’ஹும்’க்கு பல மாடுலேஷன் இருக்கு – ’ஹும்’ பட விழாவில் கே.பாக்யராஜ்!
ஃபர்ஸ்ட் லைன் பேனரில் எஸ்.உமாபதி தயாரிப்பில், கிருஷ்ணவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹும்’. புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் ஜூன்.13—ஆம் தேதி இரவு நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, யூடியூபர் ஜீவசகாப்தன், தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, சுரேஷ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் டிரைலரை பெற்றுக் கொண்டனர்.
“காதல் கோட்டை’ ஹீரோ—ஹீரோயின் போல நானும் பாடலாசிரியர் விவேகாவும் சந்தித்துக் கொள்ளாமலேயே இப்படத்தின் பாடல்களை உருவாக்கினோம். அதேசமயம் பாடல்களை உருவாக்கும் முன்பு, படத்தில் இடம்பெறும் சில சீன்களின் போட்டோக்களை தயாரிப்பாளர் காட்டினார். இப்படத்தின் ஹீரோவும் ஹீரோயினும் முகத்தைக் காட்டமாலேயே நடித்துள்ளனர்” என்றார் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன்.
படத்தின் தயாரிப்பாளரான உமாபதி பத்திரிகைத்துறையில் போட்டோகிராபராக பணியைத் துவங்கி, முதன்மை ஆசிரியர் வரை உயர்ந்தவர். ‘கிராண்ட் மாஸ்டர் ஆஃப் பாலிடிக்ஸ்’ என்ற இவரது ஆங்கில நூலை 2004-ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாவிட்டாலும் கிருஷ்ணவேலின் குறும்படத்தைப் பார்த்து இந்த ‘ஹும்’ படத்தைத் தயாரித்துள்ளார் உமாபதி.
“இப்படத்தில் 13 கேரக்டர்கள், 13 குரல்கள், 13 உடல்கள், 13 உணர்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் யாருடைய முகமும் வெளியில் தெரியாது. இதான் இப்படத்தின் சிறப்பான வித்தியாசம்” என்றார் பாடலாசிரியர் விவேகா.
இயக்குனர் கிருஷ்ணவேல் பேசும் போது, “பெண்களின் பாதுகாப்பு, பெண்கள் எதைக் கண்டு பயப்படக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வுப்படமாக இந்த ‘ஹும்’ இருக்கும். பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’, அறிஞர் அண்னாவின் ‘ஓர் இரவு’, கலைஞரின் சில படங்கள் ஆகியவற்றின் சாயல் இருக்கும். ஆனால் கதை புதிது, அதற்கு நான் உத்ரவாதம்” என்றார்.
இயக்குனர் கே.பாக்யராஜ், “இந்தப் படத்தின் டைட்டிலை எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. ‘ஹும்’ என்பதில் ஏகப்பட்ட மாடுலேஷன் இருக்கு. ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றபடி அது மாறும். சினிமாவைப் பொறுத்த வரை யாரையும் நான் இளக்காரமாகவோ, எளிதாகவோ பார்க்கமாட்டேன். ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை இருக்கும். எனவே யாரிடமும் வேலை செய்யாமல் இயக்குனராகியுள்ள கிருஷ்ணவேலும் அவரது இந்த ‘ஹும்’ படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
— மதுரை மாறன்.