”அரணாகும் ஆண்கள்” பெண்ணிற்குப் பாதுகாப்பா? அல்லது தண்டனையா?
அரசுப் பள்ளிகளில் காவலர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி நிரந்தரப் பணியில் ஊழியர்களை நியமிக்க வேண்டும்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு இந்தச் சம்பவம் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆணின் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதே பெண்ணின் கடமை என்பது சமூக விழுமியமாக நம்பப்படுகிறது. காட்சி ஊடகங்களான திரைப்படங்கள் தொடங்கி, தொலைக்காட்சித் தொடர்கள் வரை பெருந்திரளான மக்கள் பார்க்கும் கதைகள் அனைத்திலும் எவ்வளவு திறமைசாலியாக, வீரமிக்கவராக ஒரு பெண் கதாபாத்திரம் அமைந்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரம் திருமணமானவுடன் கணவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.
திருமணத்திற்கு முன் தந்தை, மாமன், அண்ணன், தம்பி போன்ற குடும்பத்தில் உள்ள ஒரு ஆணுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் விருப்பப்படி நடக்க வேண்டும். அப்படி இல்லாத கதாபாத்திரம், கதையில் தீய சக்தியாக சித்தரிக்கப்படுகிறது.
இத்தகைய கதை அமைப்பு, காலங்காலமாக சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள ஆணாதிக்கச் சிந்தனையை நியாயப்படுத்துவதுடன், பெண்ணை அடக்கி வைப்பது ஆண்மையின் அடையாளம் என்ற மனநோயால் ஆண்கள் பாதிக்கப்பட காரணமாக அமைகிறது.
இதன் விளைவாக, பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கவில்லை என்றால் அத்தகைய பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்ய ஆணுக்கு உரிமையுள்ளது என்று கருத்து நியாயப்படுத்தப்படுகிறது. ஆணாதிக்கச் சிந்தனையுடன் பின்னிப்பிணைந்ததுதான் சாதிய கட்டமைப்பு.
தந்தை, மாமன், அண்ணன், தம்பி ஆகியோரே பெண்ணின் வாழ்க்கை இணையைத் தீர்மானிக்க முடியும். ஆணின் ஒப்புதல் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனது வாழ்க்கை இணையாக எந்த ஆணையும் ஒரு பெண்ணால் தேர்ந்தெடுக்க இயலாது.
தான் விரும்பிய பெண் தன்னை ஏற்க மறுத்த உடன் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ள வாலிபர், சமூகத்தின் மனநோய் ஒரு தனி மனிதனை எந்தளவு பாதித்துள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து வெளிவர இயலாத சமூகம் எப்படிக் கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க முடியும்?
பண்பட்ட, நாகரீக வளர்ச்சியடைந்த சமூகத்தில் இத்தகைய சம்பவம் நிகழ வாய்ப்பில்லை.
இத்தகைய சம்பவம் நமது சமூகத்தில் தொடர்ந்து நிகழ்கிறது என்பது நாம் இன்னும் பண்பாட்டுத் தளத்தில் மேம்படவில்லை, சமூகம் நாகரீகமடையவில்லை என்பதன் வெளிப்பாடு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியத்திற்கு எதிராக இந்தியச் சமூக விழுமியம் அமைந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் சமூகத்தின் விழுமியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட தேவையான சூழலை உருவாக்க, அதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்ள, களமாக அமைந்தவைதான் கல்வி வளாகங்கள்.
தேசிய கல்வி ஏற்பாடு 2005 (National Curriculum Framework 2005 – NCF-2005) அதைத் தான் பாடத்திட்டதின் வாயிலாக நிறைவேற்ற வழிகாட்டி உள்ளது.
நமது சமூகம் குற்றவாளியாக நிற்கிறது என்பதை நாம் உணர வேண்டும். காய்ச்சல் எப்படி உடலில் உள்ள நோயின் அறிகுறியோ அவ்வாறே அந்த ஆசிரியர் கொலை சமூக நோயின் அறிகுறி.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிறார் திருவள்ளுவர்.
நோய்க்கான தீர்வு குறித்து விவாதிக்கப் போகிறோமா? அல்லது நோயை வெளிப்படுத்திய அறிகுறி குறித்து மட்டுமே விவாதிக்கப் போகிறோமா? என்பதை அனைவரும் இணைந்து சிந்திக்க வேண்டிய தருணம்.
சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை. ஒரு சாதியில் பிறந்தவர் மற்றொரு சாதிக்குத் தீண்டத்தகாதவராகக் கருதப்படுகிறார். சாதிகளுக்கிடையில் தீண்டாமையின் அளவுகோல் வேறுபடலாம். தீண்டாமையே சாதி முறைமையின் அடிப்படை.
சாதியைப் பாதுகாக்கும் கருவியாக பெண் கருதப்படுகிறார். அதனால்தான், பெண் சுதந்திரமாக, சுயமாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற கருத்தியலின் அடிப்படையில் பெண்ணிற்கு ஆண் அரணாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறை பெண்ணிற்குப் பாதுகாப்பா? அல்லது தண்டனையா? என்பதைச் சமூகம் சிந்திக்க வேண்டும். பெண்ணுக்கு ஆண் அரண் என்பது பெண் பாதுகாப்பிற்கான ஒரு கருத்தாகத் தோற்றமளிக்கலாம். இத்தகைய கருத்தியல் விவாதத்திற்கு உட்பட வேண்டும்.
