணர்ந்த போலீசார், அதே நாளில் தலைமையாசிரியரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக வந்திதா பாண்டே நியமிக்கப்படுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவருமே நான்காம் வகுப்பு பயிலும் மாணவிகள் என்பதுதான் கொடுமை. அதில் ஒருவருக்கு தாய் தந்தை இருவருமே இல்லை; பாட்டியின் ஆதரவில் பள்ளி சென்றவள். இருவருக்கு தந்தை இல்லை. ஒருவரின் தாயார் பிரிந்து சென்றுவிட்டார். ஆறு பேரில் மூவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இந்த தனிச்சிறப்பான தன்மைகளை விசாரணையில் உணர்ந்தவர் வழக்கை திறம்பட கையாண்டு, அதே ஆண்டு ஜூலை-23 அன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறார். நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-22 ஆம் தேதி குற்றவாளி முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 69000 அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை திறம்பட கையாண்டு உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதற்கு அடிப்படையாக அமைந்த விசாரணை அதிகாரியாக மெச்சத்தகுந்த அவரது செயல்பாட்டிற்காகத்தான் இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்திருப்பதோடு அல்லாமல், தாழ்த்தபட்ட பிரிவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தந்திருக்கிறார். கூடவே, அப்பெண் பிள்ளைகள் தொடர்ந்து படிக்கவும் உறுதுணையாக இருந்திருப்பதோடு, தற்போது, இருவர் இளங்கலை இரண்டாம் ஆண்டு; இருவர் நர்சிங் ; ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மற்றொருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கும் ஆதரவாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. வருண்குமாரின் வித்தியாசமான வாழ்த்து செய்தியால் மட்டுமல்ல; அவரது இயல்பிலேயே கடந்த காலங்களில் எஸ்.பி.வந்திதா பாண்டே கவனத்திற்குரிய பெண் போலீசு அதிகாரியாக பலரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
உத்திரபிரதேசம் அலகாபாத்தை பூர்வீகமாக கொண்ட வந்திதா பாண்டே, கடந்த 2020 இல் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தவர். கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கணவர் வருண்குமார் போலவே, போலீஸ் துறையில் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர்.
அதே சிவகங்கை மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டு சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த கனவான்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றவர். அந்த வாக்குமூலத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் சிலரின் பெயரை நீக்க வேண்டும் என்பதாக, பல்வேறு வகையான மிரட்டல்கள்; மேலிடத்து சிபாரிசுகள்; பெரிய மனிதர்களின் புத்திமதிகளையெல்லாம் கடந்து நீதிமன்றத்தில் துணிச்சலாக சமர்ப்பித்தவர்.
பின்னர், சிவகங்கையிலிருந்து கரூர் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது, அமைச்சர் ஒருவரின் நேரடி பினாமியாக அறியப்பட்ட கரூர் அன்புநாதனின் வீட்டில், தேர்தல் பட்டுவாடாவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் ரெய்டு நடத்தி கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தவர்.
இந்த துணிச்சலான நடவடிக்கைக்களின் காரணமாக, பழிவாங்கப்பட்ட வந்திதாபாண்டே அப்போதைய ஆட்சி காலம் முடியும் வரையில், டம்மியான பதவிகளில் பணியமர்த்தப்பட்டிருந்தார். அடுத்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகே, புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
இந்த பின்னணியில்தான், கலைஞரை வரம்பு மீறி விமர்சித்த விவகாரத்தில், சாட்டை துரைமுருகன் கைது சம்பவமும்; சில ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ லீக்கானதற்கு காரணம், எஸ்.பி.வருண்குமார்தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாகவே குற்றச்சாட்டை முன்வைக்கும் அளவுக்கு போனது. பின்னர், அவரது சாதி, உள்ளிட்ட அவரது ஜாதகங்களை ஆராய்ந்து அதனையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.
