விருதுநகரில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து 5 வயது மகன், தாய் நீரில் மூழ்கி பலி !
சிவகாசி விசுவநத்தம் கிராமம் அருகே செப்டிக் டேங்க் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் நிரம்பி இருந்ததால்,விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்நத்தம் பெரியார் நகரை சேர்ந்த கணேசன் பட்டாசு கடை நடத்தி வருகிறார், இவரது மனைவி ராஜேஸ்வரி வயது (32) இவர் தனியார் பட்டாசு ஆலையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற 5 வயதுடைய ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து ராஜேஸ்வரி தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தின் போது அருகே வீடு கட்டும் பணிகளுக்காக புதிதாக செப்டிக் டேங்க் குழி இரண்டு தோண்டி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் செப்டிக் டேங்க் குழியில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சிறுவன் தர்ஷன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தேங்கி இருந்த செப்டிக் டேங்க் குழியில் தண்ணீரில் தவறி விழுந்து உள்ளார்.
வெகு நேரம் ஆகியும் தனது மகனை காணாததால் தாய் அருகில் உள்ள குழியில் பார்த்தபோது, மகன் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து மகனை காப்பாற்ற நினைத்து அதே குழியில் தாயும் விழுந்து நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இருவரும் பலியாகி உள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இருவரது உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளை மழை நேரங்களில் மிக கவனமாக கண்காணித்து கவனித்து இருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திருக்கலாம்.
— மாரீஸ்வரன்.