தோப்பாக்கியது நாங்கள் … இடையில் வந்தவர்களால் ஆபத்து … மாம்பழ அரசியல் !
இந்திய மக்களின் உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்களே. அதிக மக்கள் உணவாக எடுத்துக் கொள்ளும் பழங்களுள் மா முக்கியமானது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மா விவசாயம் செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவைக்கு மட்டுமே பயன்படக்கூடிய அளவில் உள்ளன.
கசக்கும் மாம்பழம் :
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், சுமார் 1.45 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா பயிரிடுவதன் மூலம் முதலிடத்தை பிடித்திருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம். முக்கனியில் முதல் கனியான மா விவசாயம் செய்துள்ள விவசாயிகளோ, ‘மாம்பழம் கசக்கிறது’ என்பதாக, வேதனைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

மா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்துகொள்ள நேரடியாகவே களத்திற்கு சென்றோம். மா விவசாயிகளிடம் கலந்துரையாடினோம். தங்களது வேதனைகளை விவரிக்கத் தொடங்கினார்கள். “ தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்துக்கு 30 கிலோ மாட்டுச் சாணம் வைக்க வேண்டும். இந்தச் செலவு ஏக்கர் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பிடிக்கும். மாவுப் பூச்சி, அசுவினி, பிஞ்சு ஊறிஞ்சிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் மருந்து அடிக்கவேண்டும். ஒரு லிட்டர் மருந்து இரண்டாயிரம் ரூபாய். இதற்கான ஆள் கூலி, ஓர் ஏக்கருக்கு நான்காயிரம். முதிர்ந்த காய்களை அறுவடை செய்வதற்கு ஏக்கருக்கு நான்காயிரம் என, சராசரி ஓர் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது.
காய்களை சந்தைக்குக் கொண்டு போகும்போது கிலோ ஐந்து ரூபாய் விலைக்குத்தான் போகிறது. இதனால், ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மாம்பழங்களை வாங்கிச் சாப்பிடும் மக்களுக்கு அவை இனிப்பாக இருந்தாலும், எங்களுக்கு மாம்பழம் கசக்கிறது” என்கின்றனர், மா விவசாயிகள்.
வழக்கமாகவே, மாம்பழ பருவம் தொடங்கும்போது, தோப்பிலிருந்து பறிக்கப்படும் பழங்கள், முதலில் கடை விற்பனைக்கு வரும். ஒரு மாதத்துக்குப் பிறகு, விளைச்சல் அதிகம் ஆகும்போது, விலை குறையும். அந்த நேரம் மாம்பழக் கூழ் தொழிற்சாலைக்குத் தேவையான பழங்களை, வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. பெரும்பாலும், விவசாயிகளே காய்களைப் பறித்து வந்து, அருகிலுள்ள மண்டிகளில் விற்பனை செய்து வந்தனர். இந்த வேலைகளை செய்வதற்கு இப்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பழனி, உடுமலை பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகளை அணுகி, மாந்தோப்புகளை அப்படியே குத்தகைக்கு எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன்படி, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கின்றனர். மாந்தோப்புக்கு வெறுமனே தண்ணீர் பாய்ச்சும் கூலிக்காரர்களாவே தோப்பு உரிமையாளர்களான விவசாயிகளை மாற்றிவிட்டனர். மற்றபடி உரம், பூச்சி மருந்து, காய் பறித்தல், சந்தைக்கு எடுத்துச் செல்வது அனைத்தும் குத்தகை தாரரின் பொறுப்பு. இந்த அடிப்படையில், விவசாயிகள் மாந்தோப்புகளை குத்தகைக்கு விட்டுவிடுகின்றனர்.
இப்படி வரும் குத்தகை வியாபாரிகள், மா மரங்களுக்கு உரம் கொடுக்கிறேன் என்ற பெயரில் கல்தார் (CULTAR) என்ற வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து, மா மரங்களின் வேர்களுக்குக் கொடுக்கின்றனர். கல்தார் எனும் வேதிப் பொருள், மரங்களின் பூக்கும் திறனை தூண்டிவிடும் தன்மை கொண்டது.
