அங்குசம் பார்வையில் ‘போகி’
தயாரிப்பு : ‘வி.ஐ.குளோபல் நெட் ஒர்க்’. டைரக்ஷன் : எஸ்.விஜயசேகரன். ஆர்ட்டிஸ்ட் : நபி நந்தி, ஷரத், சுவாசிகா, வேல ராமமூர்த்தி, பூனம் கவுர், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ‘பசங்க’ சிவக்குமார், சிங்கமுத்து, கவிஞர் சினேகன், முருஸ்டார், ஒளிப்பதிவு : ராஜா சி.சேகர், இசை : மரியா மனோகர், எடிட்டிங் :சுரேஷ் அர்ஸ், ஸ்டண்ட் : அன்பறிவ், வசனம் : எஸ்.டி.சுரேஷ்குமார், ரிலீஸ் : பி.ஜி.பி.எண்டெர்பிரைஸ் பி.ஜி.பிச்சைமணி, பி.ஆர்.ஓ.: புவன் செல்வராஜ் & சதீஷ் [ எய்ம் ]
அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே தொட்டிலில் போட்டுவிட்டு, படிக்கிறான் அண்ணன். தங்கை அழுதால் ஓடோடி வந்து தூக்கி பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள் அண்ணனும் அவனது பள்ளித் தோழர்களும் தோழிகளும். தங்கை வளர ஆரம்பித்ததும் அவளை படிக்க அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்கிறான்.

ப்ளஸ் டூவில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறாள் தங்கை. மருத்துவம் படித்து அந்த மலை கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவளது லட்சியத்திற்கு உதவுகிறது ஒரு கல்லூரி. பள்ளியின் தலைமையாசிரியர் [ சங்கிலி முருகன் ] உதவியுடன் சென்னையிலேயே வேலை செய்து தங்கையின் படிப்புக்காக செட்டிலாகிறான்.
தங்கை நான்காம் ஆண்டு படிக்கும் போது, மார்ச்சுவரியில் வேலை பார்க்கும் மொட்டை ராஜேந்திரன் கும்பலால் கொலை செய்யப்படுகிறாள் தங்கை. தனது உயிரான தங்கச்சியை மலை கிராமத்திலேயே அடக்கம் செய்துவிட்டு, கொலைக்கும்பலை தீர்த்துக்கட்டுகிறான் அண்ணன்.
வழக்கமான பழிவாங்கும் கதை தான். அதை இப்போதைய டிஜிட்டல் கேடுகெட்டதனங்களுடன் முடிச்சுப் போட்டு, கோட்-சூட் போட்ட பொறுக்கிகளை போகியில் போட்டு புதைத்திருக்கிறார் டைரக்டர் விஜயசேகரன். பெண்களின் நிர்வாணத்தை [ அது பொணமாக இருந்தாலும் என்ற பகீர் தகவலுடன் ] விற்று காசாக்கும் கயவர்களின் உலகத்தை, மலை கிராம மக்களின் அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கையுடன் கனெக்ட் பண்ணிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் விஜயசேகரன்.
என்ன ஒண்ணு இடைவேளை வரை 1 மணி நேரம் 10 நிமிடத்தைக் கடத்துவதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் டைரக்டர். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்துவின் கேவலமான காமெடி போர்ஷன், கோட்-சூட் கேடிகள் அங்கிட்டும் இங்கிட்டும் நடப்பது, காரில் சுற்றுவது, பத்தாக்குறைக்கு படுகேவலமான ஹேர்ஸ்டைலில் சினேகனின் ஐட்டம் டான்ஸ், மண்டை வெடித்து மூளை வெளியே வரும் அளவுக்கு மியூசிக் டைரக்டர் மரியா மனோகரின் மகா இம்சையான இசை, இதெல்லாம் நமக்கு பெரும் சோதனைகள்.
இடைவேளைக்குப் பிறகு தான் படம் செம க்ரிப்பாக போக ஆரம்பிக்குது. அண்ணனாக நபி நந்தி, தங்கையாக சுவாசிகா போர்ஷன் மனசை ஆக்கிரமிக்குது. அந்த மலை கிராமத்தை பல கோணங்களில் காட்சிப்படுத்தி மேலும் ஆக்கிரமிக்கிறார் கேமராமேன் ராஜா சி.சேகர். இடைவேளைக்குப் பிறகு தான் எடிட்டர் சுரேஷ் அர்ஸால் சுதாரிக்க முடிந்திருக்கிறது. படத்தில் அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் நபி நந்தியும் அவரது நண்பர்களாக வருபவர்களும் செமத்தியாக நடித்திருக்கிறார்கள்.
கோட்சூட் வில்லன்களைவிட அதகளம் பண்ணியிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். க்ளைமாக்ஸ் குப்பைக்கிடங்கு ஃபைட்டில் பழைய ஸ்டண்ட் நடிகர் ராஜேந்திரனைப் பார்க்க முடிந்தது. அன்பறிவ் பிரதர்ஸின் இந்த ஆக்ஷன் சீக்வென்ஸ் அபாரம். உயர் போலீஸ் அதிகாரியாக வேல ராமமூர்த்தி வருகிறார்.
பிணமாக இருந்தாலும் பெண்ணை நிர்வாணமாக படம் எடுக்கும் பயங்கரம், மார்ச்சுவரியில் ரத்தக்கறையுடன் இருக்கும் ஐஸ்பார்களை கழுவி, ரோட்டோர கரும்பு ஜூஸ் கடைகள், டாஸ்மாக் பார்களில் விற்கும் கொடூரங்களைக் காட்டி அதிர வைத்துள்ளார் விஜய சேகரன்.
டைட்டில் டிசைனிலேயே ஸ்டெதஸ்கோப், துப்பாக்கி, புல்லட் என கண்டெண்டை பளிச்செனச் சொல்லியதற்காகவும் சமூக அக்கறையுடன் அதை போகியாக படைத்ததற்காகவும் டைரக்டர் விஜயசேகரனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
— மதுரை மாறான்