காயம்பட்டால் செப்டிக் (DT ) ஊசி ஏன் போடணும் தெரியுமா ? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கால்களில் முள் தைத்து விட்டாலோ ஆணி பாய்ந்து விட்டாலோ விபத்து ஏற்பட்டு  லேசான காயம் முதல் பெரிய ரத்தக் காயங்கள் ஏற்படும் போது விவரம் தெரிந்த பெரியவர்களும் உற்றார் உறவினரும் “அந்த செப்டிக் ஊசிய போட்டுட்டு வந்துரு” என்றும் “டிடி ஊசி போட்டாச்சா?” என்றும் வாஞ்சையுடன் விசாரிப்பதைப் பார்க்க முடியும்.

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் டிடி ஊசி போட வேண்டும் சரி..

Sri Kumaran Mini HAll Trichy

எதற்காக அந்த  செப்டிக் / டிடி ஊசி  போடப்படுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஊசி குச்சி காயங்கள், தூக்கி எறியப்பட்ட ஊசிகள் மற்றும் எச்.ஐ.வி பரவும் ஆபத்து | உதவி வரைபடம்வாங்க பார்ப்போம்…

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

800 கோடி ஹோமோசேப்பியன்ஸ் ( நவீன மனிதர்கள்) இப்புவியில் மூன்று லட்சம் வருடங்களாக  வாழ்கிறோம். ஆனால் உலகம் தோன்றிய காலந்தொட்டு முன் தோன்றிய முதல் மூத்தகுடிகள் யாரென்று பார்த்தால் நுண்ணியிரிகளான பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியன என்பது ஹோமோசேப்பியன்களாகிய  நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

இப்போதும் கூட நாம் “ப்ளேனெட்  ஆஃப் மைக்ரோப்ஸ்” ( நுண்ணியிரிகளின் உலகம்) த்தில் கூட அனுசரித்து ஒண்டிக்குடித்தனம் நடத்தி வருகிறோம் என்று கூறினாலும் தகும்.

நமது உடலில் ட்ரில்லியன் செல்கள் இருக்கின்றன என்று நாம் மார்தட்டினாலும் அதையொத்த அளவில் பாக்டீரியாக்கள் நமது உடலில் வாழ்ந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

அத்தகைய பாக்டீரியாக்களில்

நல்லவர்களும் உண்டு.

தீயவர்களும் உண்டு.

மனிதர்களுக்கு பேலியோலித்திக் காலம் தொட்டு  தீது விளைவித்து வரும் பாக்டீரியாக்களை வகுத்தால் அதில் முக்கியமானவையாக

“க்ளாஸ்ட்ரீடியம்” எனும் இந்தக் குடும்பம் வரும்.

க்ளாஸ்ட்ரீடியம் பெர்ஃப்ரிஞ்சன்ஸ்

க்ளாஸ்ட்ரீடியம் டெஃபிசில்

க்ளாஸ்ட்ரீடியம் பாட்டுலினம்

என இந்த பரம்பரையின் வகையறாக்கள் நமக்கு தீது மட்டுமே செய்து பழக்கப்பட்டவை.

அவற்றுள் முக்கியமான வகையறா தான்”க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி” ( Clostridium tetani) இந்த வகை பாக்டீரியாக்கள் நமது உடலுக்குள் புகுந்து நோய் உண்டாக்கும் போது கடுமையான தசை இறுக்கத்தை ஏற்படுத்தி தசைகளை முறுக்குவதால் “டெட்டானஸ்- தசை முறுக்கும் நோய்” என்று பெயரிடப்பட்டன.

தமிழில் இந்த நோய்க்கு “இரண ஜன்னி” என்று பெயரிடப்பட்டுள்ளது

இரணம் = புண் / காயம்

ஆம்.. ஒரு காயமோ புண்ணோ ஏற்பட்ட பிறகு வரும் ஜன்னி = ஜுரம்  = காய்ச்சல் என்பதால் இந்த காரணப்பெயர் வந்தது.

