‘தலைவன் – தலைவி’யால் தலைவலியா? பாண்டிராஜுடன் ஃபைட்டா? விஜய் சேதுபதி உடைத்த உண்மை!
கமல்ஹாசன் – பாலுமகேந்திரா கூட்டணியில் உருவான அழியாக் காவியம் ‘மூன்றாம் பிறை’ மூலம் 1982-ல் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் டி.ஜி.தியாகராஜன். முதல் தயாரிப்பே தேசிய விருதைப் பெற்றதில் தியாகராஜனுக்கு அளவில்லா ஆனந்தம். அதைத் தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்கள், சில தோல்விப்படங்கள் என மாறிமாறி வந்தாலும் சினிமா மீதான நேசம் குறையாமல் படங்களைத் தயாரித்து வருகிறார் தியாகராஜன். இவரது மகன்கள் செந்தில் தியாகராஜனும் அர்ஜுன் தியாகராஜனும் அப்பாவுக்குத் துணையாக தயாரிப்பில் களம் இறங்கினார்கள்.
43-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் டைரக்ஷனில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி—நித்யாமெனன் காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘தலைவன் –தலைவி’ படம் வருகிற 25—ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது. இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை, கடந்த 12—ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் பிரம்மாண்டமாகவும் வெகு விமரிசையாகவும் நடத்தினார்கள் தியாகராஜன் & சன்ஸ்.
இதைத் தொடர்ந்து மறுநாள் [ ஜூலை.13] சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் டிரெய்லர் & சாங்ஸ் ரிலீசும் பிரஸ்மீட்டும் நடந்தது. இதில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், ஹீரோ விஜய்சேதுபதி, ஹீரோயின் நித்யா மெனன், டைரக்டர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் பேசினார் செந்தில் தியாகராஜன்,
“மூன்றாவது தலைமுறையாக சினிமாக்களைத் தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் [ இவரது தாத்தா, அதாவது டி.ஜி.தியாகராஜனின் அப்பா டி.கோவிந்தராஜன் தான் முதல் தலைமுறை ]. இப்ப தயாரித்திருக்கும் ‘தலைவன் –தலைவி’ அற்புதமான குடும்பப் படம். இயக்குனர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவரின் படங்கள் எல்லாமே ஹிட் படங்கள். அதே போல் ‘மகாராஜா’ மூலம் சீனா வரை புகழ் பெற்றுள்ள விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. நித்யாமெனனைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய திறமையான நடிப்பால் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறார். எங்களின் சினிமாக்களுக்கு தொடந்து நல்லாதரவு வழங்கி வரும் பத்திரிகை சகோதரர்கள், இந்த ‘தலைவன் –தலைவி’க்கும் நல்லாதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை பெரிதும் உள்ளது” என்றார்.
“இப்படம் வெற்றி பெறும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது” என்றார் நித்யாமெனன்.
டைரக்டர் பாண்டிராஜ்,
“மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீடியா நண்பர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது மகனின் பிறந்தநளை முன்னிட்டு எங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்ற போது சந்தித்த கணவன் –மனைவி கதை தான். அதை அப்படியே எடுக்க முடியாது என்பதால் சில மாற்றங்களுடன் ஆகாசவீரனாக விஜய் சேதுபதியையும் பேரரசியாக நித்யா மெனனையும் மாற்றியுள்ளேன். 75 நாட்களில் படத்தை முடித்துவிடுவதாக தியாகராஜன் சாரிடம் சொன்னேன். ஆனால் 72 நாட்களில் முடித்துவிட்டேன்.
ஆகாசவீரன் கேரக்டரை விஜய்சேதுபதியை விட்டால் வேறு யாரும் செய்ய முடியாது. அதே போல் பேரரசி கேரக்டருக்கு நித்யாவை விட்டால் வேறு யாருமில்லை. ஷூட்டிங்கின் போது எனக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து உடனே மறைந்தன” என்றார்.
ஹீரோ விஜய் சேதுபதி,
“பாரம்பரியமிக்க சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்காக தியாகராஜன் சாருக்கு நான் தான் நன்றி சொல்லணும். இயக்குனர் பாண்டிராஜுடன் பணியாற்றியது மிக அற்புதமான, சுகமான பயணத்தில் கிடைக்கக் கூடிய அனுபவம் போன்றது. நடிப்புப் பேரரசி நித்யாமெனன் உட்பட படத்தில் நடித்த அனைவருமே மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். மீடியா நண்பர்கள் தலைவன் –தலைவிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
அதன் பின் மீடியாக்கள் சேதுவிடம் , “உங்களுக்கும் டைரக்டர் பாண்டிராஜுக்கும் இடையில் என்ன தான் நடந்துச்சு, எதுக்கு சண்டை வந்துச்சு?” எனக் கேட்டதும்..
“சண்டை வந்துச்சு, உடனே மறைந்து போச்சுன்னு அவரே சொல்லிட்டாரே சார், அதனால அதைப் பத்தி திருப்பித் திருப்பிக் கேட்காதீக சார், ப்ளீஸ் விட்ருங்க சார். படம் சூப்பரா வந்திருக்கு, உங்களுக்கும் பிடிக்கும் மக்களுக்கும் பிடிக்கும் சார்” என பிரஸ்மீட்டை ஜாலியாக முடித்தார் விஜய் சேதுபதி.
— மதுரை மாறன்