ஆபத்துடன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள் ! அங்குசம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணிப்பாறைப்பட்டி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ரேஷன் கடை, மற்றும் அரசு பள்ளிகள் இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி நடுவப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கும், ரேஷன் கடைக்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அதனால் ஆபத்தை உணராமல் மணிப்பாறைப்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் நடுவப்பட்டியில் உள்ள பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு செல்வதற்கு 500 மீட்டர் தூரம் குறுக்கு பாதையாக ரெயில் தண்டவாளம் வழியாக பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் இப்போது, ரயில் பின்னால் வரும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி காணொளி
ஆபத்துடன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள் !
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாவது; “இதற்கு முன்னால் ரெயில் தண்டவாளத்தை ஒட்டியவாறு அருகே காட்டு பாதை இருந்தது. இந்தப் பாதையை வழக்கமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதை ரெயில்வே நிர்வாகம் முள்வேலி அமைத்து மூடியது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் ரெயில் தண்டவாள இருப்பு பாதையில் நடந்து செல்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிறிய பாதை அமைத்து கொடுக்க வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
–மாரீஸ்வரன்