க்ளாஸ்ட்ரீடியம் டெட்டானி பாக்டீரியா உலகமெங்கும் கல் – மண் – புல் – முள் என்று சகலத்திலும் வியாபித்து இருக்கிறது.

வெளியுலகில் இருக்கும் போது அதன் வித்திகளாக ( SPORES) அமைதியாக உயிரற்றவை போன்று இருக்கும்.

மனிதர்கள்/விலங்குகளில் உடலுக்குள் சென்று தோதான வாகான சூழல் ஏற்பட்டதும் மீண்டும் உயிர்பெற்று பல்கிப்பெருகி டெட்டானஸ் நோயை உண்டாக்கும்.

டெட்டானஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு தசைகள் அனைத்தும் இறுக்கமடைகின்றன.

குறிப்பாக,  தாடை இறுகக் கட்டிக் கொள்ளும். இதை “பூட்டப்பட்ட தாடை” என்று கூறுகிறோம். இதனால் எதையும் உண்ணவோ பருகவோ முடியாது. நெஞ்சுப் பகுதி தசைகள் இறுக்கம் கண்டால் மூச்சு விட முடியாது.

இன்னும் நோய் தீவிரம் அடையும் போது கழுத்து – முதுகு பகுதி தசைகள் அனைத்தும் ஒரு சேர தீவிரமாக இறுகிக்கொள்ள வில் போல நோயாளி வளைந்து படுக்கையில் கிடப்பார்.

இத்தகைய கொடுமையான பிணியைச் சந்தித்து முறையான தீவிர உயர் சிகிச்சை வழங்காமல் விட்டால் மரணம் தழுவுவது திண்ணம்.

இத்தகைய கொடூரமான நோய் தற்போது அரிதினும் அரிதாக மாறிவிட்டதற்கான முக்கிய காரணம் . இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசிகள் நமது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இலவச தடுப்பூசிகளாக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதே என்றால் அதில் எந்த மிகையுமில்லை.

குழந்தை பிறந்த

ஆறாவது வாரம் (PENTAVALENT 1)

பத்தாவது வாரம் ( PENTAVALENT 2)

பதினான்காம் வாரம் ( PENTAVALENT 3)  என போடப்படும்

ஐந்து நோய்களைத் தடுக்கும் பெண்டாவேலண்ட் ஊசியில் டெட்டானஸ் தடுப்பு மருந்தும் உள்ளது.

Flats in Trichy for Sale

அதற்குப் பிறகு முதல் பூஸ்டர் 16 முதல் 24 மாதங்களிலும் ( DPT-1)

இரண்டாவது பூஸ்டர் ஐந்து முதல் ஆறு வயதிலும் (DT-2)

அதற்குப் பிறகு

10 வயதிலும் ( TdaP1)

16 வயதிலும் (Tdap2)

இந்த ரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசியை அரசு இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களின் முதல் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே ஒரு மாத இடைவெளி விட்டு இருமுறை டெட்டானஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரணஜன்னி பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரணஜன்னி ஆகியவற்றை இந்தியாவில் இருந்து நீக்கியதில்- இந்தத் தடுப்பூசிக்கு முக்கியப் பங்கு உண்டு.

2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 1240 டெட்டானஸ் நோய் தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பதிவு செய்யப்படாமல் சில ஆயிரம் இருக்கக் கூடும்.

கடந்த மார்ச் மாதம் கூட அஞ்செட்டி எனும் ஊரில் ஐந்து வயது சிறுவன் டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்தது கவனத்தை ஈர்த்தது.

இந்த சூழ்நிலையில் டெட்டானஸ் குறித்து தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் 2001 முதல் 2010 காலத்தில் மைசூரில் உள்ள மருத்துவமனையில் 512 டெட்டானஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அதில் 379 பேர் ஆண்கள் 133 பேர் பெண்கள் நோய் பாதித்து இறந்தவர்கள் 42.2% இறந்தவர்களில் அதிகமானோர் 40 வயதுக்கு மேல் இருந்தவர்கள்.

