*பெரியார் பல்கலைக்கழக நிர்வாக குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை*
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு முடிவின்படி, பொறுப்பு துணைவேந்தராக இருந்த அரசு செயலாளர் தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர் பிரதிநிதிகளுடன் மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக எட்டாவது துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஜெகநாதன் பதவி நீட்டிப்பு காலம் முடிவடைந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி துணைவேந்தர் ஜெகநாதன் பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக சிறப்பு ஆட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆட்சி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நிர்வாகப் பணிகளை கவனிக்கும் பொருட்டு கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுப்பிரமணி, தனியார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

நிர்வாக குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் சுப்பிரமணி பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர். தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மைய இயக்குனராகவும் இதழியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றி வரும் இவர், இதழியல் களத்தில் பெரியார், ஏன் நமக்கு இத்தனை எதிரிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் மக்கள் தொடர்பு அலுவலர் கலைஞர் ஆய்வு மைய இயக்குனர் என 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக பதவிகளையும் பேராசிரியர் சுப்பிரமணி வைத்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி மற்றொரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.