அதிமுக மீது வீண்பழி சுமத்திய மாவட்ட ஆட்சியர்! ஆவேசத்தில் அதிமுக !
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை நாளைக்குள் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என ராஜன் செல்லப்பாவும், செல்லூர் ராஜுவும் கூட்டாக பேட்டி…
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பிரமுகர் பங்கேற்றதாகவும், அவர் அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கையெழுத்திடவில்லை எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் சார்பில் கூட்டாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது வேதனை அளிக்கிறது, ஜாதி. மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண்பழி சுமத்துகிறார்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்காமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை, அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளோம்.

யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். யாரோ சொன்னதால் தான் அறிக்கையில் அதிமுக பேரை குறிப்பிட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவகாரத்தில் 3 ஆண்டுகளாக பிரச்சினை நடைபெற்று வருகிறது, நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினை இருக்காது, மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை, மாவட்ட ஆட்சியர் நாளைக்குள் அறிக்கையை திரும்ப பெற வேண்டும், அறிக்கையை திரும்ப பெறவில்லை என்றால் ஆட்சியர் மீது வழக்கு தொடர்வோம், மாவட்ட ஆட்சியருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாகவே அறிக்கையில் அதிமுக குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது, நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்” என கூறினார்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் ….

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது, தமிழகத்தில் எந்தவொரு பிரச்சினைகளுக்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது, முதலமைச்சர் பொம்பை முதலமைச்சராக உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகடாக ஆக்கி உள்ளது, எடப்பாடி பழனிச்சாமியின் புகழை கெடுக்கும் வண்ணம் திட்டமிட்டே சதி செயல்கள் நடைபெறுகிறது.
திமுக கொடி கட்டி கொண்டு வாகனத்தில் எதை வேண்டுமானாலும் கடத்தி செல்லலாம், அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் யார் கலந்து கொண்டார் என ஆட்சியர் தெரிவிக்கவில்லை, யாரோ ஒருத்தர் சொன்னார் என அறிக்கையில் அதிமுக பெயர் இடம்பெற்றுள்ளது என கூறினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.