இதற்கு பயந்துதான் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தோம் – அண்ணாமலை பேச்சு !
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி, நாயக்கன்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாஜக ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
அ.வள்ளாளப்பட்டி கிராம அம்பலகாரர் மகாமுனி பேசுகையில் “பிரதமர் மோடி வரை எடுத்து சென்று டங்ஸ்டன் திட்டத்தை அண்ணாமலை ரத்து செய்து தந்துள்ளார. மக்கள் வேதனைகளை புரிந்து கொண்டு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து கொடுத்துள்ளார். ஊர் மக்களை அழைத்து சென்று மத்திய அமைச்சரை அண்ணாமலை சந்திக்க வைத்தார்.” என பேசினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில் “மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்வது எளிதான காரியமல்ல. 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து அமைச்சர் கிஷன் ரெட்டி நடவடிக்கை எடுத்தார். இப்பகுதி மக்களின் போராட்டம் மிக நியாமான போராட்டம். பிரதமர் மோடி தமிழக மக்களின் உணர்வோடு கலந்தவர். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசு. பாஜக பாராட்டு விழாக்களுக்கு செல்லாது. மக்களின் கோரிக்கைகளை ஏற்று நாங்கள் பாராட்டு விழாவிற்கு வந்துள்ளோம்.
பிரதமர் மோடி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து என்றும் தமிழக மக்களோடு இருக்கிறேன் என நிரூபித்து உள்ளேன். சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யவில்லை. மக்களுக்காக டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து உள்ளோம். மாநில அரசுக்கு பயந்து டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. மக்களின் அன்புக்கு பயந்து திட்டத்தை ரத்து செய்துள்ளோம். தமிழ்நாடு அரசு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் மாநில அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தவறு நடந்தால் சுட்டி காட்டுங்கள். மத்திய அரசு திருத்தி கொள்ளும். மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள். மக்களுக்கு நல்லதை செய்வோம். இந்தியாவுக்கே சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது” என பேசினார்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில் “பிரதமர் மோடி தமிழ் மீது பற்று கொண்டவர். தமிழர்களின் செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்துள்ளார். ஜல்லிகட்டு போட்டியை திரும்ப கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. அரசியலுக்காக பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை. தமிழ் மக்களின் மீதான அன்பால் தமிழ் மக்களுக்கு உதவிகளை செய்கிறார் ” என பேசினார்.
— ஷாகுல் , படங்கள் : ஆனந்தன்.