ஒரு பி.ஆர்.ஓ.வால் உருவான ‘அக்யூஸ்ட்’ – கதை நிஜமான கதை!
‘ஜேசன் ஸ்டுடியோஸ்’, சச்சின் சினிமாஸ், ஸ்ரீதாயகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. இதில் ஹீரோவாக உதயா, ஹீரோயினாக ஜான்விகா மற்றும் அஜ்மல், யோகிபாபு, பிரபாகர், சுபத்ரா, டானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு ஸ்ரீனிவாஸ் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு : ஐ.மருதநாயகம், இசை; நரேன் பாலகுமார், எடிட்டிங் ; ஷ்யாம், பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.
ஆகஸ்ட்.01-ஆம் தேதி ‘அக்யூஸ்ட்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 18-ஆம் தேதி மாலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

“படத்தை விரைவாக முடிக்கவும் ரிலீஸ் வரை ஒத்துழைத்தற்காகவும் ஹீரோ உதயாவுக்கு மிகவும் நன்றி. டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸ் படத்தின் கதையைச் சொன்ன மறுநாளே வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். எண்டெர்டெய்மெண்டுக்கு க்யாரண்டியான நல்ல கண்டெண்டுடன் வந்துள்ளோம். உதயாவின் கடின உழைப்பை இதில் பார்க்கலாம்” என்றார் தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னீர்செல்வம்.
மற்றொரு தயாரிப்பாளரான சேது, நடிகர்கள் அஜ்மல், டானி, பிரபாகர், கன்னடத்தைச் சேர்ந்த ஹீரோயின் ஜான்விகா, மியூசிக் டைரக்டர் நரேன் பாலகுமார், எடிட்டர் ஷ்யாம் ஆகியோர் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துப் பேசினார்கள்.
இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ்,
“கன்னடத்தில் ஆறேழு படங்களை டைரக்ட் பண்ணியிருந்தாலும் என்னுடைய சினிமா வாழ்க்கை தமிழிலிருந்து தான் தொடங்கியது. சுந்தர் சி., தனுஷ், அர்ஜுன் ஆகியோரின் படங்கள் உட்பட நானூறு படங்களுக்கும் மேல் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளேன். கன்னடத்தில் ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து படங்களை டைரக்ட் பண்ணினேன்.
இங்கு விஷால் உட்பட சில ஹீரோக்களைச் சந்தித்து கதை சொன்னேன். எதுவுமே செட்டாகததால் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்கிவிட்டேன். பிறகு சென்னை வந்த போது பி.ஆர்.ஓ.நிகில் முருகன் சார் தான், உதயா கதை கேட்கிறார், எனச் சொல்லி அவரிடம் அனுப்பி வைத்தார். உதயா சார் கதையைக் கேட்டதும் தயாரிப்பாளர்களிடம் அழைத்துப் போனார். இப்படித்தான் இந்த அக்யூஸ்ட்’ உருவானான். இந்தப் படம் உங்கள் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். உங்களின் எதிபார்ப்புக்கு மேலாகவே இருக்கும். இதற்கு நான் க்யாரண்டி” என்றார்.
ஹீரோ உதயா,
“நான் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது வரை எனக்கு ஆதரவளித்து வரும் மீடியா நண்பர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். மூன்றரை வருடங்களுக்கு முன்பு கடும் மன உளைச்சலில் இருந்தேன். சினிமாவைவிட்டே போய்விடலாமா என்று கூட யோசித்தேன். அதை உடனே தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வந்துள்ளேன். டைரக்டர் பிரபு ஸ்ரீனிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரும் எதிர்கால உள்ளது. இந்த ‘அக்யூஸ்ட்’டுக்கும் உங்கள் பேராதரவைத் தரும்படி மீடியாக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என உருக்கமாக பேசினார்.
— மதுரை மாறன்