நெல்லிக்கனி மாவட்டத்தில் நல்ல ரேட்டுக்கு போன 64 கனிகள் !
அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த மாவட்டத்தில் ரூலிங் பார்ட்டிக்கு, டிக்ளேர் செய்யப்படாத ஏஜெண்டாக ஓசையானவரும், தருமபுரி மாவட்டத்தின் தேனிசையானவரும் சேர்ந்து சர்க்காரு சர்க்கரை போடுற போஸ்டிங்குல புகுந்து விளையாடிட்டாங்களாம். கைக்கு கிடைச்ச 64 கனிகளையும் சுளையா, வெளி மார்க்கெட்டில் நல்ல ரேட்டுக்கு போணி செய்து விட்டார்களாம்.
கட்சியில் ஓடாய் உழைத்து, உழைத்து தேய்ந்து போன சதுர, முக்கோண நிர்வாகிகளுக்கு எல்லாம் கல்தா கொடுத்துவிட்டு கல்லா கட்டிவிட்டார்கள் என்ற வேதனையில் இருக்கிறார்களாம் உடன்பிறப்புக்கள்.
நல்ல விலைக்கு விற்ற கனிகளை வாங்கி சுவைத்தவர்களா, நாளை கழகத்திற்கு வாக்களிக்கப் போகிறார்கள்? கொடி பிடிக்க போகிறார்கள்? பொதுக்கூட்டத்திற்கு உருப்படிகளை கூட்டி வர போகிறார்கள்? போராட்டத்தில் சிறை நிரப்ப போகிறார்கள்? காக்கியோடு மல்லுக்கட்டப் போகிறார்கள்? என கட்ட பொம்மன் வசனம் பேசி வருகிறார்களாம்.
யார், என்னதான் கரடி கத்து கத்தினாலும், இங்கே நான் வச்சதுதான் சட்டம்னு தேனிசையானவரும் இசையானவரும் சேர்ந்து சிம்பொனி கச்சேரியை தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம்.
சுளையா 64 லயும் சந்தையில வித்துட்டதால, அதுல ஒன்னுரெண்டு கனிய வாச்சும் கட்சிக் காரனுக்கு கொடுத்திருக்கலாம்லனு, அதிருப்தியில ஒரு நாலு பேரு கட்சி கூட்டத்தையே புறக்கணிப்பு செஞ்சுட்டாங்களாம். இப்படியே போனா, மாவட்டத்துல அஞ்சும் அப்படியே கைவிட்டு போயிடும்னு பேசிக்கிறாங்களாம். வீடு வீடா ஓடி ஓடா தேஞ்சு கட்சிய வளர்த்து பார்த்தாதானே தொண்டனோட மதிப்பு தெரியும். விதை செடியாக்கி செடிய பூந்தோட்டமாக்கின தொண்டனை மறந்துட்டு, மேலேயே பறந்து தாஜா பண்ணி பூவுல இருந்து தேன மட்டும் எடுத்துட்டு போன இசையானவருக்கும் அவருக்கு பின்னணி இசை கோர்க்கும் தேனிசையானவருக்கும் இதெல்லாம் எங்கே புரியப் போகுதுனு புலம்புறாங்களாம்.
— ஸ்பை டீம்