தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ! பொருளாதாரக் குற்றங்கள் சொல்லும் சேதி !
தமிழக முதல்வர் கவனத்துக்கு ! தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ! பொருளாதாரக் குற்றங்கள்
தமிழகத்தில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக, டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின். நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும்; நிதி நிறுவன மோசடியை தடுப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 60,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பி.ஏ.சி.எல்.; 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி வரை மோசடி செய்த புகாரில் ஆருத்ரா; 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட ஐ.எஃப்.எஸ்; 4620 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு; 400 கோடிகளுக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட எல்ஃபின்; ஆருத்ராவை விஞ்சும் நியோமேக்ஸ் நிதிநிறுவன மோசடி உள்ளிட்டு தமிழகத்தில் அடுத்தடுத்து பல மோசடிகள் அரங்கேறியிருக்கின்றன.

இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில்தான் 1997ம் ஆண்டில், பணம் வைப்பீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க தனிச்சட்டம் (TANPID) கொண்டுவரப்பட்டது. தனியார் நிதி நிறுவன முறைகேடு, பொருளாதார இழப்பு போன்ற வழக்குகளை கையாள்வதற்கென்றே கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் இயங்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவும் உருவாக்கப்பட்டது.
இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்ட 90-களின் காலகட்டத்தோடு தற்போதைய நிலையை ஒப்பிடுகையில், இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் ஆயிரம் கோடிகளுக்கும் மேலான மோசடி என்பதாக பிரமிப்பூட்டும் பரிமாணத்தை எட்டியிருக்கின்றன. ஆனால், இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்தும் கடப்பாடு கொண்ட பொருளாதாரக்குற்றப்பிரிவோ, சூழல் கோரும் தேவைக்கேற்ப மாற்றம் பெறாமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தால், குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு முன்பாக நிவாரணம் கிடைக்காது என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. புகார் கொடுப்பதோடு சரி, அந்த வழக்கின் நிலை என்பது குறித்த முழுமையான விவரங்களை அறிய முடியாத இடத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இருத்தப்படுகிறார்கள். வழக்கின் நிலை குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பத்திரிகையாளர் சந்திப்புகளும் நடத்தப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பத்திரிகை செய்தியாகவும் வெளியாவதில்லை. கேட்டால், நிர்வாக நடைமுறை அப்படித்தான் என்கிறார்கள். இதன்காரணமாகவே, சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற கதையாக மோசடி நபர்களை நம்பி மீண்டும் மோசம் போகிறார்கள்.

நிர்வாக ரீதியான காரணங்கள் ஒருபுறமிருந்தாலும், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், போதுமான பணியாளர்கள் இல்லாமல் கடும் பணிச்சுமை; முதலீட்டாளர்களின் வசவுகள் என பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு மத்தியில்தான் பணியாற்றிவருவதாக குறிப்பிடுகிறார்கள், EOW போலீசார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீதிமன்ற அலைச்சல்; வருவாய்த்துறை, பதிவுத்துறை, டி.ஆர்.ஓ. உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின்மை என பல காரணங்களை அடுக்குகிறார்கள். மாவட்டத்திற்கு ஒரு சட்ட ஆலோசகர்கூட கிடையாது. சொத்துக்களை அட்டாச் செய்வதில் ஆயிரம் சிக்கல். அதையும் மீறி ஜி.ஓ. போட ஆயிரம் பார்மாலிட்டிஸ். இத்தனையும் கடந்து சொத்தை ஏலம்விடும் நிலையில் டி.ஆர்.ஓ.வின் கருணைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் கதைகளும் உண்டு என்கிறார்கள்.
“தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி” என்பது ஒரு சட்டக் கோட்பாடு. ஆனால், இதுவே பொருளாதாரக்குற்றப்பிரிவு வழக்குகளின் சாபக்கேடாவும் மாறியிருக்கிறது. ஆழமான பகுப்பாய்வும் அத்தியாவசியமான சீர்திருத்தமும் காலத்தின் தேவை என்பதை உணர்த்துகின்றன, வருடக்கணக்கில் முடங்கிக்கிடக்கும் மோசடி வழக்குகள்.