மற்றொரு ஆய்வில் 2017 முதல் 2019 காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 58 டெட்டானஸ் தொற்றாளர்களையும் வைத்து பெறப்பட்ட முடிவுகள் டெட்டானஸ் தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பான்மையினர் விவசாயிகள்.

வெறும் காலில் நடந்து செல்பவர்கள். அதிகமான காயங்கள் – கால்களிலும் பின் கைகளிலும்  ஏற்பட்டன.

குண்டூசியை வைத்து பல் குத்தியும் சிலருக்கு டெட்டானஸ் ஏற்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் டெட்டானஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 18% மரணம் ஏற்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்டவுடன் உடனடியாக காயம்பட்ட இடத்தை போவிடோன் ஐயோடின் திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து கல்/ மண் போன்றவற்றை  நீக்கி விட்டு உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெற வேண்டும்.

சாதாரண காயம் என்றோ கல் / மண் போன்றவை பட்டு  அசுத்தம் அடையாத காயம் என்றோ முள் / ஆணி குத்தினாலும் ரத்தம் வராத காயம் என்றோ உதாசீனம் செய்யக்கூடாது.

மேற்கூறிய அனைத்துக்கும் டெட்டானஸ் ஷாட் வழங்கப்பட வேண்டும்.

டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும். செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை. தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெறாமல் இருப்பது தவறு.

தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த பின் ஆறாவது வாரம், பத்தாவது வாரம், பதினான்காம் வாரம் அதற்குப் பிறகு 16 முதல் 24 மாதங்கள் அதற்குப் பின் ஐந்து முதல் ஆறு வயதுக்குள் அதற்குப் பின் பத்து வயதிலும் பதினாறு வயதிலும் டெட்டானஸ் தடுப்பூசியை வழங்குவதை உறுதி செய்யவும்.

காயம் சிறிதோ பெரிதோ உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி பெறுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

ஏற்கனவே டிடி ஊசியை ஐந்து வருடங்களுக்குள் போட்டிருந்தால் தேவையில்லை. எப்போது போட்டோம் என்று சந்தேகம் இருப்பின் காயத்துக்கு பின்பு டிடி  தடுப்பூசி பெறுவது நல்லது. அதனால் எந்த பாதகமும் இல்லை.

டெட்டானஸ் ஏற்பட்டு மரணமடைந்த சிலருக்கு காயமுற்ற பின் டிடி ஊசி போடப்பட்டும் டெட்டானஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம்,

ஏற்கனவே முறையான பூஸ்டர் தடுப்பூசிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெறாமல் விட்டு, காயம் ஏற்பட்ட பின் தடுப்பூசி போட்டாலும் அதற்குரிய எதிர்ப்பு சக்தி போதுமான அளவு வெளிப்படாமல் போவதால் டெட்டானஸ் கிருமி வென்று விடுகிறது.

சமீபத்தில் டெட்டானஸ் ஏற்பட்டு இறந்த அஞ்செட்டி கிராம சிறுவனுக்கும் அவனுக்கு காயம் ஏற்பட்ட பின் உடனடியாக டிடி ஊசி போடப்பட்டது. ஆயினும் அவனுக்கு டெட்டானஸ் நோய் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து நமது பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்த முதல் வருட தடுப்பூசிகளை சிறப்பாக சரியாக வழங்கும் நாம்.

அவர்களின் ஐந்தாவது வயது (DT) , பத்தாவது வயது, பதினாறாம் வயது அதற்குப் பிறகு பத்து வருடம் ஒருமுறை டெட்டானஸ்  தடுப்பூசிகளையும் சரியாக வழங்கிடுவோம் என்று உறுதி ஏற்போம் டெட்டானஸை முற்றிலுமாக ஒழிப்போம்.

 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.