ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி கொள்ளை ! வங்கி மோசடி ஆசாமிகள் கைது!
தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் whatsappல் ஆள்மாறாட்டம் செய்து 5.10 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS உத்தரவின்படி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் PPS வழிகாட்டுதலின்படி காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த வழக்கில் ஏற்கனவே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களையும் கேரளாவை சேர்ந்த ஐந்து நபர்களையும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர்.
மேலும் தற்பொழுது இந்த வழக்கில் இரண்டு கோடியே 48 லட்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரளாவில் உள்ள Axis வங்கி கணக்கிற்கு ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் பணம் சென்றது விசாரணையில் தெரிய வந்ததால் மேற்படி அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர் சஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வங்கி கணக்கை உபயோகப்படுத்திய நபரை கைது செய்ய புதுச்சேரி இணையவழி காவல்துறையின் தனிப்படை போலீசார் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி, காவலர் வினோத், வைத்தியநாதன் நேற்று காலை ஓம்கார் நாத் என்பவரை கர்நாடகாவில் கைது செய்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தெலுங்கானா சென்று அங்கிருந்த ராகவேந்திரா என்பவரை கைது செய்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திர பிரதேசம் சென்று சசிதர் நாயக் மற்றும் பவாஜன் என்ற இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்கள் வங்கி கணக்கில் பணத்தை மாற்ற உபயோகப்படுத்திய செல்போன்கள், இன்டர்நெட் கனெக்சன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒரு காரையும் பறிமுதல் செய்து மேற்படி கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் தகவலை வைத்து பார்க்கும்போது இன்னும் சிலருக்கும் இந்த 5.10 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வரவே மேலும், இதில் விசாரணை நடத்தி தொடர்புடைய நபர்களை கைது செய்ய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சில வெளிநாட்டு நபர்களின் தொடர்பு இருப்பதால் அது சம்பந்தமாக விசாரித்து அவர்களின் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக புதுச்சேரி காவல்துறை தலைவர் Dr. அஜித்குமார் சிங்ளா உத்தரவுப்படி பல்வேறு வழக்குகளில் வெளிநாட்டு நபர்களின் தொடர்பு இருப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் மேற்படி நபர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி காவல்துறை IGP Dr.அஜித் குமார் சிங்ளா IPS தெரிவித்துள்ளார்.
இது பற்றி காவல்துறை IGP மேலும் தெரிவிப்பது என்னவென்றால் இணைய வழி மோசடிக்காரர்களுக்கு வங்கி கணக்குகளை மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்து உதவியதால் மட்டும் இந்த வருடத்தில் பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே பொதுமக்கள் கமிஷனுக்காக வங்கி கணக்கு/தொலைபேசி எண் ஆகியவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம் என எச்சரிக்கை செய்தார்.
இணைய வழி மோசடிக்காரர்கள் தாங்கள் கொள்ளையடிக்கின்ற பணங்களை இந்திய வங்கி கணக்குகளை வாங்கி அதில் மோசடி செய்த பணத்தை அனுப்பி எடுக்கின்றனர். ஒரு சதவீத, இரண்டு சதவீத கமிஷன்களுக்கு ஆசைப்பட்டு வங்கி கணக்குகளை கொடுத்து உதவ வேண்டாம் உங்கள் வங்கி கணக்குக்கு மோசடி செய்து வருகின்ற பணத்திற்கு நீங்களே பொறுப்பு. ஆகவே வங்கி கணக்கை யாருக்கும் கொடுக்க வேண்டாம். கொடுத்து உதவுகின்ற நபர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் உடனடியாக சைபர் குற்றத்திற்கான கட்டணமில்லா எண் 1930, இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/9489205246 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.