‘நம்மை காப்போம்-48’ மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம் !
விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் ‘நம்மை காப்போம்-48’ மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பெற்று முன்மாதிரியாக விளங்கி வருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் NK 48 திட்டத்தின் கீழ் சுமார் 16 கோடி ரூபாய் செலவில் 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு பயனடைந்துள்ளனர் – மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பேட்டி*
கடந்த டிசம்பர் 2021 ஆம் ஆண்டு இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 என் கே 48 திட்டம் முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார் அது தற்போது வரை மாநிலங்கள் முழுதும் உள்ள மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் காயம்பட்டவர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ரூபாய் ஒரு லட்சம் வரை எவ்வித கட்டணமின்றி உயிர் காக்கும் சிகிச்சைகள் பெற இயலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் காயம் அடைவோருக்கு ஒரு லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 24 ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கு 2 லட்சம் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பாக கையாண்டு முதலிடம் வகித்து வருகிறது. இதனை பறைசாற்றும் வகையில் சென்னையில் நடந்த விழாவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் சரவணகுமார் ஆகிய இருவரும் துறை அமைச்சரிடம் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் (NK 48) சிறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் NK 48 திட்டத்தின் கீழ் சுமார் 16 கோடி ரூபாய் செலவில் 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக 24 மணி நேரமும் சிறந்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். 6 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை கொண்டு தனிக்குழு பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் சிறப்பாக செயல்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் சரவணகுமார் கூறுகையில்,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் அவசர சிகிச்சை பிரிவில் குறிப்பாக சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி ( TAEI ) எனப்படும் திட்டத்தோடு ஒருங்கிணைந்து (zero delay) எனப்படும் உடனடியாக அவசர சிகிச்சை அளிப்பதோடு, நோயாளிகளை நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள் , பச்சை என மூன்று மண்டல்களாக வகைப்படுத்தப்பட்டு உடனடி சிகிச்சைகள் அளித்து வருகிறோம்.
அதேபோல நோயாளிகளின் தன்மைக்கு ஏற்ப 6 மணி நேரத்திற்குள் அவசர அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், இங்கேயே எல்லா விதமான இரத்தம் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் எடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயர்தர மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய நோயாளிகள் உயிருக்கும் உடலும் காப்பாற்றப்பட்டு வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவசர சிகிச்சை துறையில் பட்ட மேற்படிப்பு MD தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு நாலு மாணவர்கள் விதம் பயிற்சி பெறுகின்றனர். அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் முழு சிகிச்சை விபரங்கள் கணினி மயமாக்கப்பட்டு பதிவேட்டில் (Trauma Registry) பதிவேற்றம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழு நமது அவசர சிகிச்சை துறையில் செயல்படுகளை ஆய்வு செய்து மிகவும் பாராட்டியதோடு, “தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான அவசர சிகிச்சை துறை ” என்ற சான்றிதழ் அளித்து மற்ற மருத்துவ கல்லூரிகளின் அவசர சிகிச்சைத்துறை மருத்துவர்கள் இங்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அதன் பேரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.