டெல்டா விவசாயிகளின் துயரமும் வேதனையும் கோட்டையை எட்டுமா?
முன்னொரு காலத்தில் முப்போகம் விளைந்த காவிரி டெல்டா, இன்று ஒரு போகத்துக்கே திண்டாடி வருகிறது. காவிரி நீரில் தமிழகத்தின் நியாய உரிமையை தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடகாவின் அடாவடி முதன்மை காரணமாக அமைந்திருந்த போதிலும், நீர் தேக்கங்களையும் பாசன கால்வாய்களையும் முறையாக பராமரிக்காத மாநில அரசின் மெத்தனமும் முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
உரிய காலத்தில் காவிரியில் நீர் வராதது; பருவ மழை பொய்த்து போவது; எதிர்பாராத மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளாவது; கூலியாட்கள் பற்றாக்குறை என பல்வேறு இடர்களை கடந்துதான், பெயருக்கு ஒரு போகம் சம்பா நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
”இந்த ஒரு போகம் பயிர் செய்வதற்கும் மாநில அரசிடமிருந்து முறையான வங்கிக்கடனையோ, மானிய விலையிலான உரங்களையோ பெற முடிவதில்லை. ஒரு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்திருக்கும் நிலையில், கணக்குக்கு 50 பேருக்கு மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கின்றன. மற்றபடி, கைவசம் இருக்கும் நகைகளை அடகு வைத்தோ, வட்டிக்கு வாங்கியோதான் விவசாயத்தை செய்ய வேண்டிய இக்கட்டிற்கு ஆளாகியிருக்கிறோம்” என்கிறார்கள்.
இவ்வளவு இடர்களையும் கடந்து, அறுவடை செய்தால் உரிய முறையில் கொள்வாரில்லை. போதிய இலாபம் இல்லாத நிலையில், தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதில்லை. சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெரும்பாலோர் நம்பியிருப்பது, அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களைத்தான்.

ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது என்ற புள்ளிவிவரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவாகியிருக்கும் நிலையிலும்கூட, தேவைக்கேற்ப போதுமான நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மறுக்கிறார்கள். வாரக்கணக்கில் நெல் குவியல்களோடு, வெயில் மழையிலும் இரவு – பகல் பாராது காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மூட்டைக்கு ஒரு கிலோ வீதம் கூடுதலாக எடை வைக்கப்படுவதாகவும்; மூட்டைக்கு 40 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். குவிண்டால் ஒன்றுக்கு 3500/- குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்தால் மட்டுமே, கட்டுப்படி ஆகும் என்கிறார்கள். பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் தாண்டி, வீம்புக்கு விவசாயத்தை தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடும் டெல்டா விவசாயிகளின் துயரமும் வேதனையும் கோட்டையை எட்டுமா?