”இதை காரணமாக சொல்லித்தான் பாலியல் டார்ச்சர் செய்கிறார்” – மதுரை காமராஜர் பல்கலையிலிருந்து மீண்டும் ஒரு அபயக்குரல் !
பணியிடத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெண் ஊழியர் ஒருவர் அனுப்பியிருக்கும் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே, அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்களால் பெயர் கெட்டுப்போய் கிடக்கும் மதுரை காமராஜர் பல்கலையிலிருந்துதான் இந்தக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது என்பது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், முதுகலைப்பிரிவு தேர்வுத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் R.V. சுகன்யா சுபாஷிணி என்பவருக்கு, அதே பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வரும் டி. தர்மராஜ் என்பவர் தனக்கு பல்வேறு வகையில் பாலியல் ரீதியில் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக, முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வணக்கம் R.V. சுகன்யா சுபாஷிணி ஆகிய பல்கலைக்கழகத்தில் தேர்வுத்துறையில் கண்காணிப்பாளராக கடந்த 15 வருடங்களாக நான் மதுரை காமராசர் முறையில் பணியாற்றி வருகிறேன். எனது பிரிவில் எந்த வேலையும் பெண்டிங்கில் இல்லை.
எனது கணவர் 2020ஆம் ஆண்டு காலமாகிவிட்டார் நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் கடன் தொல்லையில் வாழ்ந்து வருகிறேன். இச்சூழலில் தேர்வாணையர் திரு. டி. தர்மராஜ் அவர்கள் என்னை அவரது அறையில் தனியாக அழைத்து இரட்டை அர்த்தங்களில் பேசுவது; விடுமுறை நாட்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பணிக்கு வரச்சொல்வது; பின்பு அனைவர் முன்பும் பெண் என்று மட்டம் தட்டி பேசுவது; உடல் மொழியாகவும் வாய் மொழியாகவும் பாலியல் அர்த்தங்களில் பலர் முன்னிலையில் பேசியிருக்கிறார் அதை எனது சக ஊழியர்களான கண்காணிப்பாளர்கள் பார்த்தசாரதி மற்றும் சுரேஷ் அவர்கள் நேரில் பார்த்துள்ளார்கள். இதையெல்லாம் வெளியில் சொன்னால், உங்களது வேலையை தொலைத்து விடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறார்.
தற்போது கடந்த நவம்பர் மாதம் எனது சொந்தக்காரர் இறந்துவிட்டதாலும் கணவரின் காப்பீடு வழக்கு சம்பந்தமாக 05.11.2024 முதல் 08.11.2024 மற்றும் 21.11.2024 முதல் 22.11.2024 ஆகிய நாட்களுக்கு ஈட்டிய விடுப்பு எடுத்திருந்தேன்.
இந்த விடுப்பை காரணம் காட்டி நான் சொல்வதை நீ கேட்க மாட்டாய் எனது சாதிக்காரர் உறவினர்தான் மயில்வாகணன் கன்வீனர்குழு உறுப்பினர் அவர்களிடம் சொல்லி கமிட்டி வைத்து உனது வேலையை தொலைத்துவிடுகிறேன் என்று சொன்னார்.
நான் கணவரை இழந்தவர் என்பதால் தேர்வாணையர் உயர் அதிகாரி என்பதாலும், அவர் ஆட்சி மன்ற உறுப்பினர் என்பதால் புகார் செய்தால் எனது வேலை போய் விடும் என்ற பயத்தாலும் எனது வேலையை இழந்துவிட்டால் என் இரண்டு பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடும் என்பதால் தேர்வாணையரின் செயல்களால் மன உளைச்சலோடும், உடல் நலம் பாதிக்கப்பட்டும், சுயமரியாதையை இழந்தும் நடைபிணமாக பணியாற்றி வாழ்ந்து வருகிறேன். எனவே தேர்வாணையர் திரு. டி. தர்மராஜ் அவர்கள் மீது கமிட்டி அமைத்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்பதாக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அறிய தேர்வாணையர் தர்மராஜை தொடர்புகொண்டோம். “சுகன்யா சுபாஷினி என்ற பெண் எனது துறையில் பணியாற்றுகிறாரா? அப்படியா? அப்படி யாரும் இல்லையே?” என்றவரிடம், முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் புகார் அனுப்பியிருப்பதாக சொன்னதும் இணைப்பைத் துண்டித்தார். மீண்டும் நாம் தொடர்புகொண்டபோது, “நான் முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன்.” என்ற பதிலோடு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
நிறைவாக, சுகன்யா சுபாஷினியிடம் பேசினோம். “நான் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தது உண்மை. அதில் சொல்லியிருக்கும் விசயம் அனைத்தும் உண்மை. நான் நான்கு வருடங்களாக அங்குதான் பணியாற்றி வருகிறேன். பல்கலைகழக வருகைப் பதிவேட்டை பாருங்கள். அங்கு பணியாற்றும் சக பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரித்து பாருங்கள். நான் அங்கு பணிபுரிகிறேனா, இல்லையா என்று சொல்வார்கள்.” என்றார்.
இதே பல்கலை கழகத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இந்த விவகாரம் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை மட்டுமல்ல தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அரசு தனி கமிட்டி அமைத்து பல்கலைகழகம் முழுவதும் விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.