தமிழக லாரி உரிமையாளர்களை மிரட்டும் ஆந்திரா, தெலுங்கானா மோசடி கும்பல் !
நடக்காத விபத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்களை மிரட்டி, போக்குவரத்து காவலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல்.
ஆந்திரா, தெலுங்கானா மோசடி கும்பல்களினால் தமிழக லாரி உரிமையாளர்கள் அச்சம்
டிஜிட்டல் உலகில் நாளுக்கு மோசடி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா செல்லும் கனரக வாகனங்கள், லாரிகளிடம் போக்குவரத்து காவல்துறை என்று நூதன முறையில் லாரி உரிமையாளர்களிடம் மோசடி நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூரில் இருந்து வைஷாக் அருகேயுள்ள ஆட்டோ நகருக்கு பிளைவுட் ஏந்தி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அங்கு பிளைவுட்களை இறக்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது, அங்கு வந்த இருவர் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று கூறியது மட்டுமின்றி, தற்போது நோ என்ட்ரி டைம் நகருக்குள்ள செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். அந்த லாரி டிரைவர் சென்னையில் உள்ள தனது உரிமையாளர் ஜெகதீஸ்க்கு தகவல் சொல்ல அவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் லாரியை எடுத்து வரும்படி தெரிவித்துள்ளார். போக்குவரத்து காவல்துறையினர் என்று கூறிய அந்த நபர்கள் லாரியை போட்டோவும் எடுத்துள்ளனர். மேலும் லாரியில் எழுதி இருந்த லாரி அலுவலக எண் மற்றும் உரிமையாளர் செல்போன் எண்களை குறித்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் இரவு 10மணிக்கு லாரி டிரைவர் அங்கிருந்து லாரியை எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.
லாரி சென்ற நேரத்தில் சென்னையில் உள்ள லாரி உரிமையாளர் ஜெகதீஸ் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராம்பாபு பேசுவதாகவும், உங்கள் லாரி ஆட்டோ நகரில் ஒரு இருசக்கர வாகனத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாகவும், வண்டியில் இருந்த கை குழந்தை கீழே விழுந்து காயமடைந்து விட்டது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம், உங்கள் லாரியை எங்கு செல்கிறதோ அங்கே நிறுத்த சொல்லுங்கள் என்று தெலுங்கில் பேசி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் பதற்றம் அடைந்த அந்த லாரி உரிமையாளர் தனது மகன் மூலமாக போக்குவரத்து உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, லாரியை கொண்டு வருங்கள் வழக்கு போட வேண்டும், இல்லை என்றால் சமரசம் முடித்து வைப்பதாகவும், தனது போன் போ எண்ணிற்கு ரூ.2000 போட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தங்களது லாரி டிரைவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.
போக்குவரத்து உதவி ஆய்வாளர் என்று தெலுங்கில் இவர்களை தொடர்பு கொண்டு அந்த தொடர்ந்து தனக்கு பணத்தினை உடனடியாக போடுங்கள், இல்லை என்றால் வழக்கு பதிவு செய்து விடுவோம் என்று கூறியுள்ளார். 2000 ரூபாய் ஆரம்பித்து கடையில் 1000 ரூபாய் போடுங்கள் முடித்து விடுகிறேன் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பம் அடைந்த லாரி உரிமையாளர் ஜெகதீஸ் லாரி உரிமையாளர்கள் சங்கமாக உள்ள E-வாகனம் அமைப்பிற்கு தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை கூறியுள்ளார். இதையெடுத்து அவர்கள் விசாரித்த போது பேசியவர் போக்குவரத்து காவல்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என்றும், பணத்தினை பறிப்பதற்கு இது போன்று செய்வது தெரிய வந்துள்ளது.
இது குறித்து E வாகன் அமைப்பின் தலைவர் கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா செல்லும் கனரக வாகனங்களின் உரிமையாளர்களை பல்வேறு வகையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நடக்காத விபத்திற்கு, விபத்து நடந்தாக கூறி, வழக்கு பதிவு செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி தமிழக லாரி உரிமையாளர்களிடம் அங்குள்ள கும்பல்கள் பணத்தினை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இது போன்று கும்பல்களை கண்டு பயப்பட வேண்டாம், அங்குள்ள காவல் நிலையங்களில் தைரியமாக புகார் கொடுங்கள் என்று லாரி உரிமையாளர்களை அறிவுறுத்தி வருவதாக கூறினார்.
இது போன்ற ஏமாற்று கும்பல்களில் தமிழக லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
— மணிபாரதி.