அங்குசம் பார்வையில் ‘ஃபீனிக்ஸ்’
தயாரிப்பு : ‘பிரேவ்மென் பிக்சர்ஸ்’ ராஜலட்சுமி அனல் அரசு. டைரக்ஷன் : ‘அனல்’ அரசு. ஆர்ட்டிஸ்ட் : சூர்யா சேதுபதி [ அறிமுகம்], வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, சம்பத்ராஜ், முத்துக்குமார், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, ஆடுகளம் முருகதாஸ், கேமராமேன் வேல்ராஜ், ஹரிஷ் உத்தமன், அஜய்கோஷ், ஆடுகளம் நரேன், தீலிபன், மூணார் ரமேஷ்,கஜராஜ், வர்ஷா விஸ்வநாத். ஒளிப்பதிவு : இரா.வேல்ராஜ், இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : பிரவீன் கே.எல்., ஆர்ட் டைரக்டர் : கே.மதன், ஸ்டண்ட் : ‘அனல்’ அரசு, பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.
மீனவர்கள் வாழும் வடசென்னை ஆர்.கே.நகர் பகுதி தான் கதைக்களம். தொகுதியின் எம்.எல்.ஏ.வான சம்பத்ராஜுக்கும் மாஜி எம்.எல்.ஏ.வான முத்துக்குமாருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். கட்சிக் கூட்டத்தில் முத்துக்குமாரின் ஆதரவாளர்கள், சம்பத்ராஜை அசிங்கப்படுத்திவிட, மறு நாள் அவர்களை எரித்துக் கொன்று அஞ்சலியும் செலுத்துகிறார் சம்பத்ராஜ். இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அதே மீனவர் குப்பம் பகுதியில் பட்டப்பகலில் சம்பத்ராஜை வெட்டிச் சாய்க்கிறான் சூர்யா [ கேரக்டர் பேரும் அதான்] என்ற 17 வயது இளைஞன்.
அவனைக் கைது செய்து இளைஞர்கள் சீர்திருத்தக்குழு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கிறது போலீஸ். அங்கே ஏற்கனவே அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி கூலிப்படை சிறார்களை செட் பண்ணி, அங்கேயே போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார் செத்துப் போன சம்பத்ராஜின் மனைவி வரலட்சுமி சரத்குமார். அந்த ப்ளான் ஃபெயிலியராகிவிட, வடநாட்டு கூலிப்படையை வரவைத்து மாஜி எம்.எல்.ஏ.முத்துக்குமாரை பொலி போட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்புகிறார் வரலட்சுமி. அந்த கூலிப்படையையும் கடுமையாக பொளந்து கட்டி தப்பிவிடுகிறார் சூர்யா.
மூன்றாவது மெகா ப்ளான் ஒன்றைப் போடுகிறார் வரலட்சுமியின் அப்பாவும் அமைச்சருமான அஜய் கோஷ். அந்த ப்ளானிலிருந்து சூர்யா தப்பினாரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ஃபீனிக்ஸ்’.
சினிமாவில் அறிமுகமாகும் இளம் ஹீரோக்கள் பொதுவாக லவ் ஜானர், ஃபேமிலி செண்டிமெண்ட் ஜானரில் தான் அறிமுகமாவார்கள். ஆனால் பக்கா ஆக்ஷன் ஜானரில் ‘ஃபீனிக்ஸ்’ பறவை ஜானரில் அறிமுகமாகியுள்ளார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. ஆக்ஷனில் சும்மா புகுந்து விளையாடியுள்ளார். புகுந்து விளையாடுவதற்கான பாடியையும் ஃபிட்டாக வைத்து, வெல் டிரெய்ண்ட்டுடன் ஆக்ஷன் கோதாவில் குதித்துள்ளார் சூர்யா. சிறுவர்கள் ஜெயிலில் நடக்கும் ஃபைட், கோர்ட்டுக்கு கூட்டி வரும் போது நடக்கும் பெட்ரோல் பாம் ஃபைட் என ரொம்பவே ரிஸ்க்கான ஃபைட்டுகளை துணிந்து செய்திருக்கிறார் சூர்யா. எல்லா ஃபைட்டுகளையும் சூர்யாவுக்காக ஸ்பெஷலாக கம்போஸ் பண்ணியுள்ள ஸ்டண்ட் மாஸ்டரும் படத்தின் டைரக்டருமான அனல் அரசுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் இந்தளவு ஆக்ரோஷமான, ஸ்டஃப்பான ஃபைட் சீக்வென்ஸை நாம் பார்த்ததில்லை.
