இந்த பட்ஜெட்டிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் இந்த பட்ஜெட்டிலேயே நிறைவேற்ற வேண்டும். 110 விதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டசபையில் அனைத்து கட்சிகளும் மீண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என நம்பி இருந்தார்கள். பணி நிரந்தரம் அறிவிக்கவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 இடைக்கால பட்ஜெட், 2022, 2023, 2024 பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 1,53,827 கோடி ஒதுக்கியபோதும் அதில் இருந்து பணிநிரந்தரம் செய்யவில்லை என்ற குமுறல் ஏற்கனவே பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள், இம்முறை முதல்வர் பிறந்தநாள் முதல் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பி இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என முயற்சி செய்தார்கள்.
ஆனாலும் முதல்வர் பட்ஜெட் அறிவிப்பில் பணி நிரந்தரம் குறித்து அறிவிக்கவில்லை என்பதால் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்களும் மிகவும் வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இன்றைய விலைவாசி உயர்வில் 12,500 ரூபாய் குறைந்த சம்பளத்தில் அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள்.
மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு தொகை, குடும்ப நல நிதி போன்றவை இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
14 ஆண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில் 3700 ஆசிரியர்கள், ஓவியம் 3700 ஆசிரியர்கள், கணினி அறிவியல் 2 ஆயிரம் ஆசிரியர்கள், தையல் 1700 ஆசிரியர்கள், இசை 300 ஆசிரியர்கள், தோட்டக்கலை 20 ஆசிரியர்கள், கட்டிடக்கலை 60 ஆசிரியர்கள், வாழ்வியல் திறன் கல்விக்கு 200 ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்றார்கள்.

பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சி உள்ள காலத்திற்கு முழு தீர்வு கிடைக்கும். தற்போதைய ரூபாய் 12,500 தொகுப்பூதியத்திற்கு ஒரு ஆண்டின் 11 மாதங்களுக்கு 165 கோடி ஆகிறது. இதை சிறப்பாசிரியர் / இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூபாய் 20,600 நிர்ணயம் செய்து வழங்க ஆண்டுக்கு 450 கோடி ஆகும்.
எனவே பணி நிரந்தரம், காலமுறை சம்பளம் வழங்க மேலும் 300 கோடி ஒதுக்கினால் போதும். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ள 46,767 கோடி நிதியில் இருந்து முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
எனவே, இந்த பட்ஜெட்டிலே பணி நிரந்தரம் செய்ய முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்.
திமுக 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களளுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை இந்த முழுமையான பட்ஜெட்டிலேயே நிறைவேற்ற வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதைவிட்டால் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
அதுவரை காலம் கடத்தாமல் இந்த பட்ஜெட்டிலேயே முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுவரை அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியதை போல, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கவன ஈர்ப்பு கொடுத்து வலியுறுத்த வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.