கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை !
கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது : ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று காணமால் போன நிலையில், இன்று ( 03.07.2025) அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
அச்சிறுவனை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.

ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் அளித்த நிலையில், உடனே காவல்துறை விசாரணையை தொடங்கியிருந்தால், அச்சிறுவனை காப்பாற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.
ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் காவல்துறை மெத்தனப் போக்கில் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறையின் இத்தகைய அலட்சியம், தமிழ்நாடு அரசுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைத்திருக்கிறது.
எனவே, சிறுவன் ரோகித் கொலை செய்யப்பட்ட இவ்வழக்கில், ஈவு இறக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்த கும்பலை உடனடியாக கைது செய்து, அக்குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.