தோப்பை குத்தகைக்கு எடுத்த முதல் மாதத்திலேயே கல்தார் மருந்தைப் பயன்படுத்தி மா மரங்களுக்கு உரம் கொடுகின்றனர். அடுத்த 90 நாள்களில் மாம் பிஞ்சுகள் பிடிக்க ஆரம்பிக்கும். வழக்கமாக இரண்டாயிரம் கிலோ மாங்காய் அறுவடை செய்யப்படும் ஒரு தோப்பில், கல்தார் கரைசலைப் பயன்படுத்தினால், அப்படியே மகசூல் இரட்டிப்பாகி ஐந்தாயிரம் கிலோ வரையில் மாங்காய்களை பறிக்க முடியும் என்கிறார்கள். இப்படியே, மூன்றாண்டு குத்தகை காலம் முழுவதும் கல்தார் கரைசலைப் பயன்படுத்தி மா அறுவடை செய்து விடுவார்கள். கல்தார் வேதிப்பொருளின் தாக்கம் அதிகமாகி, நான்காம் ஆண்டில் தோப்பிலிருக்கும் பாதி மரங்கள் பட்டு போய்விடும்.
ஆள் பற்றாக்குறை, மா மரங்களுக்கான இடுபொருள் செலவு போன்ற காரணங்களால் குத்தகைக்கு விடும் மாந்தோப்பு உரிமையாளர்கள், ஆசையாய் வைத்த மா மரங்கள் அனைத்தும் அடுத்த சில ஆண்டுகளில் பட்டு போகும் சூழலுக்கு ஆளாகும்.
இங்கே, இதற்கும் விலை வீழ்ச்சிக்கும் என்ன தொடர்பு என்பதுதானே, உங்களுக்கு எழும் சந்தேகம்? காரணம் இருக்கிறது. கல்தார் கரைசலை பயன்படுத்துவதன் மூலம், விளைச்சல் அதிகமாக வரும் என்பது உண்மைதான். ஆனால், அதன் தவிர்க்கவியலாத மற்றொரு விளைவு, மாம்பழங்களின் சுவை குறைந்து விடும் என்பதுதான். அதாவது ஒரு மரம், நூறு கிலோ மாங்காய்களுக்கு கொடுக்கும் சுவை, மனம், சத்து என அனைத்தையும், ஐநூறு கிலோ காய்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலைதான் சிக்கலுக்குரியது. இதன் காரணமாகவே, மாம்பழங்களின் சுவை குறைந்து விடுகிறது.
கல்தார் கரைசலை பயன்படுத்தி அறுவடை செய்யபப்டும் மாங்காய், இயல்பான தோற்றத்தைக் காட்டிலும், சற்று சதை பிடித்து பருத்த தோற்றத்தில் விளைச்சல் ஆகும். இதைப் பார்க்கும் மக்கள் அந்தப் பழங்களை விரும்பி வாங்குவார்கள். ஆனால், சாப்பிடும்போது சுவை இருக்காது. மாம் பழங்கள் சந்தைக்கு வந்ததும், இரண்டு கிலோ மாம்பழங்களை ஒருவர் வாங்கிக்கொண்டு போய் அதை சாப்பிடுவார். அந்த பழத்தின் சுவை, ஒரு மாதிரியான வெறுப்பை ஏற்படுத்தும். அடுத்து அந்த ஆண்டு முழுவதும் மாம்பழமே வாங்க மாட்டார். அந்த அளவுக்குப் பழத்தின் சுவை மோசமான அனுபவத்தை வாடிக்கையாளருக்கு வழங்கியிருக்கும்.
எத்திலீன் மட்டுமே பயன்படுத்தவேண்டும் :
அடுத்து, மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கப்படும் முறையாலும், நுகர்வோர்கள் மாம்பழத்தை வெறுக்கின்றனர். “எத்திலீன் திரவ வாயுவைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைக்க மத்திய உணவு பாதுகாப்புத்துறை (FSSAI)அனுமதி வழங்கியுள்ளது. அதுவும், மாங்காய் உள்ளிட்ட எந்தக் காய்களின்மீதும் நேரடியாக எத்திலீன் திரவத்தைத் தெளிக்கக்கூடாது. பழங்களின் மேல் வைக்கோல் அல்லது காகிதங்களை வைத்து, அதன்மீது எத்திலீன் கரைசலை ஸ்பிரேயர் பயன்படுத்தி காற்றுடன் கலந்து, தெளிக்கலாம். இவ்வாறு பாதுகாப்பான முறையில், பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
இப்படி பழுக்க வைக்கப்படும் மாங்காய்கள், நல்ல வளர்ச்சியடைந்து தோல் சிவந்த நிலையில் இருக்க வேண்டும். மரத்திலிருந்து பறிக்கப்படும் காய்கள், அடுத்த நான்கு அல்லது ஐந்து நாள்களில் இயற்கையாகவே பழுக்கும் நிலையில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான், மேலே சொல்லப்பட்ட முறையில் எத்தனால் கரைசலின் மூலம் எளிதில் பழுக்கும். ஆனால், பெரும்பாலான வியாபாரிகள் வணிகர்கள் மாம் பழங்களை இப்படிப் பாதுகாப்பான முறையில் பழுக்க வைப்பதில்லை. அதற்குக் காரணம் மாங்காய்கள் அறுவடை செய்யப்படும் முறைதான்.