இடைவேளை வரை சூர்யா பேசும் ஒரே வசன வார்த்தைகள் “அம்மா”, “அம்மாவைப் பார்த்துக்க” என்பது மட்டுமே. அதையும் செண்டிமெண்டாக வைத்திருப்பார் போல அனல் அரசு. எல்லாம் சரி தான், சூர்யாவின் இண்ட்ரோ சீன் கொஞ்சம் நீ…ளமாகி, கொஞ்சம் பில்டப்பா போச்சு. மற்றபடி சோக செண்டிமெண்ட் சீன்களிலும் டான்ஸ் மூவ்மெண்டிலும் இடைவேளைக்குப் பின்பு தனது ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்ததும் “நாங்கெல்லாம் ஜெயிக்கக்கூடாதா சார்” என சிறுவர்கள் ஜெயிலுக்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி வேல்ராஜிடம் கேட்கும் சீனிலும் நல்ல மார்க் வாங்கி பாஸாகிட்டார் சூர்யா. அடுத்தடுத்த சினிமாக்களில் இன்னும் கூடுதல் பயிற்சியெடுத்து, பல்வேறு ஜானர்களில் பயணிக்கும் போது தான் ‘டிஸ்டிங்ஷனில்’ பாஸாக முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் சிறுவன் சூர்யா… ஸாரி தம்பி சூர்யா.
சூர்யாவின் அம்மாவாக தேவதர்ஷினி, அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ், இவரின் காதலியாக அபி நக்ஷத்ரா, ஜெயில் உதவியாளராக ஆடுகளம் முருகதாஸ், விசாரணை அதிகாரியாக ஹரிஷ் உத்தமன், கமிஷனராக ஆடுகளம் நரேன், கொடூர வில்லியாக வரலட்சுமி சரத்குமார், இல்லீகல் இன்ஸ்பெக்டராக மூணார் ரமேஷ் என அனைத்து கதாபாத்திரங்களுமே கவனிக்கப்படுகின்றன. இதுலயும் ஒரு ஓவர் பில்டப் என்னன்னா… “சாம்பலில் இருந்து எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவை போல சூர்யா” என போலீஸ் அதிகாரி ஹரிஷ் உத்தமன் உறுமுவது தான்.
மிகவும் அனுபவசாலியான வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்டர் மதனின் ஜெயில் செட் இவையெல்லாம் அனல் அரசுவின் ஃபீனிக்ஸ் கம்பீரமாக எழுந்து பறக்க உதவியுள்ளன. அதே போல் எல்லா படங்களிலும் காது ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும் அளவுக்கு பின்னணி இசையைப் போட்டுத் தாக்கும் சாம் சி.எஸ்.கூட சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். குறிப்பாக பாக்ஸிங் நடக்கும் சீனில் இசைக்கருவிகளின் ஓசையுடன் “தகிடதகிட..” என்ற குரலோசையையும் மிக்ஸ் பண்ணியிருப்பது வெகு ஜோர்.
அதிரடி ஆக்ஷன் பிரியர்களுக்கு அன்லிமிட் ’நான்வெஜ்’ மீல்ஸ் இந்த ஃபீனிக்ஸ்’.
— மதுரை மாறன்