நாட்டு சர்க்கரை நீரிழிவுக்கான சிறந்த மாற்றா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது. இவையன்றி, மேலும் பதிமூன்று கோடி பேருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை ( ப்ரீ டயாபடிஸ்) இவர்கள் அனைவரும் அடுத்த சில ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளாக மாற இருப்பவர்கள் ஆவர்.
முப்பது கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம்.
மேலும் முப்பத்தைந்து கோடி பேர் உடல் பருமன் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருவதாக சமீபத்திய ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது காணும் இருவரில் ஒருவருக்கு உடல் பருமன் நோயும், மூவரில் ஒருவருக்கு கல்லீரலில் கொழுப்பு படியும் நோயும் உள்ளது.
ஒரு பக்கம் நீரிழிவு என்பது நோயே அல்ல.
பழங்கள் சாப்பிட்டே நீரிழிவை விரட்டலாம்.
கசாயம் குடித்தால் நீரிழிவு காணாமல் போகும்.
இந்த மாத்திரை சாப்பிட்டால் நீரிழிவு முற்றிலும் குணமாகும் என்றெல்லாம் பொய்யான தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
மற்றொரு பக்கம் வீட்டில் கட்டாயம் ஒருவருக்கு நீரிழிவோ, அல்லது உயர் ரத்த அழுத்தமோ, உடல் பருமனோ அல்லது பிசிஓடி இருந்து பல இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் அன்றாட வாழ்க்கையின் தரம் குறைகிறது. குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் கையிருப்பில் இருந்து அதிகமாக தங்களது நோய்களுக்காக செலவு செய்யும் போக்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நீரிழிவை வராமல் பார்த்துக் கொள்ள முதலில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை நாம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நீரிழிவு என்பது நமது உடலின் உணவுப் பொருள் கிரகித்தலிலும் வளர்சிதை மாற்றத்திலும் ஏற்படும் “கோளாறு” ( DISORDER) ஆகும்.
இதை நோய் கணக்கிலும் மொத்தமாக சேர்த்துவிட முடியாது.
குறைபாடு கணக்கிலும் மொத்தமாக சேர்த்து விட முடியாது.
உண்ணும் உணவில் உள்ள சத்துகளை முறையாக கிரகிக்க முடியாமல் போவதும், கணையத்தின் பீட்டா செல்களால் சுரக்கப்பட்ட இன்சுலின் எனும் ஹார்மோன் சரியாக அதன் வேலை செய்யாமல் இருப்பதும், நாளடைவில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதும் என்று அனைத்து நிலைகளிலும் நீரிழிவு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் நீரிழிவு நோயாளிகளாக மாறிக் கொண்டே வருவதற்கு முக்கியமான காரணம் நமது வாழ்க்கை முறையும், நமது மரபணுக்களும் என்றால் அது மிகையாகாது.
இதில் நீரிழிவிற்கு உகந்த மரபணுக்களை கொண்டிருக்கும் தெற்காசியர்களாகிய. நாம் அனைவரும் வெவ்வேறு பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் நம் அனைவருக்கும் நீரிழிவை உண்டாக்க வல்ல மரபணுக்கள் ஒருமாதிரியாக இடம்பெற்றுள்ளன.
நாம் நமது மரபணுவை மாற்றி அமைக்க இயலாது.
ஆனால், மரபணு எப்படி வெளிப்படுகிறது? என்பதை முடிவு செய்யும் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் முழு சக்தியும் நம்மிடமே உள்ளது.
நல்ல வாழ்க்கை முறையில் முக்கியமானதாக இருப்பது – நமது உணவு அதற்கடுத்த நிலைகளில் வருவது நமது உடல் பயிற்சி, மன அழுத்தம் குறைவான வாழ்க்கை ( மன அழுத்தமற்ற வாழ்க்கை சாத்தியமற்றது), போதுமான உறக்கம் போதை வஸ்துகளற்ற நிலை ஆகியனவாகும்.
பலர் நினைப்பது போல இந்த நீரிழிவுக் கோளாறுக்கு உடல் பயிற்சியின்மை மட்டுமே காரணமன்று. அப்படி அது காரணமாக இருப்பின் நகரங்களை விடவும் இன்னும் சிறப்பாக கூடுதலாக உடல் உழைப்பு செய்யும் மக்கள் வாழும் கிராமங்களில் நீரிழிவே இருக்கக் கூடாது.
