ரூ.60 முதலீட்டில் பல கோடி கனிமவள கொள்ளை 10 லாரி 2 ஜேசிபி இயந்திரம் பறிமுதல் !
தமிழக அரசு விவசாயம், மண்பாண்டம், தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஏரி,கம்மாய், நீர்தேக்கங்கள் மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகளில் காணப்படும் வண்டல்மண், களிமண், நிலத்தின் மேற்பகுதியில் படிந்துள்ள மண்களை மட்டும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு 25.06.2024 அன்று தமிழ்நாடு கனிம வள சிறு சலுகை சட்ட விதிகளின் கீழ் சில நடைமுறைகளை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு , அதன்படி வண்டல் மண், களிமண், எடுக்க உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் மண்பாண்டம் செய்வோர் ரூ.60 செலுத்தி அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் பயனாளர்களுக்கு 10 நாட்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய் வட்டாட்சியர்,மண் பரிந்துரைக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு வயல்வெளி நிலம் என்றால் 75 கனமீட்டர் அதாவது 25 டிராக்டர் லோடுகள், மற்றும் மானாவாரி நிலம் என்றால் 90 கனமீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகள் என்ற கணக்கு அளவு படியும், மட்பாண்ட தொழிலுக்கு தல நபர் ஒன்றுக்கு 60 கனமீட்டர் அதாவது 20 டிராக்டர் லோடுகள் வீதமும் இலவசமாக எடுத்துச் செல்லலாம் அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள அரசின் அனைத்து விதிகளை மீறி பல கோடி மதிப்பில் இயற்கை வளங்களை சுரண்டி மிகப்பெரிய அளவில் கனிமவள கொள்ளை அரங்கேறி உள்ளது இங்கே !!!

விருதுநகர் அருகே உள்ள இ.குமரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்காக களிமண் தேவை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேப்பிலைபட்டி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண் இ.சேவை மையம் மூலம் மண் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆவணங்களை பரிசீலனை செய்த சாத்தூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய பயன்பாட்டிற்காக களிமண் எடுக்க அனுமதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனவரி 28 மதியம் 12 மணியளவில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் வட்டாட்சியர் ராமநாதன், சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டபோது,

விவசாய பயன்பாட்டிற்காக எடுக்க வேண்டிய களிமண்ணைத்தாண்டி, கடந்த பல மாதங்களாக அந்த ஒரே பகுதியில் நிலத்திற்கு கீழே 20 அடி உயரம் தோண்டி கிலோமீட்டர் கணக்கில் கிராவல் மண் எடுத்து சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அஜிதா அளித்த புகாரின் பேரில் வச்சகாரப்பட்டி காவல்துறையினர் கனிமவள கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட 10 லாரிகள் 2 ஜேசிபி 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிவரஞ்சனி மற்றும் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பகுதி வாரியாக மண் எடுப்பதற்கு ஏதுவாக மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை, வத்திராயிருப்பு 49, சிவகாசி 11, இராஜபாளையம் 44, காரியாபட்டி,16 திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்தூர், 28 திருவில்லிபுத்தூர் 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12, என மொத்தம் 10 பகுதிகளில் உள்ள 283 நீர் நிலைகள் தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டு வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த அனைத்து நீர் நிலைகளிலும் அரசின் விதிமுறைகள் பின்பற்றி மண் எடுக்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.