அங்குசம் பார்வையில் ‘பெருசு’
தயாரிப்பு : ‘ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்’ கார்த்திகேயன் சந்தானம் & எம்பர்லைட் ஸ்டுடியோஸ் ஹர்மேன் பவேஜா, ஹிரண்யா பெரேரா. டைரக்ஷன் : இளங்கோ ராம். நடிகர்—நடிகைகள் : வைபவ், சுனில், நிஹரிகா, சாந்தினி தமிழரசன், கஜராஜ், பாலசரவணன், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, விடிவிகணேஷ், கருணாகரன், சாமிநாதன், தனம் [ எ ] தனலட்சுமி, தீபா சங்கர், ரமா, அலெக்ஸிஸ், சுபத்ரா ராபர்ட். ஒளிப்பதிவு : சத்யா திலகம், பாடல்கள் இசை : அருண்ராஜ், பின்னணி இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டிங் : சூர்யா குமரகுரு. தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
குளத்தில் குளிக்கும் பெண்களை உற்றுப் பார்க்கும் இளைஞன் ஒருவனை பளாரென அடித்து விரட்டுகிறார் பெருசி அலெக்ஸிஸ். அடுத்த சீனில் வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருக்கும் போது சேரில் அமர்ந்தபடியே இறந்துவிடுகிறார். அப்பாவின் திடீர்ச் சாவால் அதிர்ச்சியாகும் மூத்த மகன் சுனில், கதறியழுதபடி, அப்பாவின் இடுப்புக்குக் கீழே பார்த்து மேலும் அதிர்ச்சியாகிறார். டாஸ்மாக் வாசலில் நிற்கும் தனது தம்பி வைபவ்விற்கு போன் பண்ணி வரச்சொல்ல, அப்பாவின் ‘எரெக்ஷன்’ பார்த்து அவரும் பெரும் அதிர்ச்சியாகிறார். வெளியே போன அம்மா[ தனம் ]வும் சித்தி [ தீபா சங்கர் ]யும் வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியாகிறார்கள். உலக்கை, செல்லோ டேப் இதெல்லாம் பயன்படுத்தியும் கண்ட்ரோல் ஆகவில்லை அப்பாவின் ‘எரெக்ஷன்’.
இந்த சங்கதி ஊருக்குள் தெரிந்தால் குடும்பத்திற்கு பெரும் கேவலமாகிவிடும் என்பதால் பலப்பல அதிரடி ஐடியாக்களை எடுக்கிறார்கள். ‘பெருசு’ நல்லடக்கம் ஆனாரா? இதான் க்ளைமாக்ஸ்.
கொஞ்சம் பிசகியிருந்தாலும் எசகுபிசகாகி, ’ஏ’டாகூடப் படமாகியிருக்கும் இந்த ‘பெருசு’. ஆனால் நடித்திருக்கும் நடிகர்-நடிகைகளின் சரவெடி காமெடியால் கொஞ்சம் கூட முகம் சுழிக்க முடியாதவாறு படத்தைக் கொண்டு போயிருக்கிறார் டைரக்டர் இளங்கோ ராம். எந்நேரமும் மப்பிலும் டைமிங் காமெடியிலும் வெளுத்துக் கட்டியிருக்கார் வைபவ். இவரது அண்ணன் சுனிலும் சும்மா சொல்லக் கூடாது. அப்பா பொணத்தை ஏன் சேர்ல உட்கார வச்சிருக்கோம்னு அவர் சொல்லும் காரணம் செம கலகலப்பு. “அப்படின்னா..நான் அப்பான்னு தான் சொல்லணும்” ஒரே ஒரு சீன் என்றாலும் விடிவி கணேஷ் அதிர வைக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே ‘எரெக்ஷனைப் பார்த்து ஷாக் ஆவது கொஞ்சம் ஓவராகிப் போச்சு. வனிதாமணியாக வரும் சுபத்ரா ராபர்ட்டை வைத்து க்ளைமாக்ஸை கச்சிதமாக முடித்திருக்கார் டைரக்டர்.
அடிக்குற வெயிலுக்கு தியேட்டர் ஏ.சி.யும் ‘பெருசு’ டீமின் காமெடியும் குளுகுளுன்னு இருக்கும் கிளுகிளுன்னும் இருக்கும்.
— மதுரை மாறன்.