”காக்கி சட்டையை கழட்டிட்டு ஒண்டிக்கு ஒண்டி வர்றியா”னு சீமானே கீழிறங்கி பேசியதாகட்டும்; அதனை அப்படியே, அவரது தம்பி மார்களும் பின்பற்றி, வருண்குமார் என்ற வரம்பையும் மீறி, அவரது இணையரும் புதுக்கோட்டை எஸ்.பி.யுமான வந்திதாபாண்டேவையும் தரம் தாழ்ந்து விமர்சித்த விவகாரமாகட்டும் இவையெல்லாம் நாம் தமிழர் கட்சியின் மிக மிக கீழ்த்தரமான அணுகுமுறைகளுக்கு பொருத்தமான உதாரணங்களாக அமைந்திருந்தன.
மிக முக்கியமாக, உதயநிதி ஸ்டாலினின் நட்பு வட்டத்தில் இருப்பதன் காரணமாகவே, அரசியல் ரீதியில் தன்னை பழிவாங்குகிறார் என்பது தொடங்கி, அதன் காரணமாகவே ”புருஷன் – பொண்டாட்டி இருவரும் பக்கத்து பக்கத்து மாவட்டத்துக்கு பணி பெற்று வந்துவிட்டார்கள்” என்பது வரையில் தம்பிகளுக்கு இடம் கொடுக்காமல், அண்ணன் சீமானே நேரடியாக பேசியும் விட்டார். அண்ணன் சீமானின் ஆவேசத்தால் உந்தப்பட்ட தம்பிகள், வந்திதாபாண்டேவை தரம் தாழ்ந்து விமர்சித்தனர். இந்நிலையில்தான், எஸ்.பி.க்கள் வருண்குமாரும் வந்திதாபாண்டேவும் எக்ஸ் தள விவாதங்களிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
அப்போதும்கூட, சமூக ஊடகங்களில் தங்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தவர்களையெல்லாம் பெற்றோர்களுடன் அழைத்து உரிய புத்திமதிகளைக் கூறி பெருந்தன்மையாக அனுப்பி வைத்திருந்தனர் எஸ்.பி. தம்பதியினர். எஸ்.பி. வருண்குமாரின் காக்கி சட்டையை கழட்டிவிட்டு வர சொன்ன அண்ணன் சீமான், தேவர் ஜெயந்திக்கு சென்றபோது அவருக்கு எதிராக குரல் எழுப்பி அவரை சூழ்ந்துகொண்டவர்களிடமிருந்து காக்கி சீருடை அணிந்த போலீசார்தான் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார்கள் என்ற சம்பவமும் அரங்கேறியது.
இந்தப் பின்னணியில் இருந்துதான் எஸ்.பி.வந்திதா பாண்டேவுக்கு விருது வழங்குவதாக அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அவர் விருது பெற்றமைக்கு, வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்திருந்த எஸ்.பி.வருண்குமாரின் வாட்சப் நிலைத்தகவலும் வைரலாகியிருக்கிறது.
திருச்சியில் எஸ்.பி.யாக பணியாற்றி இரண்டாண்டு காலத்தில், ஆற்றிய அதிரடிகளுக்காக மெச்சத்தகுந்த பணிகளுக்காக, 2023-24 ஆம் ஆண்டிற்கான “அண்ணா பதக்கம்” எஸ்.பி.வருண்குமாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது என்பது இதில் கூடுதல் சுவாரஸ்யம்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்து நிற்பதால் அல்ல; தன்னியல்பான, தனித்துவமான, துணிச்சலான செயல்பாடுகளின் காரணமாகவே மெச்சத்தகுந்த பணித்திறனின் காரணமாகவே, களத்தில் சிறந்து விளங்குகிறோம் என்பதை இத்தம்பதியினரை தூற்றுவோருக்கு செய்தியாக சொல்லியிருக்கிறது, விருது அறிவிப்பு!
– ஆதிரன்.