அங்குசம் பார்வையில் ‘விடுதலை-பாகம்-2’ திரைப்படம்
தயாரிப்பு : ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட்’ எல்ரெட் குமார் & கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி. டைரக்ஷன் : வெற்றிமாறன். இசை : இசைஞானி இளையராஜா. தமிழ்நாடு ரிலீஸ் : ரெட் ஜெயண்ட் மூவிஸ். நடிகர்—நடிகைகள் : விஜய் சேதுபதி, சூரி மஞ்சுவாரியர், கிஷோர் கென் கருணாஸ், ராஜீவ்மேனன், கெளதம் மேனன் இளவரசு, பாலாஜி சக்திவேல், சேத்தன், பவானி ஸ்ரீ, இயக்குனர் தமிழ், ஷரவண சுப்பையா, வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட், அருள்தாஸ் ஒளிப்பதிவு : இரா.வேல்ராஜ், எடிட்டிங் : ராமர், ஆர்ட் டைரக்டர் : ஜாக்கி, ஆடைவடிமைப்பு : உத்ரா மேனன், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் : பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா, ஃபீனிக்ஸ் பிரபு, வி.எஃப்.எக்ஸ் : ஹரிகரசுதன், சவுண்ட் டிசைன் : டி.உதயகுமார், சவுண்ட் எஃபெக்ட்ஸ் : பிரதாப். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & யுவராஜ்.
படத்தின் முதல் காட்சியே பெருமாள் வாத்தியாரிடம் போலீஸ் அதிகாரி கெளதம் மேனன் ஆங்கிலத்தில் விசாரிப்பது தான். அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி பிரமிக்க வைக்கிறார் பெருமாள் வாத்தியார் என்ற விஜய் சேதுபதி. அதன் பின் போலீஸ் அவரை முழு நிர்வாணமாக்கிய பின் தரையில் உட்கார்ந்த நிலையிலேயே கால்மேல் கால் போட்டுக் கொண்டு பேசுவது கம்பீரம். அதன் பின் உடைகளை அணிந்தபடியே பெருமாள் வாத்தியார் ‘மைதிலி என்னைக் காதலி’யின் “என் ஆசை மைதிலியே…..”ன்னு லைட் மூவ்மெண்டில் ஒரு டான்ஸ் போடுகிறாரே பார்க்கலாம். அடேங்கப்பா ரகம்.
இந்தப் படத்தைப் பொறுத்த வரை மேலே உள்ள நடிகர்கள் பட்டியலில் உள்ளவர்கள் தவிர, போராளிகளாக நடித்தவர்கள், போலீசாக நடித்தவர்கள், பண்ணை அடிமைகளாக நடித்தவர்கள், பண்ணையாரின் சாதிக்காரர்களாக நடித்தவர்கள் என நூற்றுக்கணக்கான நடிகர்களை மிகச் சிறப்பாக நடிக்க வைத்ததற்காகவே வெற்றிமாறனைப் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
‘விடுதலை’ முதல் பாகத்தில் சூரியின் நடிப்புக் கொடி பட்டொளி வீசிப் பறந்ததென்றால், இதில் விஜய் சேதுபதி என்ற நடிப்பரசனின் நவரசக் கொடி கம்பீரமாக பறக்கிறது. அதிலும் சிவப்புச் சட்டையைப் போட்டவுடன் இருக்கையில் எழுந்து நின்று “செவ்வணக்கம் தோழர்” என்று உரக்கக் குரல் கொடுக்கத் தோன்றுகிறது.
உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளின் பக்கம் நிற்கும் சர்க்கரை ஆலை முதலாளியின் மகள் மகாலட்சுமி [ மஞ்சு வாரியர் ] பெருமாள் வாத்தியாரை முதலில் தோழர் என அழைத்து, பின் வாழ்க்கை இணையராக மாறுவது தனிக் காவியம். “நான் ஏன் கிராப் வைத்திருக்கிறேன்”ன்னு நீங்க கேட்கலயே தோழர்” என மகாலட்சுமி கேட்டவுடன், “உங்க முடி உங்க சவுரியம் தோழர், அத நான் கேட்கக் கூடாது “ என பெருமாள் வாத்தியார் சொல்வது, அதற்கு மகாலட்சுமி காரணம் சொல்வது, இதெல்லாம் பெண்களின் சுயமாரியதைச் சுடர்.
சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் இதான் முதன்மையானது, அதிமுக்கியமானது என்றால் அது மிகையில்லை. இனிமேல் இதுபோன்ற சினிமா அவருக்குக் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் .
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் உழைப்பும் அசாத்தியமானதென்றால், இயக்குனர் வெற்றிமாறனின் மக்களுக்கான சினிமாவை, திரை மொழியை பார்வையாளர்களின் மனவெளி முழுவதும் பல்வேறு உணர்ச்சிகளை தனது இசைப் பேராற்றலால் நிரப்பிவிட்டார் இசைஞானி இளையராஜா. பின்னணி இசை தான் விடுதலைக்கான அச்சார கீதம். அதிலும் கருப்புவாக வரும் கென் கருணாஸ், மழை கொட்டும் இரவு நேரத்தில் பண்ணையார் வீட்டுக்குள் நுழையும் காட்சியில் ஆரம்பிக்கிறது ராஜாவின் ராஜாங்கம்.
