அங்குசம் பார்வையில் ‘ராஜபீமா’
தயாரிப்பு : ‘சுரபி பிலிம்ஸ்’ மோகன். டைரக்ஷன் : நரேஷ் சம்பத். நடிகர்-நடிகைகள் : ஆரவ், நாசர், ஆஷிமா நர்வல், கே.எஸ்.ரவிகுமார், யாஷிகா ஆனந்த், யோகிபாபு, ஓவியா, பாகுபலி பிரபாகர், சாயாஜி ஷிண்டே, ராகவன். ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ்குமார், இசை; சைமன் கே.கிங், எடிட்டிங் : கோபிகிருஷ்ணா. பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா.
சிறுவயதிலிருந்தே யானைகள் என்றால் ராஜாவுக்கு [ஆரவ்] அலாதி பிரியம். பள்ளியில் படிக்கும் போது, திடீரென தனது அம்மா மறைந்துவிட, பித்துப் பிடித்தவன் போல் ஆகிறான் ராஜா. “எதிர்பார்ப்பு இல்லாத அன்பு செலுத்தும் அம்மா திடீரென தன்னைவிட்டுப் போனதால் இப்படி ஆகிவிட்டான். அதே போன்ற அன்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவான்” என ராஜாவின் அப்பா சிங்கராயரிடம் [ நாசர் ] சொல்கிறார் டாக்டர். ஒருமுறை பள்ளியிலிருந்து திரும்பும் போது, காட்டிலிருந்து தப்பி வந்த யானை ஒன்று ஊருக்குள் அட்டகாசம் செய்ய, அதை தனது அன்பால் சாந்தமாக்குகிறான் ராஜா.
இதைப் பார்த்த நாசர், மகனுக்காக யானை ஒன்றை ஆசையாக வாங்கிக் கொடுக்கிறார். அதற்கு பீமா என பெயரிட்டு அழைத்து, அதனுடன் அன்பாக பழகி, தனது சொல்லுக்குக் கட்டுப்படும் நண்பனாக்குகிறான் ராஜா. யானை தந்தம் கடத்தும் கும்பல் ஒன்று நீண்டு வளர்ந்திருக்கும் பீமாவின் தந்தத்திற்காகவும் முதல்வர் ஆசையில் இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரின் தோஷ பரிகாரத்திற்காகவும், அரசு நடத்தும் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்கின்றனர். தனது அன்பு நண்பன் பீமாவை ஆரவ் மீட்டாரா என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ராஜபீமா’.
பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அதைவிட்டு வெளியே வந்த பின்னும் ஓவியாவை சின்சியராக லவ் பண்ணினார் ஆரவ். அந்த பழைய பாசத்திற்காக இப்படத்தில் ஓவியாவை ஒரு சீனில் டான்ஸ் போட வைத்துவிட்டார் ஆரவ். பீமாவுக்காக ஆவேசமாகி களத்தில் இறங்கும் ஆக்ஷன் சீன்களில் நல்ல பெர்ஃபாமென்ஸ் பண்ணியிருக்கும் ஆரவ்வுக்கு நடிப்புதான் ரொம்ப கஷ்டமாக இருக்கும் போல. ஹீரோயின் ஆஷிமாவுடன் ரொமான்ஸ் சீனில் ரொம்பவும் தத்தளிக்கிறார். இது அப்பட்டமாக சீனில் தெரிகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆரவ்வின் அப்பாவாக நாசரும் கவனிக்க வைக்கிறார். வனத்துறை அமைச்சராக கே.எஸ்.ரவிகுமார் தான் அதகளம் பண்ணுகிறார். அதிலும் பிச்சைக்காரன் யோகிபாபுவை செம்ம ரேக்கு ரேக்கியிருக்கிறார். ”முடிஞ்சா நீங்க சிரிச்சுப்பாருங்க” என்ற ரீதியில் தான் யோகிபாபுவின் காமெடி இருக்கு.
இடைவேளை வரை ஏதோ நியூஸ் ரீல் போலத்தான் படம் இருக்கு. அதற்குப் பின் தான் திரைக்கதை சூடுபிடித்து, க்ளைமாக்ஸ் வரை அதே டெம்போவுடன் போகிறது. யானைத் தந்தம் கடத்தும் க்ரைம் டெக்னிக்கையும் வன உயிர்களும் நமது நண்பர்களே என டீடெய்லாக சொன்ன டைரக்டர் நரேஷ் சம்பத், ஒட்டுமொத்த சினிமாவாக சுவாரஸ்யப்படுத்த தவறிவிட்டார்.
–மதுரை மாறன்.