MGR பாணியில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகைப்பூ – முத்தரையர் சமூகத்தை குறிவைக்கிறாரா, விஜய் ?
தமிழக அரசியல் வரலாற்றில் M.G.R கலந்துகொண்ட ஒரே சாதி சங்க மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநாடு. அவர் காட்டிய அன்பில் முத்தரையர்கள் அதிமுக-வை ஆதரித்தனர்.
நீண்ட நெடும் காலமாக இதுவரை, அரசியலில் புறக்கணிக்கப்பட்ட முத்தரையர் சமூக வாக்கு வங்கியை குறி வைத்து தொடக்கம் முதலே விஜய் தெளிவாக காய் நகர்த்தி வருகின்றார் .
தன் கட்சியின் கொடியில் உள்ள வாகைப்பூவிற்கான விளக்கம் மூலம், தமிழக அரசியலில் இதுவரை இருட்டடிப்பு செய்யப்பட்ட “பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்” அவர்களை பேசியதன் மூலம், முத்தரையர் சமூக மக்களிடையே பெரிய பேசு பொருள் ஆகி விட்டார்.
இதுவரை இரண்டு முறை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் 2023 மற்றும் 2024-ல் மே 23 அன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழாவில் கலந்து கொண்டு மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
“Mark my Words” 2025 மே 23 அன்று திரு.விஜய் அவர்கள் நேரில் திருச்சி வந்து பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.
இதுவரை எந்த ஒரு பெரிய தலைவரும் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க சார்பில் நேரில் வந்து மரியாதை செலுத்தியதில்லை . விஜய் வருகை முத்தரையர் சமூக மக்களிடையே பெரிய தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
மற்ற தலைவர்களின் வருகைக்கும் வழி வகுக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதி காக்கப்படும் என்ற வாக்குறுதி, நீண்ட நாட்களாக அரசு வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள முறையான இடஒதுக்கீடுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் முத்தரையர் சமூக மக்களிடையே நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். என்னிடம் த.வெ.க சார்பாக பேசியவர்கள் முத்தரையர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை தர விஜய் விரும்புகிறார் என்றே கூறினார்கள்.
மாநில பதவிகளில் முக்கியத்துவத்தையும், 2026 தேர்தலில் 15 சட்டமன்ற தொகுதிகளை முத்தரையர்களுக்கு ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கில் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் முத்தரையர் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றே நினைக்கின்றேன்.
– தங்க கோபிநாத்.
(திமுகவை சார்ந்தவர். கனிமொழியின் ஆதரவாளர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட தலைமையிடம் வாய்ப்பு கேட்டவர்.)