இப்படி முதிர்ந்த மாங்காய்களை பறித்து, சந்தைக்கு கொண்டு வருவதாக இருந்தால், நான்கு அல்லது ஐந்து முறை ஒரு மரத்திலிருந்து மாங்காய் அறுவடை செய்யவேண்டும். ஒவ்வொரு காயாக, பார்த்துப் பார்த்து பறிக்க வேண்டும். காய் கீழே விழுந்து காயம் ஏற்படக்கூடாது. அப்படிச் செய்தால்தான், திரண்டு முதிர்ந்த காய்களாகப் பறித்து எடுக்க முடியும். இதற்கு கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும். கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டியிருக்கும். கூடுதல் செலவும் பிடிக்கும்.

இப்போது பெரும்பாலான வணிகர்களும், விவசாயிகளும், மரத்தின் கீழே சாக்குப்பை அல்லது வலைகளைக் கட்டி, மாங்காய் கிளைகளை தடியால் அடித்து, காய்களைப் பறிக்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம், இரண்டே அறுவடைகளில் காய்களை பறித்து விடுகின்றனர். ஆள் பற்றாக்குறை, கடைசி நேரத்தில் விலை வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம், லாரிகளில் எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சனைகள் என பல காரணங்களால் முதிர்வடையாத காய்களை எல்லாம் வியாபாரிகள் பறித்துக்கொண்டு வந்து சந்தையில் சேர்த்துவிடுகின்றனர்.
இப்படி போதிய அளவு முதிர்வடையாத காய்கள் விற்பனைக்கு வரும்போது, அந்தக் காய்களை வாங்கும், மொத்த விற்பனையாளர்கள், தனித்தனியே பிரித்து வரிசைப்படுத்துகின்றனர். நான்கு நாளில் பழுக்கும் நிலையிலுள்ள மாங்காய்களுக்கு லேசான எத்தனால் கரைசலைத் தெளிக்கின்றனர். ஒரு வாரம் உள்ள காய்களுக்கு எத்தனால், கரைசலை அதிகமாகத் தெளிக்கின்றனர். பத்து நாள்கள் கழித்துதான் பழுக்கும் என்ற நிலையில் உள்ள காய்களை எத்தனால் கரைசலில் மூழ்கவைத்து எடுத்து, பெட்டியில் அடுக்கி விடுகின்றனர்.
இப்படி பெட்டியில் அடுக்கப்படும் பழங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பழுத்து விடும். அந்தப் பழங்களை உண்ணும்போது, அதில் சுவையும், மனமும் சுத்தமாக இருக்காது. சிலருக்கு காலையில் மாம்பழம் சாப்பிட்டால், மதியமே வயிற்றுப் போக்கு ஏற்படும் சூழல் உருவாகலாம். காசு கொடுத்து, மாம்பழம் வாங்கி, எதற்காக வயிற்றைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது பெரும்பாலான மக்கள் மாம்பழங்களை தவிர்த்து வருகின்றனர். பொதுவில் மாம்பழம் சூடு என்ற பொதுக்கருத்து மக்கள் மத்தியில் நிலவிவரும் நிலையில், இதுபோன்ற காரணங்களும் சேர்ந்து, விலை வீழச்சிக்கு வழிவகுத்து விடுகின்றன.

இதுஒருபுறமிருக்க, மாம்பழக் கூழ் தொழிற்சாலைகளிலும்கூட, இதே முறையில்தான் மாங்காய்களைப் பழுக்க வைத்து, கூழ் தயாரிக்கின்றனர். ஒன்று, முதிர்வடையாத காய்களை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். அல்லது, அந்தக் காய்களுக்கு குறைவான விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர்.
