“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” – கனிமொழி கருணாநிதி எம்.பி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் (29/01/2025) அன்று தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கனிமொழி எம்.பிக்கு வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினர். நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வீரவாளை தொண்டர்களுக்கு மத்தியில் கனிமொழி எம்.பி உயர்த்தி காட்டினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: திராவிடம், திராவிட மாடல் என்று கேட்டலே அவர்களை கலங்க வைக்கும் ஒரு மாடலாக உள்ளது. ஏனென்றால் நமக்கு பகைவர்கள் நமக்கெதிராக திராவிடம் என்பதை உடைக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமானது. அதனை உடைக்க வேண்டும் என நினைப்பவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள்.
ஆனால் திராவிட மாடலை எதிர்க்க கூடியவர்கள் யாருக்கு எதுவும் கிடைக்கக்கூடாது என்று நினைக்க கூடடியவர்கள். தனக்கு வேண்டியர்கள் மற்றும் கிடைக்க வேண்டும். மறுபடியும் இந்த தமிழ்நாடு 200 – வருசத்திற்கு முன்னாடி எந்த ஒரு நிலையில் இருந்ததோ அதே இடத்திற்கு கொண்டுபோய் நம்மை மறுபடியும் நிறுத்தி விட வேண்டும் என்று நினைக்கூடியவர்கள் நாம் எல்லாருக்கும் எல்லாம் என்று நினைக்கிறோம். ஆனால் அங்கு யாருக்கும் எதுவும் கிடையாது நாங்க மட்டும் வைத்துக் கொள்வோம். இது தான் திராவிட மாடலுக்கும் அவங்க மாடலுக்கும் இருக்கூடிய வித்தியாசம்.
எல்லா நிறுவனங்களையும், தொழிற்சாலைகள், சின்ன சின்ன நிறுவனங்களை நிறுத்திவிட்டு இரண்டு பேர் மட்டும் தான் தொழில் நிறுவனங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் என்னாங்கோளோடு செயல்படக்கூடியது தான் ஒன்றிய பாஜக ஆட்சி. அந்த இரண்டு பேர் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதே போல யாரெல்லாம் இந்த சமூகத்தில் பிறப்பால் உயர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, ஆவங்களுக்கு மட்டும் தான் கல்வி மற்றும் வாய்ப்புகள் உயர்ந்த பதவிகள் அவர்கள் மட்டும் தான் இந்த நாட்டில் அதிகாரத்தில் இருக்கக் கூடியங்களாக, போற்றக்கூடியவர்களாக, மதிக்கக்கூடியவர்களாக உள்ளனர். இதையெல்லாம் உடைத்துத்தான் திராவிட இயக்கம். யாருக்கெல்லாம் கல்வி வேலை வாய்ப்பில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தந்தது திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர், ஆனால், பெரியார் மக்களுக்காகப் போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்காதவர். மக்களுக்காக போராடியதிற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள் ஆனால் நான் செய்தது தவறல்ல என சிங்கம் போல கர்ஜித்தவர் பெரியார்.
டங்க்ஸ்டன் திட்டம் திமுக முயற்சியால் கைவிடப்பட்டுள்ளது இந்த திட்டம் வர காரணமாக அந்த திட்டம் குறித்த மசோதாவை ஆதரித்தது அதிமுக. அவர்கள் இதுபற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கை கட்டி ஆதரித்தது அதிமுக அரசு. சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே எடப்பாடி வருவார் பின்னர் எங்குப் போவார் என தெரியாது இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
பணம் தந்தாலும் தராவிட்டாலும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போடாது என கூறியவர் நமது தமிழக முதல்வர். 50 ஆண்டுக்கால அரசியல் பாரம்பரியத்தோடு செயல்பட்டு வரும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக் கூடிய தலைவர்கள் தமிழகத்தில் இல்லை.
மாறாக தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலுக்கு நம் முதல்வர் தள்ளப்பட்டு இருக்கிறார். தமிழகத்திற்கு பொழுது போக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார். அவர் ஆளுநராக இல்லை அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. தமிழ் மொழியையும் தமிழக மக்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளது.
பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஒரு ஆளுநரை போல் செயல்படாமல் அரசியல்வாதியாகவும், எதிர்க்கட்சியில் இருப்பவர் போன்று செயல்படுகிறார். தேசிய கீதத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறி, அதே தேசியகீதத்தை அவமதிக்கும் நோக்கிலும், ஆளுநரின் பதவி என்ன அதனுடைய மாண்பு என்ன என்று தெரியாமல் சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே எழுந்து போய்விடுகிறார். பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாகிகளை கூட நியமிக்க முடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கேட்கும் அளவிற்கு ஒரு ஆளுநரை கொண்டு தமிழ்நாட்டில் நாம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று பேசினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னதாக, சுரண்டை நகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார், முன்னாள் அமைச்சரும், சுற்றுச்சூழல் அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தென்காசி தெற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ராஜன் ஜான் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
— மணிபாரதி.