கல்விக்காக 20 ஆண்டுகளாக நதியை நீந்தி கடக்கும் ! ‘டியூப் மாஸ்டர்’ அப்துல் மாலிக் யார் ? (5)
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்
கற்றுக்கொடுத்தலுக்காக எதிர்நீச்சலடிக்கும்
‘டியூப் மாஸ்டர்’ அப்துல் மாலிக்
அப்துல் மாலிக். சிறு வயதிலேயே இவர் தந்தை மறைந்துவிட அவரது மாமா அவருக்கு உதவினார். விரைவில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு எனக்கூறி பள்ளி வகுப்புக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அதன்படி ஆசிரியர் பயிற்சிக்குப்பிறகு 1993 ஆம் ஆண்டு, கேரளாவின் மலப்புரத்தில் உள்ள படிஞ்சட்டுமுரியில் உள்ள முஸ்லிம் பள்ளியில் மாலிக் மாதம் ரூ.1,350 சம்பளத்தில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆனால் அங்கு அவர் ஒரு புதிய சிக்கலை எதிர்கொண்டார்.

கடலுண்டி ஆற்றால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்ட அந்தப்பள்ளியை அடைய கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேருந்தில் தினமும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. தனது இல்லத்திலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, 8.00 மணிக்கு மேல் வரும் பேருந்தில் ஏறி மற்றொரு நிறுத்தத்தில் இறங்கி இன்னொரு பேருந்து மாற வேண்டும். இரண்டு பேருந்துகளில் எந்தப் பேருந்து பயணம் தடைபட்டாலும் அவரது அன்றைய பயணம் வினாக்குறியாகும்.
இரண்டு பேருந்துகளிலும், எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அந்த வழித்தடத்தில் மிகக் குறைவான பேருந்துகளே இருந்தன. ஒன்றைத் தவறவிட்டால், அடுத்த பேருந்துக்காக நாற்பத்தைந்து நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். இரண்டு பேருந்தும் சரியாகக் கிடைத்து அவர் பள்ளியை அடைந்தால் பள்ளியை அடையும்போது பத்து மணியைத் தாண்டிவிடும். என்று அவர் கூறுகிறார்.
மாலை நான்கு மணிக்கு பள்ளியை முடித்துவிட்டு கிளம்பினாலே வீடு வந்துசேர இரவாகிவிடும். நாமும் இல்லையெனில் அந்தக் குழந்தைகள் நாதியற்றவர்களாகி விடுவார்களே என்ற எண்ணத்தில் அந்த சோர்வான பயணம் வழக்கமானது.

ஒரு மாலை நேரத்தில், அவர் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒருவரைச் சந்தித்தார் அவர் பேசிக் கொண்டிருந்தபோது “உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஆற்றின் மறுகரையில் எனக்கு ஒரு பண்ணை இருக்கிறது. நான் என் பண்ணையில் இருந்து பொருட்களை எடுக்க வரும்போதெல்லாம், நான் நீந்தித்தான் இந்த ஆற்றைக் கடப்பேன். ஆற்றின் கரைகளுக்கு இடையே உள்ள தூரம் ஒரு கிலோமீட்டர் மட்டுமே” என்றார்.
இரண்டுநாள் கழித்து அவர் ஊரில் உள்ள பண்ணையில் இருந்து ஆற்றின் வழியே செல்வதை மாலிக்கால் பார்க்க முடிந்தது. நீந்தும்போது ஒரு பெரிய வாழைப்பழங்களை தம் பண்ணையில் இருந்து எடுத்து வந்திருந்தவர் தனது உடலைச் சுற்றி ஒரு குழாயைக் கட்டி இருந்தார். அது அவரை மிதக்க வைத்தது, அதனால் அவர் ஒரு கையை மட்டுமே நீந்த வேண்டியிருந்தது; மற்றொரு கையால், வாழைப்பழங்களை தண்ணீருக்கு மேலே வைத்திருந்தார்.
அன்றைய உரையாடலும் இன்றைய சந்திப்பும் மாலிக்கின் இதயத்துள் ஒரு கீறலை ஏற்படுத்தியது. ஒரு மாலை நேரத்தில் அவருடன் ஆற்றைக் கடந்து நீந்தி வீடு திரும்ப முடிவு செய்தார். அவரைப்போலவே, அவரும் ஒரு குழாயைப் பயன்படுத்தினார். அது சரியான தீர்வாக இருந்தது. அப்போதிருந்து, மாலிக் பள்ளிக்கு நீந்திச் செல்லத் தொடங்கினார். அது வழக்கமானது.

ஆற்றங்கரையில், அவர் ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துச் செல்லும் துண்டை மாற்றிக் கொண்டு, குழாயை மார்பில் சுற்றிக் கொண்டு தண்ணீரில் இறங்குகிறார். அவரது மதிய உணவு, செருப்பு, குடை அனைத்தும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து கையில் பிடிபட்டுள்ளன, அதை அவர் தண்ணீருக்கு மேலே உயர்த்திக்கொண்டு நீந்துகிறார்.
இருபது நிமிடங்களில் மறுகரை. ஆடை மாற்றிக்கொள்ளவும், தனது உடலில் சுற்றி இருக்கும் குழாயைப் பாதுகாக்கவும் இரண்டு கரைகளிலும் ஒரு பாறை மறைவு. அலைக்கு எதிராகச் செல்வதால் நீந்துவதில் போராட்டம். மழைக் காலத்தில், ஆற்றில் பாம்புகள் வரும். அந்த சிரமங்கள் எல்லாம் குழந்தைகளுக்கான கற்பித்தலில் காணாமல் போய்விட்டன.

அப்துல்மாலிக் ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர். கடந்த ஆண்டுகளில் நதி எவ்வாறு மாசுபட்டுள்ளது என்பதைப் பார்த்து அவர் வருத்தப்பட்டு “மாணவச் சமுதாயம்தான் நாம் நமது ஆறுகளை மாசுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இயற்கை கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு” என்று சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளார். அவரைத் தனித்துவமான ஆசிரியராகப் பார்க்கும் அவரது மாணவர்களை அடிக்கடி நீச்சலடிக்க அழைத்துச் செல்கிறார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக், குப்பை மற்றும் பிற அசுத்தங்களை அகற்றுகிறார்கள்.

தொடக்கத்தில் அவரது மாணவர்கள் உட்பட பலரும் கரையில் நின்று அவர் நீந்துவதைப் பார்ப்பார்கள். அவரைவிட அவர்கள் அதிக உற்சாகமாக இருந்தார்கள். சில நேரங்களில் மக்கள் அவரை வழியில் நிறுத்தி “மாஸ்டர், குழாயை மாற்ற வேண்டிய நேரமா? தயவுசெய்து என் கடையில் வாங்குங்க!” என்கிறார்கள்.
கற்பித்தலுக்காக 20 ஆண்டுகளாக நதியை நீந்தி கடக்கும் அர்ப்பணிப்பின் சின்னம் அப்துல் மாலிக். கல்வியின் முன், எந்தத் தடையும் தடை அல்ல! என்பதே அப்துல் மாலிகின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம். அப்துல் மாலிக்கின் அசாதாரண உழைப்புக்காக, மாணவர்கள் அவரை ‘டியூப் மாஸ்டர்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். கல்வியின் மீதான விடாமுயற்சி மற்றும் தன்னலமற்ற சேவையின் சின்னமாக கேரளாவில் ஒளிர்கிறார் ‘டியூப் மாஸ்டர்’ அப்துல் மாலிக்.
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்