அதன் பின் க்ளைமாக்ஸ் வரை இசைஞானியின் இசை ராஜாங்கம் தான். “தெனம் தெனமும் உன் நினைப்பு”, “ஒரு மாதியா இருக்கு” பாடல்களை ஒரு மாதத்திற்கு முன்பே கேட்டு சிலிர்ப்படைந்திருந்தாலும் படத்தின் காட்சிகளுடன் பார்க்கும் போது மேலும் சிலிர்க்கிறது உடம்பு. யுகபாரதியின் “பொறுத்தது போதும் பொங்கியெழு” விடுதலையின் அடிப்படை கீதம். வெற்றிமாறன் விதைத்திருக்கும் நல் விதையை செழுமையான பயிராக்கியிருக்கிறார் இசைஞானி.
இசைஞானியுடன் வெற்றிமாறனின் திரைப்பயணம் தொடர வேண்டும் என்பது நல்ல சினிமா, அதுவும் மக்களுக்கான சினிமா ரசிகர்களின் ஆகப் பெரும் எதிர்ப்பார்ப்பு. தொடரும் என்று நம்புவோமாக.
இனிமே ‘காவி சென்சாரின் காவாலித்தனம் பற்றிப் பார்ப்போம்…..
‘விடுதலை-2’ படத்தின் டிரைலரிலும் சில விளம்பர டிசைன்களிலும் பெருமாள் வாத்தியாரும் மகாலட்சுமியும் வாழ்க்கை உறுதி மொழி எடுத்து திருமணம் செய்து கொள்ளும் காட்சியின் பின்னணியில் சிவப்புக் கொடியில் வெள்ளை எழுத்துக்களில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம்’ என இருந்தது. ஆனால் படத்திலோ ’இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற வார்த்தையை ‘ப்ளெர்’ பண்ணச் சொல்லியிருக்கிறது சென்சார். அதே போல் கம்யூனிஸ்ட் கொடியில் இருக்கும் கதிர் அரிவாள் சின்னத்தையும் சிதைத்து காவாலித்தனம் பண்ணியிருக்கிறது. ஆனால் வெற்றிமாறனோ ‘மக்கள் படை’, தமிழ்நாடு சோசலிக் கட்சி’ என ப பெயர் வைத்தும் பெரியார், மார்க்ஸ், சிங்காரவேலர் படங்களை பின்னணியில் காட்டியும் காவிக் கும்பலை கடுகடுப்பாக்கியுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு கட்சி, அதுவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி, மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சி, இப்போது கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, இன்னும் சொல்லப் போனால், இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகராக முதுபெரும் தோழர் இந்திரஜித்குப்தா இருந்த ஒரு கட்சி, இந்த காவி சென்சார் கும்பலுக்கு சமூக விரோத இயக்கமாக தெரிகிறதென்றால்…. இவர்களையெல்லாம் எதால் அடிப்பது… ?
இயக்குனர் வெற்றிமாறனோ.. வசனங்களால் செருப்பால் அடித்து துவைத்திருக்கிறார்… உதாரணத்திற்கு சில காட்சிகளின் வசனங்கள்.
“ படிக்காத எங்கள மாதிரி ஆளுங்க தண்டவாளத்தில் தலைவச்சுப் படுத்ததால தான் ஒன்ன மாதிரி ஆளுங்க இந்த இடத்துல உட்கார்ந்திருக்க.. திங்கிறதையும் பேசுற மொழியையும் நீ மாத்திக்கிட்டா… ஒன்னய அவய்ங்க ஏத்துக்குவாய்ங்கன்னு நினைக்கிறியா?”
“எல்லாம் விதின்னு விதி மேல பழியப் போட்டு உங்கள அடிமையாவே வச்சிருக்கான்”, ‘வன்முறை உங்க மொழி, அதை எங்களால பேச முடியும். ஆனா நாங்க அதை விரும்பல”
நம்ம மொழியையும் பாரம்பரியத்தையும் எவன் அழிக்க வர்றானோ.. அவன் தான் சமூக விரோதி, தீவிரவாதி. அதான் தீவிரவாதம்”
”கம்யூனிஸத்துடன் திராவிட இயக்கமும் வளர்ந்ததால மக்களிடம் சுயமரியாதை உணர்வு பெருக ஆரம்பிச்சது”
கருப்பு—சிவப்புன்னு சொன்னத்தானே நீ ‘மியூட்’ பண்ணுவ… நான் சிவப்பு—கருப்புன்னு வசனம் வைக்கிறேன்னு நீட்டி அடிச்சுட்டாரு வெற்றிமாறன்.
இன்னும் இன்னும் ஏராளம்… அவை வெறும் திரை வசனங்களல்ல… வரலாற்று ஆவணங்கள்… இன்றைய தலைமுறைக்கு அரசியல் பாடப்புத்தங்கள்…
— மதுரை மாறன்.