கடந்த ஆண்டு கிலோ 15 ரூபாயிலிருந்து, 40 ரூபாய் வரை மாங்கூழ் ஆலைகள் கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு கிலோ ஐந்து ரூபாய்க்கு கூட எடுக்க மறுக்கின்றனர். அனைத்து ஆலை நிர்வாகிகளும் ஒன்றிணைந்து விலைக் கட்டுப்பாடு வைத்துக்கொண்டனர். அதனால், மா விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பதாக, மா விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்த ஆண்டு மா விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலை நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து கொண்டு அடிமாட்டு விலை நிர்ணயித்ததுதான் என்கிறார்கள். இந்நிலையில், இக்குற்றச்சாட்டு குறித்து0, மாங்கூழ் ஆலை நிர்வாக தரப்பில் பேசினோம். “கடந்த 2023 ஆண்டு வரை, இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஜூஸ் கம்பெனியினர், 1,250 மி.லி., 750 மி.லி., 250 மி.லி., 180 மி.லி. என்ற அளவுகளில் ஜூஸ் பாட்டில் தயாரித்து வந்தனர். இப்போது, 1000 மி.லி., 650 மி.லி., 200 மி.லி., 125 மி.லி. என அளவைக் குறைத்து விட்டனர். அதுபோலவே, முன்பு 100 மி.லி. பாட்டிலில், 20 முதல் 23 விழுக்காடு என்ற அளவில் இருந்த மாங்கூழ் அளவை, இப்போது 12 முதல் 09 விழுக்காடு என்ற அளவில் குறைத்து விட்டனர்.

இதனால், ஒரு தொழிற்சாலையிலிருந்து ஓர் ஆண்டுக்கு 4,000 மெட்ரிக்டன் என்ற அளவில் இருந்த, விற்பனை அளவு கடந்த ஆண்டிலிருந்து அப்படியே சரிபாதியாக சரிந்து 2,000 மெட்ரிக் டன் என்ற அளவுக்குக் குறைந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் விளைகுடா நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட மாங்கூழ் அளவும் இப்போது குறைவாக உள்ளது. இதனால்தான் மாங்காய்களை எங்களால் கொள்முதல் செய்ய முடியவில்லை.” என்பதாக, அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள்.
ஆட்பற்றாக்குறை இடுபொருட்களின் செலவு ஆகியவற்றின் காரணமாக, மாந்தோப்பு உரிமையாளர்கள் குத்தகைதாரர்களிடம் தோப்பை ஒப்படைக்கின்றனர். குத்தகைக்கு எடுப்பவர்களோ, மூன்றாண்டு குத்தகை காலத்தில், எவ்வளவு விரைவாக இலாபத்தை அறுவடை செய்து எடுத்து செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு செயற்கையான முறையிலும் ஆபத்தான முறையிலும் ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துகின்றனர். இது, சம்பந்தபட்ட மாந்தோப்பு உரிமையாளர்களான விவசாயிகளின் அடிமடியில் கை வைப்பதோடு நிற்பதில்லை. மண்ணின் வளத்தை நாசமாக்குவதில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.
சந்தைகளில் சட்டவிரோதமாகவும் ரசாயனங்களை பயன்படுத்தியும் செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை கண்காணித்து, அவற்றை கண்டறிந்து கைப்பற்றப்பட்ட பழங்களை யாரும் உண்ணாத அளவுக்கு உடனடியாக அவை அழிக்கப்படுகின்றன. மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகின்றன. அதுபோலவே, மா உற்பத்தி செய்யப்படும் முறைகளையும் கண்காணிப்பிற்குள் கொண்டு வர வேண்டும். வேளாண் அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கொண்ட குழுவினரை களத்தில் இறக்கிவிட வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ”நோய்நாடி நோய் முதல்நாடி” என்ற வள்ளுவன் வாக்கு போலவே, விவசாயிகளின் துயர் அறிந்து அவற்றை களைய அரசு உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அழிந்துவரும் தாவரங்களின் பட்டியலில் மா மரங்கள் இடம் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை !
– சிவசுப்பிரமணியன் – மூத்த பத்திரிகையாளர்