வாட்டர் கேன் பயங்கரம்! பகீர் கிளப்பிய ‘வருணன்’ பட டைரக்டர்!
‘யாக்கை பிலிம்ஸ்’ கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸின் இணை தயாரிப்பில், உருவாகியுள்ள படம் ‘வருணன் – காட் ஆப் வாட்டர்’.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம் சந்தோஷ் ஒளிப்பதிவு, போபோ சசி இசை, எடிட்டிங்: முத்தையன், கலை இயக்கம் :பத்து
‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இப்படம் வரும் 14ம் தேதி என்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாவதால் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று ( மார்ச் 10- ஆம் தேதி காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கோபுரம் பிலிப்பைன்ஸ் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அன்புச்செழியன் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினரும், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர்.
வரவேற்புரை வழங்கிய…
தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன்
”இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து எங்களை அன்பு மழையில் நனைய வைத்த தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவர்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வருணன்’ திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் திரைக்கதையை எழுதி நிறைவு செய்து விட்ட பிறகு எங்களையும் எங்கள் குழுவினரையும் இயக்குநரின் தந்தை தான் அன்புச்செழியனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் முழு திரைக்கதையையும் சமர்ப்பித்தோம். அவர் முழுமையாக வாசித்து விட்டு, ‘கதை நன்றாக இருக்கிறது. தயாரிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கிறேன்’ என்றார். இப்படி சொன்னவுடன் எங்களுக்கெல்லாம் நம்பிக்கை பிறந்தது. அவருடைய வழிகாட்டுதலால் தான் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்கிறோம்.
எங்களுடைய படம் நன்றாக இருக்கிறது என்பதாலும், அவர் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காகவும் இந்தப்படம் அன்புச்செழியனின் உதவியுடன் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் “.
‘ஆஹா’ சிஇஓ கவிதா,
“ஆஹா டிஜிட்டல் தளம் எப்போதும் புதிய, இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும். தமிழ் சினிமாவிற்கு இது முக்கியமான பங்களிப்பு என நாங்கள் கருதுகிறோம். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் இப்படமும் பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இப்படத்துடன் பயணிக்கிறோம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா கைப்பற்றி இருக்கிறது”.
தயாரிப்பாளர் அன்புச்செழியன் ,
”வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், உதவியிருக்கேன். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்”.
இசையமைப்பாளர் முரளி,
”இந்ப்படம் உண்மையில் ஒரு தரமான படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இது சின்ன படம் என்கிறார்கள். இது சின்ன படமே இல்லை. இது பெரிய படம். கடினமாக உழைத்திருந்தார்கள். ராதாரவி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய வெற்றி படம். அந்த வகையில் இந்த படமும் வெற்றிப் படம் தான். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும்”.
நடிகர் ஜெயப்பிரகாஷ் ,
”இப்படத்தின் இயக்குநர் எடுத்திருக்கும் கதை தண்ணீர் கேன். இந்தப் பிரச்சனை 10 வருஷத்திற்கு முன்னாலும் இருந்தது இன்னும் 50 வருஷத்திற்கும் இருக்கும். இப்படத்தின் கதை அவுட்டேட்டட் அல்ல. அனைவருக்கும் நெருக்கமான கதை தான்.
காசை கொட்டிக் கொடுத்து ரிச் ஆக எடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று இல்லை. இந்தக் குழுவினரிடம் பணம் இல்லை. ஆனால் நிறைய புத்திசாலித்தனம் இருந்தது. அத்துடன் தன்னம்பிக்கையும் இருந்தது. படம் எடுத்து சில ஆண்டுகள் ஆனாலும் படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை துளி அளவு கூட குறையவில்லை.
இப்படம் அன்புச்செழியனின் ஆதரவுடன் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்”.
நடிகை ஹரிப்பிரியா
“என்னைப் பொறுத்தவரை இந்தப்படம் தான் ஸ்டார்ட்டிங் பாயிண்ட். என்னுடைய பயணம் இனிமேல் தான் ஆரம்பம். எனக்கு கே. பி. சாரை மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய உதவியாளரான ஜெயவேல் முருகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு உதவிய மக்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அன்புச்செழியனுக்கும் நன்றி”.
