”ஆசிரியர்கள் மீதான வன்முறைகள்” தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம்! வா.அண்ணாமலை
அரசுப்பள்ளி தற்காலிக ஆசிரியை பள்ளியிலேயே கத்தியால் குத்தி படுகொலை… தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தொிவித்து ஐபெட்டோ வா.அண்ணாமலை அவா்கள் கூறியுள்ள அறிக்கையில்..
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியர் ரமணி (26) பள்ளி வகுப்பறையில் இன்று காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். சக ஆசிரியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே ரமணி மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார்(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணி நேரத்திலேயே ஆசிரியர்கள் கொல்லப்படுகிறார்கள், மருத்துவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை, மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லை.. என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும், பள்ளிக்கூடங்களில் சமூக விரோதிகள் ஆசிரியர்களை கொலை செய்வதும், தாக்குதல் நடத்துவது என்பதும் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும்.
பல இடங்களில் மாணவர்களே எழுத்து அறிவிக்கும் இறைவனாக விளங்கக்கூடிய ஆசிரியர்களை மாணவர்கள் தனியாகவும் கும்பலாகவும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்..
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் “ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் இறந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகை அறிவிக்க வேண்டும்.. சமூகவிரோதிகளால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பணிப் பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மட்டுமன்றி அனைத்து கட்சிகளும் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கலினையும், அன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவரை சமூக விரோதி ஒருவர் அரிவாளால் வெட்டிய காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
எந்த ஆட்சி நடைபெற்றாலும் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்… ஆனால் ஆசிரியர்கள் நீண்ட காலமாகவே தாக்கப்பட்டு வருகிறார்கள், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள். வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
சுதந்திர தினவிழா குடியரசு தின விழாவில் அமைச்சர்கள் அதிகாரிகள் கொடியேற்றும் போது பாதுகாப்போடு தான் ஏற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள், மருத்துவர்களுக்கு அரசு பணியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மருத்துவமனையில் பணியின்போது மருத்துவர் தாக்கப்பட்டார். அவர் உயிரோடு இருந்து வருகிறார் இருந்தாலும் மருத்துவர்கள் நாடு முழுவதும் பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இன்று வழக்கறிஞர் சமூக விரோதி யால் நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டப்பட்டார். அவரும் உயிரோடு இருந்து வருகிறார். இருந்தாலும் கூட வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டப் பகலில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நாடு முழுவதும் ஆசிரியர்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி இருக்க வேண்டும். அல்லது தஞ்சை மாவட்டத்திலாவது ஆசிரியர்கள் அனைவரும் திரண்டு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டும்.
நாளை தமிழ்நாடு முழுவதிலும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் கண்டனக் குரலை எழுப்பினால் தான் இந்த அரசுக்கு நமது எதிர்ப்புணர்வை உணர்த்திட முடியும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இனிமேல் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லும்போது தற்காப்பு நடவடிக்கையுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும். பள்ளி ஆசிரியர்களை யார் தாக்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட கடுமையான சட்ட பாதுகாப்பு ஆசிரியர்களுக்கு அவசியம் என்பதை ஆசிரியர் சமுதாயம் அரசை உணரச் செய்ய வேண்டும்.
ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் தான் ஆடாவிட்டாலும் தன் சரீரம் ஆட வேண்டும்!..
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன குரல் தீப்பிழம்பாய் வெளிவரட்டும்!…
உணர்வலைகளாக புறப்பட்டு வாரீர்!..
— வா.அண்ணாமலை.