எளியவர்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனி ஆக்கும் யுஜிசி வரைவு அறிக்கை ! மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டனம்
மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கைக்குக் கண்டம் தெரிவித்து பேரா. இரா. முரளி. பேரா.வீ. அரசு, பேரா.ப.சிவகுமார், கல்வியாளர் கண. குறிஞ்சி ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
தேசியக் கல்விக் கொள்கையினை ஒட்டிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி முக்கிய மாற்றங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதற்கானப் புதிய விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதற்கானக் கருத்துக் கேட்பும் நடத்துகின்றது.
வரைவு அறிக்கையின்படி, துணை வேந்தராகத் தேர்வு செய்யப்படும் நபர் பேராசிரியராகத்தான் பணி செய்திருக்க வேண்டும் என்பதல்ல. ஆராய்ச்சி அல்லது அகாடமி கல்வி நிர்வாக அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களாகவும் இருக்கலாம், தொழில், பொது நிர்வாகம், பொதுக் கொள்கை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
யுஜிசி வரைவு அறிக்கை
அதாவது தொழில் அதிபராகவும் இருக்கலாம், அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்று தகுதி விரிவாக்கம் செய்யப்படுகின்றது. இது கல்விப் பரப்பில் மிகவும் ஆபத்தானது. கல்வி நிறுவனங்களில் அதுவும் பல்கலைக் கழங்களில் அனுபவம் பெறாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிப்பது கல்வி மற்று நிர்வாக பரப்பிலும் பல குழப்பங்களை உண்டாக்கும்.
மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல்கலைக் கழகங்களை மறைமுகமாக தாரை வார்க்க வழி வகுக்கும் திட்டமே இது. பணப் பற்றாகுறையில் பல்கலைக்கழகங்கள் தடுமாறும் வேளையில், கார்பரேட் நிர்வாகிகள் மிக எளிதாக பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றி, அவற்றைப் பணம் கொழிக்க வைக்கும் வணிக நிறுவனங்களாக மாற்றுகிறோம் என்ற பெயரில் எளியவர்களுக்கு உயர்கல்வியை எட்டாக்கனி ஆக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூட்டியக்கம் கருகின்றது.
மேலும், துணை வேந்தருக்கானத் தேடுதல் குழுவில் இதுவரை பல்கலைக்கழக செனட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதிநிதியும், ஆட்சிக் குழு எனப்படும் சிண்டிகேட்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதி ஒருவரும், மேலும் ஆளுநர் சார்பாக ஒரு பிரதிநிதியும் இருந்தனர். ஆனால் தற்போது செனட் மற்றும் சிண்டிகேட்டில் ஏதேனும் ஒன்றிலிருந்து மட்டும் ஒரு பிரதிநிதி தேர்வு செய்ய்யப்படலாம் என்று மாற்றப்பட உள்ளது.
இது ஆசிரியர் பிரதிநிதிகள் செனட்டில் பங்கேற்று தேடுதல் குழுவிற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்யும் வாய்ப்பை தட்டிப்பறிக்கும். கூடுதலாக யு.ஜி.சியின் பிரதிநிதி ஒருவர் தேடுதல் குழுவில் இடம்பெறுவார் என்பது தொடர்ந்து தமிழ் நாடு அரசும் பல கல்வியாளர்களும் எதிர்த்து வரும் விஷயமாகும்.
தமிழ் நாட்டில் தகுதி வாய்ந்த ஒரு கல்வியாளரை தீர்மானிப்பதில் யு.ஜி.சி பிரதிநிதியும் இருப்பார், இது தவிர ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் இருப்பார், எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் யார் துணைவேந்தராவது என்பதைத் தீர்மானிப்பார் என்பது துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கோ, ஆசிரியர்களுகோ எந்த வகையிலும் பங்காற்ற அதிகாரம் இல்லை என்றாக்குகின்றது.
கல்விப் பரப்பில் தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட நடுவண் அரசு இப்படிப்பட்ட ஜனநாயக விரோதத் திட்டங்களைக் கொண்டுவருவதை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாக்க் கண்டிக்கின்றது.
உதவி பேராசிரியர் நியமனத்தில், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் எந்தப் படிப்புகளில் படித்திருந்தாலும், நெட் தேர்ச்சி அல்லது முனைவர் பட்டத்தை பெறும் பாடத்தில் ஆசிரியராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுகலை ஒரு பாடத்திட்டத்தில் படிக்காமலேயே அப்பாடங்களில் நெட் தேர்வு எழுதலாம், முனைவர் ஆராய்ச்சியும் மேற்கொள்ளலாம் என்பதை மறைமுகமாக இது சுட்டுகின்றது. இளங்கலை, முதுகலையில் தான் கற்பிக்கப்போகும் பாடங்களைப் பயிலாதவர் எப்படி அந்தப் பாடங்களை மாணவர்களுக்கு அடிப்படைகளுடன் நடத்த இயலும்?. மேலும் முனைவர் பட்டம் என்பது கல்லூரிகளில் பாடம் நடத்துவதற்கு அவசியமானதே அல்ல. அது ஒரு சிறப்பு அம்சம் அவ்வளவுதான். யு.ஜி.சி. கற்பித்தலின் அடிப்படையையே தகர்க்கின்றது. இன்று முனைவர் பட்டம் என்பது ஒரு துறையில் பதிந்து அதை பல துறைகளில் இன்டெர் டிசிபிளினரியாக செய்கின்றனர். அது ஆய்வுக்குத்தான் சரிவரும். பாடங்களை நடத்த அல்ல. எனவே இந்த முன்வைப்பை யு.ஜி.சி. கண்டிப்பாகத் திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகின்றோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் பலவித பிரிவுகளை யு.ஜி.சி. அறிமுகப்படுத்துகின்றது. உதவிப் பேராசிரியர் பணிக்கு பலவித நிலைகளை குறிப்பிடுகின்றது. அப்படியாயின் ஊதிய நிர்ணயத்திலும் இது பல வேறுபாடுகளைக் குறிக்கும். இது ஆசிரியர்கள் நலனுக்கு விரோதமானது. ஆசிரியர்களைப் பழி வாங்க நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் இது.
ஏற்கனவே உள்ள மூன்று நிலைகளில் பணிஉயர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களின் மன உளைசல்கள் ஏராளம். இதில் கூடுதலான பல பிரிவுகளை உண்டாக்குவது அவற்றில் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு கிட்டுமா என்பது சந்தேகமே! இவை பற்றி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளுடன் உரையாடல் நடத்தி அவர்களின் வழி காட்டுதல்களைப் பெறுவது அவசியம்.
காலிப்பணியிடங்களை ஒரு காலக் கெடுக்குள் தகுதியானவர்களை கொண்டு நிரப்பியே ஆகவேண்டும் என்பதில் யு.ஜிசி அக்கறையும் காட்டவில்லை என்பதும் வருத்தமளிக்கின்றது.
— ஆதவன்.