நடிகர் ராதாரவி,
”இந்தக் காலத்தில் எவ்வளவு வேகமாக இயங்க வேண்டும் என்பதை இந்த படக் குழுவினரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். நான் இந்த படத்தில் இயக்குநரின் தந்தைக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏன்னா அவர் பெயர் கருணாநிதி. எனக்கு மிகவும் பிடித்த பெயர் இது. இதில் பணியாற்றியிருக்கும் அனைவரும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்றார்கள்.
இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு அனைவரும் வரவேண்டும். அதுதான் இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும். இது தண்ணீரில் எழுத வேண்டிய எழுத்தல்ல கல்வெட்டாக இருக்க வேண்டும். இந்தப்படம் இன்றைய சூழலுக்கு நிச்சயம் கல்வெட்டாக இருக்கும்”.
இயக்குநர் சத்யசிவா
”நான் எப்படி முதல் படத்தினை இயக்கி விட்டு ஆர்வத்துடன் எந்த உணர்வுடன் காத்திருந்தேனோ அதே உணர்வில் ஜெயவேல் முருகனும் இருக்கிறார். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், கஷ்டப்பட்டிருக்கிறார். சின்னப் படங்களுக்கு தியேட்டரை தவிர வேறு எந்த வியாபாரமும் இல்லை. அதனால் இந்த படம் வெளியாகிறது என்றாலே அவருக்கு சந்தோஷம் தான். இயக்குநருக்கு இதுவே வெற்றிதான்.
இளைஞர்கள் ஒன்று கூடி தங்களின் கனவுகளை படைப்பாக நனவாக்கி இருக்கிறார்கள். இதற்கு உங்களின் ஆதரவு தேவை”.
நடிகை கேப்ரியல்லா ,
”இது என்னுடைய முதல் மேடை. வருணனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். இது போன்ற யதார்த்தமான கதை உள்ள படத்தில் எனக்கும் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும், ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தை பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ம் தேதி அன்று வெளியாகும் வருணன் படத்தைப் பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும்”.
ஹீரோ துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,
“முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இரண்டு பயங்களை வென்றிருக்கிறேன். முதலில் எனக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இந்த படத்தில் 120 அடி உயரத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் என்றாலும் பயம்.
அவருடைய இயக்கத்திலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கும், ஸ்ரீதர் மாஸ்டருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும்”.
இசையமைப்பாளர் போபோ சசி ,
”இந்தப் படத்திற்கு என்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி. படத்தின் இயக்குநரும் அவருடைய முதல் படத்தில் என் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என நினைக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாடல்கள் ஐந்தும் ஐந்து வெரைட்டியாக இருக்கும். ஒரு பாடலை யுவன் சார் பாடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி. வி.பி சாரும் சைந்தவி மேடமும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இடம் பெறுகிறது. அந்த காட்சிக்கு பின்னணி இசை அமைப்பது கடும் சவாலாக இருந்தது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்”.
இயக்குநர் ஜெயவேல் முருகன்,
”இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு என்னுடைய நண்பர்கள் உதவி இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைத் தொடர்ந்து அன்பு சார், இவரை நான் காட் ஆப் சினிமா ( God of Cinema) என்றுதான் சொல்வேன். நான் கே. பி. சார் ஸ்கூலில் இருந்து வந்தவன். அன்பு சார் யுனிவர்சிட்டி. அவருடைய ஆதரவு இல்லை என்றால் இப்படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.
இது கன்டென்ட் மூவி. தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை. கதையை வருண பகவானின் கோணத்திலிருந்து சொல்லிருக்கோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஐம்பூதங்களைப் பற்றிய கதை தான் இது. நாம் என்றைக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்த இயற்கையின் சாபம் நம்மை துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்த படத்தின் டேக் லைன், ஒன் லைன்.
இதில் தண்ணீரைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். தண்ணீர் கேன் சென்னைக்கு 95ம் ஆண்டில் அறிமுகமானது. அதன் பிறகு அது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. தண்ணீர் சேமிப்பு குறித்து எங்களால் முடிந்தவரை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சனைகளை பற்றியும் சொல்லி இருக்கிறோம். என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். அனைவரும் இந்தப்படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். நீரின்றி அமையாது உலகு”.
— மதுரை மாறன்.