மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சீமான்-கள் விவகாரம் ! கிருஷ்ணசாமி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில் “2,000 க்கும் மேற்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களின் குடும்பங்களை அப்பகுதியிலேயே குடியமர்த்த வேண்டும் என வழக்கு தொடுத்தோம், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு சொந்த மக்களுக்கு எதிராகவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது,
இவ்வழக்கு எதிர்வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மாஞ்சோலை பகுதியில் குடிநீர் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி உள்ளது. மாஞ்சாலையில் வசிக்கும் டெய்லர் தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்து தர வேண்டும்.
தமிழக அரசே டாஸ்மாக் கடைகளை நடத்துவதால் கிராமங்களில் இளைஞர்கள் பெரியவர்கள் என 60 % பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுவை ஒருநாள் குடித்தால் கூட பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சூழலில் சீமான் கள் உணவு, சிறந்த பானம் என மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
சட்டத்திற்கு புறம்பாக சீமான் கள் இறக்கி உள்ளார், சீமானின் செயல் இன்னும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும், கள் உண்ணுவதால் வரக்கூடிய பாதிப்புகள் குறித்து திருக்குறள், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக சீமான் கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார்.
கள், மது, சாராயத்திற்கு எதிராக புதிய தமிழகம் கட்சி சார்பில் 100 கருத்தரங்கங்கள் நடத்தப்பட உள்ளன, பூரண மதுவிலக்கு கொள்கையில் அரசியல் நிலைப்பாடு மாறுபட்டாலும் மக்கள் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள். புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என முடிவு எடுத்துள்ளோம் என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்