அதிரடி எண்ட்ரியான புதுக் கம்பெனி ! அதிசயம் + ஆச்சர்யத்தில் கோலிவுட்!
கடந்த 04—ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை. அண்ணாசலையில் உள்ள ’புல்மேன்’ என்ற ஃபைவ் ஸ்டார் ஓட்டலே கோலாகலமாக காட்சியளித்தது. “ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தமிழ் சேனலில் கிரிக்கெட் பிரபலங்களுடன் கலந்துரையாடும் பாவனா பாலகிருஷ்ணன் அந்த மேடையில் கொஞ்சம் கவர்ச்சியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க ‘சி.எஸ்.கே.’ டீமின் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை அழைத்தார் பாவனா. சரி, ஏதோ விளையாட்டு சம்பந்தப்பட்ட விழாவா இருக்கும்னு நினைச்சோம்.
ஷிவம்துபேவும் ஒரு வயதான பெண்மணியும் குத்துவிளக்கேற்றியதும், ரிமோட் பட்டனை அழுத்தினார் ஷிவம் துபே. ஆறு வினாடிகள் கழித்து ‘ட்ரீம் நைட் ஸ்டோரிஸ்’ என்ற புது சினிமாக் கம்பெனியின் லோகோ, ஸ்கிரீனில் பளிச்சிட்டது.
ட்ரீம் நைட் ஸ்டோரிஸின் பெயரிடப்படாத இந்த முதல் தயாரிப்பின் ஹீரோ யாருன்னா, அதே சென்னை சூப்பர் கிங்கிஸ் டீமில் ‘தல’ தோனிக்கு ரொம்பவும் பிடித்தமான லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேனாக இருந்த ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா தான்.
மேடையில் பாவனாவின் பல கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்துவிட்டு, ட்ரீம் நைட் ஸ்டோரிஸின் ஓனரான சரவணக்குமாருடன் ஆனந்தமாக கைகுலுக்கிவிட்டு புறப்பட்டார் ஷிவம்துபே.
அதன் பின் எடிட்டர் மோகன், அவரது மனைவி வரலட்சுமி, மகன் டைரக்டர் மோகன்ராஜா, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பு நிர்வாகி முத்துராஜ், டைரக்டர்கள் விஜய் மில்டன், பாக்யராஜ் கண்ணன், திருக்குமரன், ‘ஏஜிஎஸ்’ சின் தலைமைத் தயாரிப்பு நிர்வாகியான வெங்கட் மாணிக்கம், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் , பிரம்மாண்டமாகவும் அதிரடியாகவும் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ள ‘ட்ரீம் நைட் ஸ்டோரிஸையும் அதன் ஓனரான சரவணக்குமாரையும் வாழ்த்திப் பேசினார்கள்.
இது முடிந்த பிறகு மேடையில் இருந்த ஸ்கிரீனில் லைவ்வாக வீடியோ காலில் வந்தார் ஹீரோ சுரேஷ் ரெய்னா. “தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது பெருமையாக இருக்கு. சென்னை எப்போதுமே எனக்கு நெருக்கமானது. படத்தின் இயக்குனர் லோகன் சொன்ன கதை எனக்குப் பிடித்தது. தயாரிப்பாளர் சரவணக்குமாரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒத்துக் கொண்டேன்” என்றார் ரெய்னா.
‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘கெத்து’ போன்ற படங்களிலும் விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ரெட்ட தல’ படத்திலும் வசனகர்த்தாவாக பணிபுரிந்த லோகன் தான் இப்படம் மூலம் டைரக்டராக புரமோட் ஆகியுள்ளார்.
யார் இந்த சரவணக்குமார்?
பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘ஏ.ஜி.எஸ்.எண்டெர்டெய்மெண்ட்’டில் பல படங்களுக்கு தயாரிப்பு பொறுப்பாளராக இருந்தவர் தான் இந்த சரவணக்குமார். இவரது சகோதரர் சிவக்குமார் என்பவர் ‘கே.ஜி.எஃப் ஸ்போர்ட்ஸ் & எண்டெர்டெய்மெண்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு விளையாட்டு வீரர்களுடன் நன்கு அறிமுகமானதால் முதல் சினிமாவையே சுரெஷ் ரெய்னாவை வைத்து ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் சரவணக்குமார்.
‘புல்மேன்’ ஓட்டலின் நான்காவது மாடியே ஃபுல்லானதைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது கோலிவுட்.
— மதுரை மாறன்