ஆனால் கடந்த பத்து வருடங்களில் கிராமங்களில் நீரிழிவு / ரத்தக் கொதிப்பு போன்றவற்றின் தாக்கம் அச்சம் தரும் வகையில் கூடி வருகிறது. கிட்டத்தட்ட நகரங்களுடன் போட்டி போடும் அளவு கிராமங்களில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன.
நீரிழிவு ரத்தக் கொதிப்பு போன்றவை ஏற்படுவதற்கு தலையாய முக்கியக் காரணமாக இருப்பது “அதிக மாவுச்சத்து உணவு” ( VERY HIGH CARBOHYDRATE DIET).
நாம் உண்ணும் “மாவுச்சத்து” ( கார்போஹைட்ரேட்ஸ்) அதிகமுள்ள தானியங்கள் சார்ந்த உணவு முறை தான் நம்மை நீரிழிவு நோக்கி உந்தித் தள்ளும் முக்கிய விசையாக இருக்கிறது. இதைப் பல மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.
தானியங்கள் :
அரிசி, கோதுமை மற்றும் சிறுதானியங்கள் இவை அனைத்திலும் மாவுச்சத்தே மிக அதிகமாக நிறைந்துள்ளது.
” அரிசி”மட்டுமே நீரிழிவிற்கு ஆபத்து என்ற கருத்து நிலவிவருகிறது. அவ்வாறன்று அளவுக்கு அதிகமாக கோதுமை/ ரவை/ சிறுதானியங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டாலும் நீரிழிவு கட்டுப்படாமல் போவதைப் பதிவு செய்கிறேன்.
இதற்கடுத்த நிலையில்,
தேனீர் / காபி போன்றவற்றில் இனிப்பு கலந்து பருகுவதை நிறுத்த வேண்டும்.
பலரும் சீனியை நிறுத்தச் சொன்னால் அதற்கடுத்து நாட்டு சர்க்கரைக்கும், பிறகு கருப்பட்டிக்கும் மாறுகிறார்கள்.
அவற்றை ஆரோக்கியமான மாற்றுகளாக நம்புகிறார்கள்.
நாட்டு சர்க்கரை கரும்பில் இருந்து வருகிறது. சீனி நாட்டு சர்க்கரையில் இருந்து வருகிறது எனும் போது இரண்டுமே நீரிழிவிற்கு பாதகமானவை என்பதை நாம் உணர்வதற்கு எது தடையாக உள்ளது?
அதுமட்டுமன்று
நீரிழிவு ஏற்படாமல் காத்திட
நீரிழிவை கட்டுக்குள் வைக்க
“இனிப்பு” சுவை கொண்ட அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.
சீனி, நாட்டு சர்க்கரை , வெல்லம், கருப்பட்டி, தேன், இனிப்பு சுவை கொண்ட மா, பலா, வாழை, பப்பாளி, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட
அனைத்து பழங்களையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது அவர்களது ரத்த சர்க்கரை சிறப்பாகக் கட்டுப்பட உதவும்.
இதற்கடுத்த நிலையில் நம்மிடையே வியாபித்திருக்கும் ஸ்நேக்ஸ் வகைகள்
வடை, பஜ்ஜி , சமோசா என ஆரம்பித்து முறுக்கு, பிஸ்கட் , மிக்சர் என காணும் அனைத்திலும் மாவுச்சத்து நிரம்பியுள்ளது.
நகரங்களில் பீட்சா, பர்கர் என சாப்பிடப்படுகிறது.
கிராமங்களில் வடை, பஜ்ஜி என்று சாப்பிடப்படுகிறது.
அதீத மாவுச்சத்து+ இனிப்புச் சத்து + ட்ரான்ஸ் ஃபேட் எனும் ஆபத்தான கொழுப்புகள் அடங்கிய மேற்சொன்ன ஸ்நாக்ஸ் வகைகளை நாம் தவிர்க்க வேண்டும்.
