ஓடிடிகாரன் பிடியில் தமிழ் சினிமா ’ஃப்ரீடம்’ விழாவில் விளாசிய ஆர்.கே.செல்வமணி!
சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் அலுவலக உதவியாளராக இருந்து, தயாரிப்பு நிர்வாகியாக வளர்ந்து, இப்போது சசிகுமார் நடிப்பில் வருகிற 10—ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘ஃப்ரீடம்’ படம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார் பாண்டியன் பரசுராமன். ‘விஜய கணபதி பிக்சர்ஸ்’ என்ற பேனரில் அவர் தயாரிக்கும் இப்படத்தை சத்யசிவா டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தில் லிஜோமோல் ஜோஸ், மு.ராமசாமி, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, ஆண்டனி, மாளவிகா, மணிகண்டன் ஆகியோருடன் இந்தியில் வில்லனாக நடிக்கும் சுதேவ் நாயர் என்பவரும் தமிழில் அறிமுகமாகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், இசை : ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங் : என்.பி.ஸ்ரீகாந்த், பாடல்கள்: அருண்பாரதி, மோகன்ராஜன், ஆர்ட் டைரக்டர் : சி.உதயகுமார், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [எய்ம்}.
10—ஆம் தேதி ஃப்ரீடம் ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, கடந்த 05-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
“எங்களது பேனரில் தொடர்ந்து நல்ல படங்களை, தரமான படங்களை தமிழ் மக்களுக்குத் தருவோம்” நெஞ்சில் கைவைத்து உறுதி மொழி ஏற்பது போல பேசினார் பாண்டியன் பரசுராமன்.
பாடலாசியர்கள் இருவர், இசையமைப்பாளர் ஜிப்ரான், டிரெண்ட் மியூசிக் ஜிதேஷ், கேமராமேன், ஆர்ட் டைரக்டர், படத்தில் நடித்த ஆண்டனி, மணிகண்டன், ஆகியோர் சசிகுமார் மற்றும் தயாரிப்பாளர் பாண்டியன், டைரக்டர் சத்ய சிவா குறித்து மிகவும் பெருமையாகப் பேசி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இலங்கைத் தமிழ் பேசி நடித்த அனுபவத்தையும் தனக்கு அந்த தமிழ் பேச கற்றுக் கொடுத்த ஆசிரியை குறித்தும் சிலாகித்துப் பேசினார் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ்.
டி.சிவா,
“நேர்மையானவர்கள் திறமையானவர்களாக இருக்கமாட்டார்கள். திறமையானவர்கள் நேர்மையாளர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த இரண்டும் உள்ளவர் பாண்டியன் பரசுராமன். இந்த ஃப்ரீடத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வருகிறார். அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கட்டும்”.
ஆர்.கே.செல்வமணி,
“கொஞ்ச வருசங்களுக்கு முன்னால, ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவதை அப்படத்தின் தயாரிப்பாளர் தான் முடிவு செய்வார். அப்புறம் டைரக்டர் முடிவு செஞ்சார், அப்புறம் ஹீரோ முடிவு செஞ்சார். ஆனால் இப்ப ஓடிடிகாரன் முடிவு பண்றான். இது தமிழ் சினிமாவுக்கு ரொம்பவும் ஆபத்தானது. இந்த ஆபத்து நீங்கி எல்லா படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் மட்டும் முடிவு செய்து ஃப்ரீடமாக படங்களை ரிலீஸ் பண்ண வேண்டும்”.
டைரக்டர் சத்யசிவா,
“பாண்டியன் சார் நினைத்திருந்தால், கமர்ஷியல் படத்தை முதல் படமாக தயாரித்திருக்கலாம். ஆனால் வேலூரில் 1990 களில் நடந்த இந்தக் கதையை, என்னை நம்பி தயாரிக்க முன்வந்ததற்கு நன்றி. இப்படத்தில் நடித்த அனைவருமே கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சசிகுமார் சாருடன் இதற்கு முன்பு பண்ணிய படம் சரியாகப் போகவில்லை என்றாலும் இந்தக் கதையை நம்பி எனக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை உங்களை நம்பி எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள்”

கதாநாயகன் சசிகுமார்,
“இப்ப ரிலீசான டூரிஸ்ட் ஃபேமிலியிலும் இலங்கைத் தமிழ் பேசினேன். அது காமெடி கலந்த ஃபேமிலி டிராமா. ஆனால் இந்த ஃப்ரீடம் அதே இலங்கைத் தமிழர்களின் வலி மிகுந்த வாழ்க்கையை பேசுகிறது. சொந்த நாட்டிலேயே சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு இனத்தின் வேதனை தான் இப்படம். மேனேஜராக இருந்த போதே பாண்டியனைத் தெரியும். உங்களை வச்சு படம் பண்ணப்போறேன்னு என்கிட்ட வந்த போது, நல்லா யோசிச்சுக்கப்பான்னு சொன்னேன். ஆனால் படம் எடுப்பதில் விடாப்பிடியாக இருந்தார். அவரின் அன்புக்கும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி”.
— மதுரை மாறன்