ஆக்கிரமிப்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் ! அவதிப்படும் பயணிகள் !
நகராட்சியாக இருந்து கடந்த 2014 இல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது தஞ்சாவூர் மாநகராட்சி. கடந்த 2019-இல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 850 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை பெரியகோவில், அரண்மனை, மணிமண்டபம், பெரியகோவில், சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்கா, தொல்காப்பியர் சதுக்கம் என சுற்றுலா பயணிகள் தினம் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தை ஒப்பிடும்போது, மிகப்பழமை வாய்ந்த தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் இன்னும் புதுப்பொலிவை பெறவில்லை என்பதுதான் சோகம்.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தை சுற்றி பல்வேறு கிராமங்கள் அமைந்திருக்கின்றன. விவசாயக்கூலித் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்ட கிராமங்கள் இவை. இவர்கள் மருத்துவ தேவை உள்ளிட்டு பல்வேறு காரணங்களுக்காக மாவட்ட தலைநகருக்கு வந்து செல்வதாக இருந்தால், பழைய பேருந்து நிலையத்தைதான் பயன்படுத்தியாக வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவ்வாறு சுமார் நாளொன்றுக்கு பத்தாயிரத்துக்கும் குறைவில்லாத பயணிகள் வந்து செல்லும் பழைய பேருந்து நிலையத்தில், முறையான கழிவறை வசதியே இல்லாமல்தான் இருந்தது. கண்ணில் படும் சந்து பொந்துகளிலும்தான் மக்கள் தங்களது அவசரத்திற்கு ஒதுங்கும் வகையில்தான் இருந்தும் வந்தது.
இந்த சூழலில் ஒருவழியாக தற்போது, பொதுப்பயன்பாட்டிற்கான சிறுநீர் கழிப்பிடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனாலும், தண்ணீர் வசதிதான் இல்லை. தண்ணீரே இல்லாமல், கழிவறையை பயன்படுத்துவது எப்படி? இது மேலும், சுகாதாரச்சீர்கேட்டிற்குத்தான் வழி வகுக்கும்.
இதுதவிர, பேருந்து நிலையத்தில் பயணிகள் இளைப்பாறுவதற்கு இடம் இல்லை என்பது மற்றொரு அவலம். மழை காலத்திற்கும் ஒதுங்க முடியாது. வெயில் காலத்திலும் இளைப்பாற முடியாது. அவ்வளவு ஏன், தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடையாது. காசு கொடுத்து பாட்டில் தண்ணீர்தான் வாங்கிக் குடித்தாக வேண்டும். பேருந்து நிலைய வளாகமே, தற்காலிக கடைகளின் ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. போதாக்குறைக்கு, பேருந்து நடைமேடையிலேயே பொதுமக்களுக்கு இடையூறாக டூவீலர் ஸ்டேண்டு போல டூவீலர்களை வரிசைகட்டி நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றியும்; தண்ணீர் வசதியுடன் கூடிய போதுமான கழிவறை வசதிகளை ஏற்படுத்தியும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை புதுப்பொலிவுடன் மாற்றவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
— தஞ்சை க.நடராஜன்.