மேலதிகாரியின் பாராட்டுக்காக, வாழ்க்கையை தொலைக்கும் கடைநிலை ஊழியர்கள் !
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு பழக்கம் உண்டு. அதாவது தன் மேல் அதிகாரி சொல்லும் வேலையை துல்லியமாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்கும் ஊழியர்கள், தங்கள் மேலதிகாரிகளால் அதிகம் பாராட்டப்படுவார்கள்.
இந்தப் பாராட்டுக்காக ஏங்கி தவறு செய்து, தன் வாழ்க்கையை தொலைத்த பல ஊழியர்களை என் காலத்தில் நான் கண்டுள்ளேன்.
இதில் பிரதான இடத்தை பிடிப்பது காவல்துறையே.
S. I. யிடம் நல்ல பேரு வாங்க காவலர்கள் முயற்சிப்பார்கள்.
இன்ஸ்பெக்டரிடம் நல்ல பெயர் வாங்க S. I.கள் முயற்சிப்பார்கள்.
டிஎஸ்பி யிடம் நல்ல பேரு வாங்க இன்ஸ்பெக்டர்கள் முயற்சிப்பார்கள்.
எஸ்பி இடம் நல்ல பேரை வாங்க டிஎஸ்பிகள் முயற்சிப்பார்கள்.
இப்படி உயர் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவதற்கு அனைவரும் முண்டியடித்துக் கொண்டு போவார்கள்.
ஒரு சிலர் மட்டும் தன் பணியில் மட்டுமே கவனமாக இருப்பார்கள்.
வருவது வரட்டும் அரசு கொடுப்பது போதும் என்ற மனநிலையில் உள்ளவர்கள்.
அதிகாரிகளின் உத்தரவுக்கு அதிகமாக ஆட்டம் போட மாட்டார்கள்.
அதே நேரம் தம்முடைய கடமையை வேலையை குறை சொல்லாத அளவிற்கு செய்து முடிப்பார்கள்.
இவர்கள் பாராட்டுக்காக ஏங்க மாட்டார்கள். பாராட்டுக்காக ஏங்கும் ஊழியர்கள் விட்டில் பூச்சிகளாக சில நேரங்களில் மாட்டிக்கொள்வார்கள்.
இவர்கள் மாட்டிக்கொள்ளும் பொழுது, இவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் லாவகமாக தப்பித்து விடுவார்கள்.
ஊழியர்கள் மாட்டிக்கொண்டு வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள்.
நேற்று 30-6-25 பணி மூப்பு பெறவேண்டிய நேரத்தில் ஒரு சில குரூப் ஒன் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை செய்தித்தாள்களில் பார்த்தேன்.
சந்தோஷமாக பணி மூப்பு பெறவேண்டிய நேரத்தில், ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றால் அவருடைய மனநிலையையும், அவர் குடும்பத்தாரின் மனநிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?. 29 ஆம் தேதி வரை மேலதிகாரியின் கட்டளைக்கு வேலை செய்தவர்கள், 30ஆம் தேதி எப்படி குற்றவாளியானார்கள்.
F. R 56 (1)(C) மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்கள் மேலதிகாரிகளுக்கு லஞ்சப் பணத்தில் கப்பம் கட்டியவர்கள். லஞ்சம் வாங்கியவர்களே வாங்கி கொடுத்த வரை பணிநீக்கம் செய்கின்றனர்.
கடந்த அண்ணா திமுக ஆட்சியின் போது சாத்தான்குளத்தில் ஸ்ரீதர் எனும் ஒரு இன்ஸ்பெக்டரை திருப்தி படுத்த இரண்டு S. I.கள் 6 காவலர்கள் பிலிப்ஸ் மற்றும் ஜெரால்ட் பெயர் கொண்ட அப்பா மகனை காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்றனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வாழ்க்கையும் தொலைந்து போய்விட்டது. அவரை திருப்திப்படுத்த முயன்ற மற்ற 8 பேரின் வாழ்க்கையும் நாசமானது காவலர்கள் 9 பேர். ஆனால் அவர்களுடைய மொத்த குடும்ப எண்ணிக்கை 100 பேர்.
ஒரு அதிகாரியை திருப்திப்படுத்த தற்போது 100 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
தற்போது திருபுவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் ஆறு காவலர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். இவர்கள் அனைவருமே தனிப்படை காவலர்கள்.
சிவகங்கை எஸ் பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ் பி ஐ பொறுத்தவரையில் இது கண்துடைப்பு தான். ஒரு மாதத்தில் அவர் வேறு பணிக்கு சென்று விடுவார்.
ஆனால் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 28 வயது வாலிபனை அடித்தே கொன்ற அந்த காவலர்கள் தங்கள் முழு வாழ்க்கையும் இழந்தவர்கள் தான்.
உத்தரவு யாரிடமிருந்து வந்தாலும் எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், சட்டத்துக்கு உட்பட்டு செய்பவர்கள் எப்போதும் எந்த தண்டனையும் பெறுவதில்லை.
அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் அவ்வளவுதான். ஆனால் இந்த ஆறு பேருக்கும் தாங்கள் வாழ்நாள் முழுவதும் கொலை செய்து விட்டோம் என்ற குற்ற உணர்விலேயே வாழ்ந்து முடிப்பார்கள். அதிகாரிகள் ஈசியாக தப்பித்து விடுவார்கள்.
பல் டாக்டர் பல்வீர்சிங் தற்போது பணியில் தானே இருக்கிறார். அவர் மீது விசாரணை நடத்தியது நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்கள் தானே. எந்த தண்டனையும் இல்லையே.
60 பேர் சாராயம் குடித்து இறப்பதற்கு காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி எஸ்பி பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார். அவரும் தற்போது பணியில் தானே இருக்கிறார். எனவே மேல்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படியும் தப்பித்துக் கொள்வார்கள்.
இன்ஸ்பெக்டருக்கு கீழே உள்ள காவலர்கள் மிகவும் எச்சரிக்கையோடு பணி செய்ய வேண்டும். இவர்கள் பணியை சிறப்பாக செய்தால் அந்தப் பாராட்டு டிஎஸ்பிக்கும் எஸ்பிக்கும் செல்லும்.
பணியில் ஏதும் தவறு நடந்து விட்டால் முத்த அதிகாரிகள் பொறுப்பு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். காவல்துறையில் மட்டுமல்ல அனைத்து துறையிலும் இதுதான் நிலைமை.
அரசுத் துறையில் நான் பணிபுரிந்த அனுபவத்தில் இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று அதீத முயற்சி வேண்டாம். உங்கள் கடமையை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்தால் மட்டுமே போதுமானது.
உங்களுக்கு வரவேண்டிய பெருமை, மரியாதை, ஒரு இடத்தில் கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் இன்னொரு இடத்தில் கிடைக்கும்.
அவ்வாறே நீங்கள் தவறு இழைக்கும் பட்சத்தில் நூறு முறை தப்பிக்கலாம் கண்டிப்பாக ஒருமுறை மாட்டிக் கொள்வீர்கள்.
மரியாதை என்பது உங்களிடம் உள்ள பொருள்களினால் வருவது அல்ல. அது முழுக்க முழுக்க உங்களின் நேர்மையை சார்ந்தது. நேர்மையாய் இருந்து பாருங்கள். மரியாதை தானாக உங்களைத் தேடி வரும்.
எனவே விதிப்படி வேலை செய்து உங்கள் விதியை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.