மஞ்சள் காமாலை அறிவோம் – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில் மாறிப்போகும்.
மஞ்சள் காமாலை என்பது நாம் நினைப்பது போல நோய் இல்லை மாறாக அது நோயின் அறிகுறியாகும்.
நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீம் எனும் இரும்பு மூலப் பொருள் சிதைவுண்டு அழியும் போது இறுதியாக உண்டாகும் உயிர் வேதியியல் பொருள் – பிலிருபின் ஆகும்.
இந்த பிலிருபின் ரத்தத்தில் உள்ள ஆல்புமினுடன் இணைந்து பயணித்து கல்லீரலை அடையும் கரையாத தன்மை கொண்ட இணைவுறா பிலிருபினை கல்லீரல் தன்னகத்தே கொண்ட நொதியைக் கொண்டு இணைவுற்ற பிலிருபினாக மாற்றி அமைக்கிறது.
நமது உடலைப் பொருத்தவரை இணைவுறா பிலிருபினுக்கு இணைவுற்ற பிலிருபினை விட நச்சுத்தன்மை அதிகம்.
இணைவுற்ற பிலிருபின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்தில் அமிழ்த்தப்பட்டு நாம் கழிக்கும் மலத்தின் வழியாகவும் சிறுநீரின் வழியாகவும் வெளியேற்றப்படும். இதனால் தான் மலத்தின் நிறமும் சிறுநீரின் நிறமும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.
கல்லீரலுக்கு வந்து இணைவுறாத (Unconjugated Bilirubin ) நிலையில் இருக்கும் பிலிருபின் – மறைமுக பிலிருபின் (InDirect bilirubin) என்றழைக்கப்படும்.
கல்லீரலில் இணைவுற்ற பிலிருபின் (Conjugated bilirubin ) அல்லது நேரடி பிலிருபின் ( Direct Bilirubin) என்றழைக்கப்படும்.
அனைவரும் தவறாக நினைப்பது என்னவென்றால் மஞ்சள் காமாலை வந்து விட்டாலே அது கல்லீரலில் பிரச்சனையாகத் தான் இருக்கும் என்று.
ஆனால் அவ்வாறின்றி மஞ்சள் காமாலை மூன்று விதமாக ஏற்படலாம்.
முதல் வகை ( கல்லீரலுக்கு வருவதற்கு முன்பே இணைவுறா பிலிருபின் அதிகமாவது ) இதை PRE HEPATIC JAUNDICE என்கிறோம்.
சிவப்பு அணுக்கள் சிதைவுற்று உற்பத்தி ஆகும் பிலிருபின் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆவதால் ஏற்படலாம்.
குருதி சிதைவுறுவதால் தோன்று ரத்த சோகை ( Hemolytic anemia). ரத்த கட்டிகள் (Hematoma) ஏற்பட்டு அங்கிருந்து ரத்த அணுக்கள் சிதைவுற்று பிலிருபின் அளவுகள் கூடலாம். இந்த வகையில் இணைவுறா பிலிருபின் மட்டும் அதிகமாகும்.
இரண்டாவது வகை கல்லீரலில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுவது – இதை HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம்.
கல்லீரலால் சரியான அளவில் பிலிருபினை கிரகிக்க இயலாமை.
இது கில்பர்ட் சிண்ட்ரோம் என்ற மரபணு பிரச்சனையில் இருக்கும்.
பிலிருபின் இணைவுறும் வினையை சரியாக கல்லீரலினால் புரிய இயலாமையினால் ஏற்படுவது.
இது கல்லீரலைத் தாக்கி நோய் உண்டாக்கும் வைரஸ்களான
ஹெப்பாடைடிஸ் – ஏ
ஹெப்பாடைடிஸ் – பி
ஹெப்பாடைடிஸ் – சி
தொற்று ஏற்படும் போதும் சிரோசிஸ் எனும் கல்லீரல் சுருக்க நோய், மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோய், மது அருந்தாதவர்களில் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படிதலால் ஏற்படும் அழற்சி போன்றவற்றில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனால் இணைவுறாத பிலிருபினும் இணைவுற்ற பிலிருபினும் ஒரு சேர அதிகமாகும்.
மூன்றாவது வகை கல்லீரலில் எந்த பிரச்சனையும் இருக்காது.
