90ஸ் கிட்ஸ் அப்பா வேற, 2கே கிட்ஸ் அப்பா வேற – இயக்குநர் ராம்
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் “பறந்து போ”. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து இருக்கிறார். குழந்தை மற்றும் பெற்றோருக்கு இடையேயான உறவு குறித்து கூறும் இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து படக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இயக்குனர் ராம், மிர்ச்சி சிவா, குழந்தை செல்வன் மிதுன் ஆகியோர் மதுரை வெற்றி சினிமாஸ் திரையரங்கிற்கு வருகை தந்து பறந்து போ திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பின் தியேட்டரில் பார்த்த ரசிகர்களிடம் தங்களுக்கு பிடித்த காட்சி எது என்பது குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து இயக்குனர் ராம் மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இதில் இயக்குனர் ராம் பேசுகையில், குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என குறிப்பிடுவதே வன்முறையான விஷயம் என கூறினார், அந்தந்த வயது குழந்தைகள் அந்தந்த வயதுக்கு ஏற்ப நடக்கிறார்கள் ஆனால் அதை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள மாட்டுகிறார்கள் என குறிப்பிட்டார்.
வருகிற ஜூலை 19ம் தேதி சென்னையில் நா.முத்துக்குமார் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார். 90ஸ் கிட்ஸ் அப்பா தைரியமாக பிள்ளைகளை வெளியே விடுவார்கள், சுதந்திரம் அதிகமாக கொடுத்தார்கள் ஆனால் இப்போ உள்ள அப்பாக்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள், சுதந்திரம் குறைவாக கொடுக்கிறார்கள் என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா இதில் பேசுகையில்,
கலகலப்பு 3 சுந்தர் சி உடன் அடுத்தப்படம் நடிக்க உள்ளேன். எத்தனை படம் நடித்தாலும் எனக்கு பறந்து போ படம் ஸ்பெஷல், இயக்குனர் ராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது 18 வருட கனவு. நான் இதுவரை சம்பளத்திற்கு மெனக்கிட்டது இல்லை, படம் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். இதில் நடிகர் சிம்பு உங்கள் நண்பர் அவருக்கு எப்போது திருமணம் என கேட்டதற்கு, அதே இடத்தில் நடிகர் சிம்புவிற்கு இதே இடத்தில் கோரிக்கை வைக்கிறேன், நடிகர் சிம்பு சார் இந்த கேள்விகளை நாம் தவிர்க்க வேண்டும், விரைவில் திருமண பத்திரிக்கையை எங்களுக்கு அனுப்புங்கள் என கோரிக்கை வைத்தார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்