அங்குசம் பார்வையில் ‘கண்ணப்பா’
தயாரிப்பு : ’24 ஃபிரேம்ஸ்’ கே.மோகன்பாபு. டைரக்ஷன் : முகேஷ்குமார் சிங். கதை—திரைக்கதை: விஷ்ணு மஞ்சு. ஆர்ட்டிஸ்ட் : விஷ்ணு மஞ்சு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், மோகன்லால், பிரபாஸ், மதுபாலா, அக்ஷய்குமார், காஜல் அகர்வால், கன்னட தேவராஜ், சம்பத்ராம், மோகன்பாபு, பிரம்மானந்தம், தீவிர சிவபக்தராக மோகன்பாபு. ஒளிப்பதிவு : ஷெல்டன் சாவ், இசை : ஸ்டீபன் தேவஸ்ஸி, எடிட்டிங் : ஆண்டனி, நடனம் : பிரபுதேவா, பிருந்தா, கணேஷ், ஸ்டண்ட் : கெச்சா கம்பாக்டே. தமிழ்நாடு ரிலீஸ் : ‘சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன். பி.ஆர்.ஓ.: ஹஸ்வத் சரவணன் & சாய் சதீஷ்.
கண்ணப்ப நாயனரின் கதையை ஆன்மீக அன்பர்கள் நன்கு படித்திருப்பார்கள். அந்தக் கண்ணப்பன் தான் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளகஸ்தியில் இருக்கிறார். தனது கண்களைப் பிடுங்கி தனக்குக் கொடுத்த இவரை வணங்கிய பின் தான் தன்னை வணங்கவேண்டும் என்பது கடவுள் பரமேஸ்வரனின் கட்டளை. இதற்கான ஆதாரக் கதைகள் இன்னமும் இருப்பதாக சிவபக்தர்கள் நம்புகிறார்கள்.
அந்த கண்ணப்பனின் வரலாறு தான் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த ‘கண்ணப்பா’ சினிமா. ”ஸ்ரீகாளகஸ்தி கோவிலின் தலைமை குருக்கள் மற்றும் புராணக் கதைகளின் ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் பெற்று இப்படம் உருவாகியிருந்தாலும் சினிமாவுக்கேத்த மாதிரி சில கற்பனைகளையும் கலந்து ஆன்மீக அன்பர்கள், மத நம்பிக்கையுள்ளவர்களின் மனம் புண்படாதவாறு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இக்கால இளைஞர்களுக்கு பக்த கண்ணப்பனின் வரலாற்றுடன் கடவுள் பக்தியையும் ஊட்டுவதற்காகவே இப்படத்தை தயாரித்துள்ளோம்” என்கிற விளக்கவுரையை படம் ஆரம்பிக்கும் முன்பே போட்டுவிடுகிறார்கள்.
தனது நண்பனை அம்மனுக்கு நரபலி கொடுப்பதைப் பார்த்து இளம் பிராயத்திலேயே கடவுள் இல்லை எனச் சொல்ல ஆரம்பிக்கும் திண்ணன் [ விஷ்ணு மஞ்சு] வாலிபனானதும் அதே மனநிலையில் இருக்கிறார். இதனால் அந்த இனக்குழுவின் தலைவரும் திண்ணனின் அப்பாவுமான சரத்குமார் கலக்கமடைகிறார். ஒரு கட்டத்தில் தனது மகனையே பட்டியிலிருந்து [ இனக்குழு வசிக்கும் பகுதி ] வெளியேறச் சொல்கிறார். ப்ரீத்தி முகுந்தனை கல்யாணம் செய்த பிறகும் அதே கடவுள் மறுப்பில் உறுதியாக உள்ளார் திண்ணன்.