– கொய்யா காய்
– வெள்ளரிக்காய்
– நெல்லிக்காய்
– தேங்காய்
– நிலக்கடலை
– முளைகட்டிய பயறு
– முட்டை
– சுண்டல்
– பாதாம் / பிஸ்தா/ வால்நட்
போன்றவை நீரிழிவு நோயர்க்கு மாவுச்சத்து குறைந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும்.
பலரும் சீனி இல்லாத டீயுடன் சீனி கலந்து செய்யப்படும் பிஸ்கட்டை தொட்டுக் கொண்டு சாப்பிடுவர்.
பழங்களால் பிரச்சனை இல்லை என்று தவறான நம்பிக்கையில் தினமும் இமாம் பசந்த் , கற்பூர வள்ளி, நாட்டுப் பழம் , செவ்வாழை என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
இவையனைத்தும் சரி செய்யப்பட வேண்டிய உணவு சார் வாழ்வியல் மாற்றங்களாகும்.
சரி உணவில் மாவுச்சத்தைக் குறைத்தால் அதற்கு ஈடாக எதை சாப்பிடுவது? என்ற கேள்வி உங்கள் மனங்களில் எழுவதை அறிகிறேன்.
குறைக்கப்பட்ட மாவுச்சத்துக்கு ஈடாக புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து நிறைந்த
முட்டைகள்
கோழி உள்ளிட்ட பறவையின மாமிசம்,
கால்நடை மாமிசம்
மீன்கள்
பயறு
கடலை
பருப்பு
பால்
பன்னீர்
சோயா & டோஃபு
சுண்டல்
பட்டாணி
காய்கறி
கீரைகள் உள்ளிட்ட அனைத்தையும் உட்கொள்ளலாம்.
உணவு முறை மாற்றத்தைக் கை கொண்ட பின் தினசரி அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை வாரம் ஐந்து நாட்களாவது நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சி மூலம் தேவையற்ற உடல் எடை குறையும்.
உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளூகோஸ் , உடற்பயிற்சி மூலம் தசைகளுக்கு உணவாக மாறிவிடும். இதனால் ரத்த க்ளூகோஸ் அளவுகள் நன்றாகக் கட்டுப்படும்.
உணவுக்குப் பிறகு கூட அரை மணிநேரம் வாக்கிங் செல்வது உணவுக்குப் பின்பான சர்க்கரை அளவுகளை வெகுவாகக் குறைக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

தினசரி ஏழு முதல் எட்டு மணிநேரம் உறங்குவது ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்பாட்டுக்கு முக்கியம். பலரும் தூக்கத்தின் அருமையை உணராமல் படுக்கையிலும் கைப்பேசியை வைத்துக் கொண்டு ரீல்ஸ் பார்ப்பதைக் கைவிட வேண்டும்.
தினமும் இரவு 10 மணிக்கு உறங்கி காலை 6 மணிக்கு எழுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.
இல்லறம் மற்றும் குடும்பம் சார்ந்த , வேலைப் பளு சார்ந்த, சுற்றம் சார்ந்த ,சமூகம் சார்ந்த பல அழுத்தங்கள் நம் மீது எப்போதும் இருக்கும். எனினும் அவற்றை நம் உடல் மற்றும் மனம் மீது அதிகமான தாக்கம் செலுத்தவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் என்பது கார்டிசால் எனும் ஹார்மோன் அளவுகளை அதிகரிக்கிறது. கார்டிசால் அளவுகள் அதிகமாக இருந்தால் ரத்த க்ளூகோஸ் கட்டுப்படாது.
மது,புகையிலை, சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களை உடனே நிறுத்த வேண்டும்.
“நீரிழிவு ”
“ரத்தக் கொதிப்பு ”
“பிசிஓடி”
“உடல் பருமன் ”
போன்ற கோளாறுகளுக்கான மேற்கூறிய அடிப்படை காரணங்களை சரிசெய்வதன் மூலம் நம்மால் தொற்றா நோய்களின் அச்சம் நீங்கி நிம்மதியான நோயற்ற வாழ்க்கையை வாழ்ந்திட முடியும் என்று நம்புகிறேன்.
சக மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
இன்றைய இந்து தமிழ் நாளிதழின் மருத்துவர் தின சிறப்பு இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்