ஆனால் கல்லீரலை விட்டு பித்தத்துடன் வெளியேற்றப்படும் பிலிருபின் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் முறையாக வெளியேற இயலாமையால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும். இதை Post HEPATIC JAUNDICE என்று அழைக்கிறோம்
பித்தப் பை கற்கள் பித்த நீர் செல்லும் குழாயை அடைப்பது, ( choledocholithiasis)
புற்று நோய் கட்டி தோன்றி பித்த நீர் குழாயை அடைத்துக் கொள்வது, ( carcinoma)
குறுகிய & நீண்ட கால கணைய அழற்சி நோய் ( acute & chronic pancreatitis)
பித்த நீர் செல்லும் குழாய் குறுகிக் கொள்ளுதல் ( Strictures)
அஸ்காரிஸ் போன்ற புழுத் தொற்றுகள் ஏற்படுவதால் பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவது மேற்சொன்ன மூன்று காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மட்டுமே கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதையும் முதல் மற்றும் மூன்றாவது வகை காரணங்களுக்கும் கல்லீரலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறிய வைக்கவே இந்தப் பதிவு.
நமதூர்களில் மஞ்சள் காமாலை என்ற அறிகுறி தோன்றிவிட்டாலே உடனே நாட்டு மருந்து சிகிச்சை எடுத்து விட்டு முறையான சிகிச்சைகளுக்கு வராமல் நாட்களைக் கடத்தும் போக்கு உள்ளதைக் காண முடிகிறது.
நவீன மருத்துவத்தில் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போது அந்த அறிகுறி தோன்றியதற்கான மெய்யான காரணம் அறிந்து அதன் பிறகே சிகிச்சை அளிக்கப்படும்.
மஞ்சள் காமாலை நான் முன்பே கூறிய மூன்று வகைகளுள் எந்த வகையை சேர்ந்தது என்பதை முழு உடல் பரிசோதனை மற்றும் சில பரிசோதனைகள் செய்து கண்டறிய முடியும்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை என்பது வளர்ச்சி அடையாத கல்லீரலால் பிலிருபின் முழுமையாக இணைவுற இயலாமையால் ஏற்படுவதாகும்.
அதே நேரத்தில் பிறவிக்குறைபாட்டாலோ பிலிருபின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதாலோ ரத்த அணுக்கள் அதிகமாக சிதைவுறும் தன்மையாலோ மஞ்சள் காமாலை தோன்றலாம்.
அதற்கு முறையான ரத்த மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். சிறார் மற்றும் இளைய வயதில் ஹெப்படைடிஸ் ஏ தொற்றின் மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை தோன்றும். எனினும் இன்ன பிற வைரஸ்களான ஹெப்படைடிஸ் பி, சி போன்றவை தொற்றை ஏற்படுத்தியிருக்கின்றனவா? என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காரணம் ஹெப்படைடிஸ் ஏ வுக்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் பி மற்றும் சி உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவேண்டிய வைரஸ் தொற்றுகள் ஆகும்.
முதியவர்களில் மஞ்சள் காமாலை ஏற்படும் போது அது பித்தப்பை கற்கள், புற்று நோய் கட்டி , ஏதேனும் மருந்தின் பக்க விளைவாக இருக்கலாம்.
மது அருந்துபவர்களிடத்தில் மதுவினால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு அது முற்றும் போது மஞ்சள் காமாலை தோன்றும்.
மேற்சொன்ன பல காரணங்களில் எது மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைகளிடத்தில் அதிலும் சிசுக்களில் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி மரணம் சம்பவிக்கும் பெரியவர்களிடத்திலும் மஞ்சள் காமாலையின் உண்மையான காரணத்தை அறியாமல் தவறான சிகிச்சைகளை கொடுத்துக் கொண்டிருந்தால் பிலிருபின் விஷத்தன்மையை எட்டி மூளைக்கு ஏறி மரணம் சம்பவிக்கும்.
இனியேனும் நம்மில் யாருக்கேனும் மஞ்சள் காமாலை தோன்றினால் முறையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி எந்த காரணத்தால் ஏற்பட்டது என்பதை அறிந்து விரைவான முறையான சிகிச்சை பெறுவதே சிறந்த வழி.
— Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்.