அத்தகைய விவாதம் ஆரோக்கியமாக நடக்கும் இடங்களாகக் கல்வி வளாகச் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முன் வைக்கும் கோரிக்கைகள்:
- சமூக மற்றும் பாலின சமத்துவம் பாடத்திட்டதின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்:
சமூக சமத்துவத்தின் (Social Equity) ஒரு பகுதியாக பாலின சமத்துவம் (Gender Equity) பாடத்திட்டதின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டிற்கு வரவேண்டும்.
சாதி மற்றும் பாலின பாகுபாடுககள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரானவை என்பதை உணர்ந்து, சமூகத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் சமத்துவம் நிலவிடத் தேவையான தெளிவை மாணவர்கள் பெற்றிருக்கிறார்களா? என்பதை அறிய, சமூக மற்றும் பாலின சமத்துவம் அனைத்து நிலைகளிலும் கல்வி மதிப்பீட்டின் ஒரு பகுதியாக அமைய வேண்டும். (Social and Gender Equity should be part of evaluation of education at all levels of education).
- அரசு ஊழியர்களுக்கு உரிய சட்டப்படியான நிவாரணம் கொலையுண்ட ஆசிரியருக்கு வழங்க வேண்டும்:
அரசுப் பள்ளியில் பணியில் இருந்தபோது, அரசுப் பள்ளி வளாகத்தில் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு ஆசிரியர் இறந்துள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14ன் படி,
அரசுப் பணியில் இருக்கும்போது உயிர் இழந்துள்ள ஆசிரியர், நிரந்தர ஊழியரா? அல்லது தற்கால ஊழியரா? என்ற பாகுபாடு பார்க்கப்படாமல், அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், இறந்த ஊழியருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் கிடைக்கக் கூடிய சட்டப் படியான அனைத்து உரிமைகளும் இறந்த ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் முன் வைக்கும் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசு வழங்க வேண்டும்.
அதற்குரிய சட்டம் மற்றும் நிர்வாக நடைமுறையை அரசு உருவாக்கிட வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21ன் படி, இறந்த பின்னர் கூட இறந்தவரைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். கருணையின் அடிப்படையில் பொது நிவாரண நிதியிலிருந்து உதவுவது கண்ணியமிக்க நடைமுறையாக அமையாது. கொலையுண்ட ஆசிரியருக்கு அரசு ஊழியர்களுக்கு உரிய சட்டப்படியான நிவாரணம் என்பதே கண்ணியத்தை உறுதிசெய்யும்.
- பள்ளி வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:
பள்ளிக் கல்வித் துறை நிரந்தர ஊழியராக, பள்ளிக்கு ஒரு காவலர் இருந்திருந்தால், பள்ளிக்குத் தொடர்பில்லாத வெளி மனிதர்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதைத் தடுத்திருக்க முடியும்.
பள்ளிக்குள் செல்லும் புதிய நபர்களைச் சோதித்து அனுமதிக்கும் நடைமுறை இருந்திருந்தால் ஆயுதம் உள்ளதைக் கண்டுபிடித்து, நுழைய விடாமல் தடுத்திருக்க முடியும்.
நடந்த சம்பவம் தந்துள்ள அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
சட்டவிரோதச் செயல்களுக்குச் சாதியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியான அணிதிரட்டல் மற்றும் மோதல்களை உருவாக்கி வருகின்றனர் என்பதைத் தொடர்ந்து நிகழும் பல்வேறு சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. போதைப் பொருட்கள் பள்ளி வளாகத்தில், வளாகத்திற்கு அருகில் பயன்படுத்தப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளிவருகிறன்றன.
பள்ளி வளாகங்கள் இத்தகைய தீய நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்காமல் பள்ளி வளாகத்திற்கான காவல் பணியாளர் பணியிடம் ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.
குழந்தைப் பருவ மாணவர்களைக் கையாளும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற நபர்கள் பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களாக நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும்.
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களால் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. பணிச் சுமை, ஊதியப் பற்றாக் குறை, ஒப்பந்த நிறுவனம் தரும் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளால் ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம், மன அழுத்தத்திற்கு உண்டான ஊழியரால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் .
ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நிரப்பப்பட வேண்டும்.
- நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது:
நிரந்தரப் பணியில் தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளிக் கல்வித் துறையில் செலவுகளுக்கு அரசிற்கு வரும் நிதி வருவாய் போதவில்லை என்பது உண்மை என்றால், பள்ளிக் கல்வித் துறை நிதி தேவை மற்றும் அரசின் நிதி நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, தேவைப்படும் நிதியை மக்களிடம் இருந்து பெறலாம். அதற்குரிய சட்டப்படியான, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
சிக்கலுக்கான அன்றைய தீர்வைத் தாண்டி, ஒவ்வொரு கல்வி வளாகமும் பாதுகாப்பான பள்ளி வளாகம் என்பதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை