அங்குசம் பார்வையில் ‘அகத்தியா’
தயாரிப்பு : ‘வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல்’ & வார்ம் இந்தியா’ ஐசரி கே.கணேஷ் & அனீஷ் அர்ஜுன்தேவ். எழுத்து—இயக்கம் : பா.விஜய். நடிகர்-நடிகைகள் : ஜீவா, ராஷிகண்ணா, அர்ஜுன், எட்வர்ட் சோனென்பிலிக், மெடில்டா, சார்லி ‘டத்தோ’ ராதாரவி, ஷா ரா, யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, ரோகிணி, பூர்ணிமா பாக்யராஜ், செந்தில், விடிவி கணேஷ். ஒளிப்பதிவு : தீபக் குமார் பதி, இசை : யுவன்சங்கர் ராஜா, ஆர்ட் டைரக்டர் : பி.சண்முகம், எடிட்டிங் : சான் லோகேஷ், காஸ்ட்யூம் டிசைனர் : பல்லவிசிங் , டினா ரொஸாரியோ, நடனம் : ஸ்ரீதர், சவுண்ட் மிக்ஸிங் : தபஸ்நாயக், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : அஸ்வின்குமார், பி.ஆர்.ஓ: நிகில்முருகன்.
சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கிறார் அகத்தியா [ ஜீவா ]. பாண்டிச்சேரியில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு ஹீரோவும் ஹீரோயினும் வராததால், ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுகிறார் தயாரிப்பாளர். இதனால் கைக்காசை செலவழித்து செட் போட்ட அகத்தியா செம அப்செட்டாகிறார். அப்பா சார்லி சமாதானப்படுத்துகிறார். இந்த நேரத்தில் தான் அகத்தியாவின் காதலி வீணா [ ராஷி கண்ணா ] அதே பாண்டிச்சேரியில் இருக்கும் பழமையான எட்வின் டூப்ளெக்ஸ் பங்களாவை இப்போது கைவசம் வைத்திருக்கும் செந்திலிடம் வாடகைக்கு வாங்கி, அதை ஸ்கேரி ஹவுஸ்[பேய் பங்களா] செட்டாக மாற்றினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஐடியா கொடுக்கிறார்.
அதன்படியே செய்கிறார் அகத்தியா. அதன் பின் நடக்கும் அதிசயங்கள், அமானுஷ்யங்கள், திகில் சம்பங்கள், ஃபேண்டஸி கலந்த ஹாரர் த்ரில்லர் தான் நம்மை ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் இந்த அற்புதப் படைப்பான ‘அகத்தியா’.
இந்த மாதிரி கேரக்டர்கள் என்றால் அனாயசமாக சிக்ஸர் அடிக்கும் ஜீவா, இந்த அகத்தியாவில் தோனி ஸ்டைல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திவிட்டார். அந்த பழைய பங்களாவில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த எட்வின் டூப்ளெக்ஸ் [ எட்வர்ட் சோனென்பிலிக்ஸ் ] என்ற கொடுங்கோலன் வாழ்ந்ததற்கான ஆதாரமும் பாரிஸ் நாட்டிலிருந்து பாண்டிச்சேரி திரும்பும் சித்தமருத்துவர் சித்தார்த்தன் [ அர்ஜுன் ] வாழ்ந்ததற்கான ஆதாரமும் கிடைத்த பின் தனது பெர்ஃபாமென்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் ஆச்சர்யப்படுத்திவிட்டார் ஜீவா.
அடுத்து நம்மை பிரமிக்க வைத்திருப்பவர் அர்ஜுன் தான். சித்தமருத்துவத்தின் மகத்துவத்தை பிரெஞ்சு கொடுங்கோலனிடம் தமிழன் என்ற கர்வத்துடன் பேசும் காட்சி, டைனிங் டேபிளில் அசால்டாக வெளிப்படுத்தும் முகபாவங்கள், சிவப்பு முண்டாசு கட்டிய புரட்சிக்காரனிடம் பேசும் காட்சி, கொடுங்கோலனின் தங்கையிடம் காட்டும் பரிவு, பாசம், காதல், என எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறார் அர்ஜுன். ஹீரோயின் ராஷி கண்ணா, இதில் வெறும் ஹீரோயினாக மட்டும் அட்டெண்டென்ஸ் போடாமல், ஜீவாவுக்கு உதவி செய்து, அவருடனேயே படத்தின் க்ளைமாக்ஸ் வரை பயணிக்கும் கேரக்டரில் வெயிட் காட்[சி]டிவிட்டார்.

ஜீவாவின் அம்மா-அப்பாவாக ரோகிணி-சார்லி. எலும்பில் கேன்சர் தாக்கியபின் ரோகிணியின் மேக்கப்பும் நடிப்பும் பிரமாதம். பேய் பங்களாவைத் திறந்து வைக்கும் நடிகர்களாக யோகிபாபு & விடிவி கணேஷ் ஒரு சீனில் வருகிறார்கள். பிரெஞ்சுக்காரனின் பி.ஏ.வாக ராதாரவி, ஜீவாவின் நண்பனாக ஷா ரா, பங்களா பார்ட்டியாக செந்தில், டாக்டராக பூர்ணிமா பாக்யராஜ் என எல்லா கேரக்டர்களும் அவரவர்களுக்கான வேலையை கச்சிதமாக பகிர்ந்து செய்திருக்கிறார்கள்.
இனி நாம் சொல்ல வேண்டியது, இந்த ‘அகத்தியா’வின் உருவாக்கத்திற்காக அரும்பாடுபட்டிருக்கும் நம் தமிழினத்தின் பெருமைக்குரிய இயக்குனர் பா.விஜய்யைப் பற்றித்தான். 1940-ல் இருந்த பாண்டிச்சேரி புகைவண்டி நிலையத்தில் இந்தி இல்லாத பெயர்ப்பலகை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் போராட்டம், குடியரசு, திராவிடநாடு இதழ்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மறுமலர்ச்சியை ராதாரவியிடம் சொல்லும் காட்சி, பிரெஞ்சுப் பெண்ணுக்கு பூவிழி என்ற தமிழ்ப்பெயர், சித்தர்களின் ஆற்றலையும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் அர்ஜுன் பேசும் காட்சி, தமிழனின் தொன்மையையும் பெருமையையும் சொல்லும் ஒரு பாடல், கொரோனா வைரஸை தடுத்துக் காத்தது மஞ்சளும் வேப்பிலையும் தான் என ஜீவா சொல்லும் காட்சி.
“நீங்க படிக்கலேன்னாலும் உங்க பிள்ளைகளுக்கு படிக்கக்குடுங்க” எனச் சொல்லியபடி ‘திராவிடன்’ இதழை அர்ஜுன் கொடுக்கும் காட்சி, “ஒன்னோட அடையாளத்தை மறந்துராம போராடு, நிச்சயம் ஜெயிப்போம்” என்ற வசனம் 1940 ஃப்ளாஷ்பேக்கை 18 எம்.எம்.பிலிம், அப்போதைய கிராமபோன் ரிகார்ட், கிழிந்து எரிந்த நிலையில் உள்ள டைரி என மூன்று விதமாக யோசித்திருக்கும் அசாத்திய கற்பனை, ”அனைத்திலும் தமிழன் தான் முதன்மையானவன். ஆனால் அதை ஆவணப்படுத்த தவறிட்டான்” என்ற சித்தார்த் அர்ஜுனின் ஆதங்கம், இவற்றையெல்லாம் உண்மை உள்ளத்துடன் பதிவு செய்ததற்காக நம் தமிழினம் கவிஞர்-இயக்குனர் பா.விஜய்யை பெருமிதத்துடன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். “வாழ்க நீ எம்மான்…”
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பா.விஜய்யின் இந்த கடின உழைப்புக்கும் அசாத்திய கற்பனைக்கும் தோளோடு தோள் நின்று பெரிதினும் பெரிதாக உழைத்திருப்பது கேமராமேன் தீபக் குமார்பதி, ஆர்ட் டைரக்டர் சண்முகம், விஎஃப் எக்ஸ் குழுவினர், சவுண்ட் மிக்ஸிங் தபஸ் நாயக் ஆகியோர் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கூடுதல் உற்சாகத்துடன் உழைத்திருக்கிறார் ‘இளைய இசைஞானி’ யுவன்சங்கர் ராஜா. அர்ஜுன் –மெடில்டாவின் “என் இனிய பொன் நிலாவே” ரீமிக்ஸ் பாடல்,அம்மா செண்டிமெண்ட் பாடல், தமிழனின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றும் பாடல்களிலும் ஹாரர் த்ரில்லர் எஃபெக்டைக் கூட்டும் பின்னணி இசையிலும் இசை ராஜாங்கமே படைத்துவிட்டார் யுவன்சங்கர் ராஜா.
‘அகத்தியா’ தமிழர்களின் ஆவணம்- அடையாளம்.
— மதுரை மாறன்.