ஆனாலும் இந்த திண்ணன் மீது கடவுள் பரமேஸ்வரனுக்கு [அக்ஷய் குமார்] பாசம் அதிகம். ஏன்னா முற்பிறவியில் திண்ணன் தனது பக்தனாக இருந்தவன் என்ற உண்மையை தனது மனைவி பார்வதியிடம் [ காஜல் அகர்வால் ] சொல்கிறார் பரமேஸ்வரன். திண்ணனின் நடவடிக்கைகளை மேலேயிருந்து லைவ்வாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரமேஸ்வரனும் பார்வதியும். அவனை பரிசோதிக்க மோகன்லால், பிரபாஸ் உருவமெடுத்து பூமிக்கு வருகிறார் பரமேஸ்வரன்.
அப்புறம் க்ளைமாக்ஸ் என்னவா இருக்கும்? என்னவா இருக்கும்… கடவுள் மறுப்பாளன் திண்ணன், கல்லாக இருக்கும் வாயு லிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வருவதைப் பார்த்து தனது இரு கண்களையும் நோண்டியெடுத்து லிங்கத்தின் கண்களில் வைத்து கடவுளுக்கு கண்பார்வை கிடைக்கச் செய்து, திண்ணனாக இருந்தவர் , கடவுள் சிவனால் கண்ணப்பன் என்று அன்போடும் பக்தியோடும் அழைக்கப்படுகிறார்.
சரி, இக்கால இளைஞர்களுக்கு பக்தி ஊறியதா? ஊறியிருக்குமா என்றால்..அதான் இல்லை. ஏன்னா இது பக்திப் படமா? இல்ல ப்ரீத்தி முகுந்தனின் கவர்ச்சி ஆட்டப்படமான்னு அவர்களுக்கே சந்தேகம் வந்திருக்கும். அந்தளவுக்கு நம்ம திருச்சிப் பொண்ணு ப்ரீத்தி முகுந்தன், விஷ்ணு மஞ்சுவுடன் பின்னிப் பிணைந்து, டான்ஸ் மூவ்மெண்டுகளில் முக்கால்வாசி நிர்வாணத்துடன் கதிகலக்கியிருக்கிறார். இதனால் மதி கலங்கிப் போயிருப்பார்கள் இக்கால இளைஞர்கள். இதுல இன்னொரு குளுகுளு சங்கதி என்னன்னா.. பார்வதி காஜல் அகர்வால் எண்ட்ரி சீனைக்கூட வழக்கம் போல அவரது கோவைச் செவ்வாய்யில் ஓப்பன் பண்ணிருக்கார்கள் டைரக்டரும் கேமராமேனும். மியூசிக் டைரக்டர் ஸ்டீபனுக்கும் இது என்ன மாதிரியான படம்னு புரியாததால், பல டைப்களில் மியூசிக்கைப் போட்டுத் தாக்கிவிட்டார்.
இப்பவெல்லாம் பக்கா கமர்சியல் பான் இந்தியா படங்களின் வியாபாரத்திற்கு ஆல் இந்தியா ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் இந்த கடவுள் பக்திப் படமான ‘கண்ணப்பா’வுக்கும் நம்ம ஊரு சரத்குமார், மலையாள மோகன்லால், தெலுங்கு பிரபாஸ், கன்னட தேவராஜ், இந்தி அக்ஷய்குமார் போன்றோர் பான் இந்தியா சேல்ஸுக்கு ஹெல்ப் பண்ணியுள்ளார்கள்.
250 கோடியில் இந்த ‘கண்ணப்பா’வை எடுத்ததற்குப் பதில், அந்த கண்ணப்பன் குடியிருக்கும் ஸ்ரீகாளகஸ்தி கோவில் வாசலில் பராரிகளாக இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க சில கோடிகளை செலவழித்திருந்தாலே விஷ்ணு மஞ்சுவுக்கும் அவரது அப்பா மோகன்பாபுவுக்கும் கடவுள் பரமேஸ்வரனின் கருணைப் பார்வை கிடைத்திருக்கும்.
— மதுரை மாறன்